லியோ படத்தின் நா ரெடி பாடல் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகி இன்று வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த படத்தில் விஜய் Gangster ஆக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸ் போதைப்பொருள் களத்தை மையமாகக் கொண்ட கதைகளைக் கொண்டது என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இருக்கும் விஜய் குடிப்பது போன்றும், புகைப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகளும் அதன்படியே எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் இந்த பாடலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது அவரது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறியுள்ளனர்.
மேலும் சமூகவலைதளங்களில் பலர் அரசியலுக்கு வர ஆசைப்படும் ஒரு நடிகர் இப்படி செய்யலாமா? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் குழந்தைகள் பலரும் நடிகர் விஜய்யின் படங்களை விரும்பி பார்க்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். மற்ற ஹீரோக்களை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். எனவே விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது தவறு என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ஆதரவாளர்கள் பலரும், மற்ற இந்திய நடிகர்கள் யார் சிகரெட் பிடிப்பது போல் நடித்தாலும் அது தவறு கிடையாது. விஜய் நடித்தால் மட்டும் என்ன தவறு? என கேள்வியெழுப்பியுள்ளனர். இதே போல் சர்கார் படத்தின் போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
அதற்கு நடிகர் டி.ராஜேந்தர், “ஒரு நடிகன் படத்தில் ட்ரம்ஸ் வாசிக்க வேண்டுமென்றால் ட்ரம்ஸ் வாசிக்க வேண்டும். தம் அடிக்க வேண்டுமென்றால் தம் அடிக்க வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது? சிகரெட்டை தடை செய்யுங்கள். அதை விட்டுவிட்டு நடிகரை குறை கூறாதீர்கள்.
எந்த நடிகராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் பொதுவெளியில் ரசிகர்களை பார்க்கும் போது சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தால் சொல்லுங்கள். நான் கேள்வி கேட்கிறேன்” என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.