மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 93வது பிறந்தநாள் இன்று (ஜூன் 24, 2020) ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் 4000-ற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 5000- ற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் பணிபுரிந்துள்ளார்.
தன் வாழ்வில் 232 புத்தகங்களை எழுதியுள்ள கண்ணதாசன் தன் கவிதைகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எளிய நடையில் இந்து மதத்தின் கொள்கைகளை கூறும் வகையில் அமைந்தது. அது மட்டுமின்றி இயேசு காவியம் என்ற தலைப்பில் ஏசுவின் வாழ்வை கவிதை நடையில் கண்ணதாசன் வழங்கி இருப்பார். கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த கவிஞர் கம்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு கண்ணதாசனை கௌரவிக்கும் வகையில் காரைக்குடியில் மணிமண்டபம் ஒன்றை நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை தியாகராஜ நகரின் ஒரு சாலைக்கு கண்ணதாசனின் பெயரை சூட்டியுள்ளது.
இந்தியாவிலேயே சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை முதலில் பெற்றவர் கண்ணதாசன் தான். 1969-ஆம் ஆண்டு ‘குழந்தைக்காக’ திரைப்படத்தில் பாடல்களை எழுதியதற்காக இவர் தேசிய விருது பெற்றார். அதுமட்டுமின்றி 1980-ஆம் ஆண்டு சேரமன் காதலி என்ற நாவலுக்காக சாஹித்ய அகாதெமி விருதையும் கண்ணதாசன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணிய பாரதிக்கு பிறகு ஒரு கவிஞனை காலத்தால் அழியாத கவிஞனாக மக்கள் கொண்டாடியது கண்ணதாசனையே. அவரது இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடு இல்லாத இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
கண்ணதாசன் தன் சுய சரிதையை ‘எனது சுய சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். கவிதைகள் எழுதுவது மட்டுமின்றி சில படங்களில் கண்ணதாசன் நடிக்கவும் செய்துள்ளார்.
கமல் ஹாசன் நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தில் அமைந்த ‘கண்ணே கலைமானே’ பாடல் தான் கண்ணதாசன் எழுதி வெளிவந்த கடைசி திரைப்படப் பாடல். காலத்தால் அழியாத கவிதைகளையும் பாடல்களையும் கொடுத்த கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.