பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது. இந்த திரைப்படம் உலகளவில் 375 கோடி ரூபாய் வசூலை வெறும் ஒரு வாரத்தில் கடந்து, பல சாதனைகளை முறியடித்து இமாலய வெற்றி படைத்துள்ளது.
‘ஜெயிலர்’ ஒரு தமிழ் மொழித் திரைப்படமாக இருந்தாலும், அதன் தாக்கம் மொழி எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. எந்தவொரு திரைப்படத்திற்கும் கிடைக்காத அளவு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது . ‘ஜெயிலர்’ வெளியான அதே வாரத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தெலுங்கு திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘போலா ஷங்கர்’ திரைப்படமும் வெளியானது.
தெலுங்கில் ரஜினிக்கு நிகரான ரசிகர்கள் சிரஞ்சீவிக்கும் உள்ளனர். எனவே ‘போலா ஷங்கர்’ திரைப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் ‘போலா ஷங்கர்’, 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான ‘வேதாளம்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘போலா ஷங்கர்’ திரைப்படதிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஜெயிலர் படமே அங்கு அதிக வசூல் ஈட்டியுள்ளது.
‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.32 கோடி வசூல் செய்துள்ள நிலையில், ‘போலா ஷங்கர்’ அதே முதல் நான்கு நாட்களில் ரூ.25.22 கோடியை கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முடிசூடா வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் சிரஞ்சீவீயின் படத்தை விட ரஜினிகாந்தின் படம் அதிகளவில் அங்கு வசூல் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் தான் Box Office King என்பதை நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார். இதில் நடிகர் சிரஞ்சீவீ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.