தமிழக காவல்துறையினரின் உதவியை எளிதில் பெறும் வகையில் சமீபத்தில் 60 சிறப்பம்சங்களுடன் கூடிய காவல் உதவி எனும் ஆப் தமிழக அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களை விரைவாக காவல்துறையினரின் பார்வைக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட வாரியாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களிடம் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வினை அந்தந்த பகுதி காவல்துறையினர் விவரித்து வருகின்றனர்.
மேலும் இக்கட்டான சூழலில் இந்த செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் போதும், காவல் நிலையம் வர வேண்டிய அவசியமில்லை என்றும் இதில் வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இந்த புகார்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் செல்லும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அவசர சூழலில் இந்த ஆப்-பில் உள்ள அவசரம் என்ற சிவப்பு நிற பட்டனை க்ளிக் செய்தால் நமது விவரம் மற்றும் கூகுள் மேப் உதவியுடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் மூலம் நம் இருப்பிடத்தை அறிந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் புகார்களை இந்த ஆப் மூலம் பதிவு செய்யலாம். இந்த செயலியில் காவல் நிலைய முகவரிகள், கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், இணைய நிதி மோசடி, அவசர உதவி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், போக்குவரத்து அபராத கட்டணம், இழந்த ஆவண அறிக்கை, முதல் தகவல் அறிக்கையின் நிலை உள்ளிட்ட அனைத்து இ-சேவைகளையும் பெறலாம் எனவும் காவல்துறை சார்பில் விளக்கியுள்ளனர்.
இது பொதுமக்கள் காவல் துறையை அணுகவதற்கான இன்னும் எளிமையான ஒரு வழியாக வரும் காலங்களில் இருக்கும்.