பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. சூர்யாவின் 2d என்டர்டெயின்மென்ட் தான் இப்படத்தை தயாரித்தது.
பொதுவாக குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திரைப்படங்கள் இந்த நவீன காலத்தில் குறைந்துவிட்ட சமயத்தில் கடைக்குட்டி சிங்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல குடும்பப் படமாக அமைந்தது. உறவுகளின் முக்கியத்துவத்தையும் குடும்பங்களின் ஒற்றுமையையும் உணர்த்தும் வகையில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் அமைந்திருக்கும்.
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சத்யராஜ், சூரி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். அதுமட்டுமின்றி மௌனிகா, இளவரசு, சரவணன், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பர்.
ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் மட்டும் வருவார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்ததால் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்தது. குறிப்பாக சண்டக்காரி, அடி வெள்ளக்கார வேலாயி போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சூர்யா தயாரித்து கார்த்தி நடிக்கும் முதல் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். எனவே சூர்யா ரசிகர்களும் இப்படத்தை ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
குடும்பங்களுக்கான கதைகள் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு என்பதை கடைக்குட்டிசிங்கம் உணர்த்தியது.
இப்படத்தின் வெற்றியை கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்துடன் #2YearsofMegaBlockBusterKKS என இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.