வணக்கம்…
வீட்டுக்காக, ஓடி ஓடி உழைச்சு போடுறவங்களையும், ஆபீஸ் ல நைட்டு பகல் பாக்காம வேல செய்றவங்களையும், ஸ்கூல் காலேஜ் ல function நடந்தாலே ஓடி ஆடி வேல செய்றவங்களையும் எங்க பேர சொல்லி தான் உழைக்குறாங்க னு சொல்வாங்க….
இது பரவால்லங்க, ரோட்ல வண்டி ஓட்ட தெரியாமையும், அத மறிச்சுக்கிட்டு நிக்குறவங்களையும் கூட எங்களை சொல்லி தான் திட்டுவாங்க..
இப்ப எங்களை பத்தி தெரிஞ்சு இருக்கும்… நான் தாங்க மாடு பேசுறேன்…
உங்கள பத்தி எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், எங்களை நல்லா வேல வாங்குவீங்க…
எங்களோட பால் தான் உங்களுக்கு காலை ராத்திரி னு எல்லா நேரத்திலும் வேணும்..
விவசாயம், மாட்டு வண்டி னு எல்லாத்துக்கும் உபயோகப்படுத்திகுவீங்க.. இது மட்டும் இல்ல, சில நேரங்கள்ல சில பேரு எங்களை கறிக்காக வும் பயன்படுத்துக்குவீங்க னு தான் நெனச்சுட்டு இருந்தேன்..
ஆனா, ஜல்லிக்கட்டு கு தட னு சொன்னதும் எழுந்து நின்னு ஒரு குரலா, ஒரே குரலா எங்களுக்காக கொடுத்தீங்க பாருங்க…
ரொம்ப சந்தோசமா இருந்துச்சுங்க…
அப்பதான் எங்களை வளக்குற, எங்க முதலாளியா இருக்குற மனுஷங்களான உங்கள பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்..
நாங்க கட்டைக்காளை, கத்திக்கொம்பன், கழற்சிக்கண்ணன், மறைச்சிவலை, மயிலைக்காளை னு 92 வகையான மாடுகளாவும், காங்கேயம் காளை, மலைநாடு காளை, ஆலம்பாடி காளை, ஒங்கோல் காளைனு 25 வகையுமான காளையினங்களா இருக்கோம்…
விவசாயம், நீர் இரைப்பு, வண்டி ஓட்ட னு எல்லாத்துக்குமே மனுஷங்களுக்கு கூட நிக்குர நாங்க, ஒரு நாள்ல மட்டும் அவங்கள எதிர்த்து நிப்போம்… அந்த எதிர்ப்புக்கு கூட தட போட்டு இனிமே இது நடக்காது, கூடாது னு சொல்றப்ப இது என்ன டா சோதனை… இனிமே இந்த துளிக்கிட்டு சீறிக்கிட்டு ஓடுற ஜல்லிக்கட்டு இருக்காதுன்னு தான் நெனச்சோம்..
அடிமாடு னு சொல்லி கறிக்காகவும், இனப்பெருக்கத்தை தட பண்றதுக்காகவும் என்னென்னமோ பண்ண போறாங்க னு கேள்வி போட்டோம்… எங்க கத்தலையும் கூப்பாடையும் யார் கிட்ட சொல்றது.. மிரட்சியா கத்த தானே முடியும்..
யார் கேக்க போறாங்க னு ஏக்கத்தோட இருந்த நேரத்துல தான், வந்தார வாழ வைக்குற தமிழ் மக்கள் கூடவே இருக்குற எங்களை வாழ வைக்கமாவ போய்டுவாங்க…
இரவு பகல் பாக்காம, சாப்பாடு தண்ணி எடுத்துக்காம, வேல, படிப்பு எல்லாத்தையும் எங்களுக்காக விட்டு, வீட்டை விட்டு, எங்கயோ ஒரு இடத்துல கூடி நின்னு… ஒண்ணா நின்னு… அந்த தடையா நீக்க வச்சு இப்ப வாடா களத்துக்கு னு எங்களை வரவேத்துட்டீங்க…
இந்த முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், எங்களை குடும்பத்துல ஒருத்தரா நெனச்சுதான் வளத்துட்டு இருகாங்க. தினமும் காலை மாலை னு ரெண்டு வேளையும் பசுந்தீவனம், வைக்கோல், அடர்தீவனம்னு கொடுப்பாங்க. 3 மணி நேரத்துக்கு மேல மேய்ச்சலுக்கு கூட்டிட்டு போவாங்க. கொட்டகை அமைச்சு, தீவன தொட்டி கட்டி எங்களை அவங்க புள்ளையா தான் வளத்துட்டு வராங்க.
எங்க பக்கத்து ஊரோட கோவில் காள, ஏரியா ல பெரிய ஆளு அவன். 50 க்கும் மேல ஜல்லிக்கட்டு ல கலந்துக்கிட்ட அவனை யாருமே பிடிச்சது இல்ல… சீறிக்கிட்டு பாயுற அவனோட வீரம் தான் எங்களுக்கு பிடிச்ச விஷயம்.
இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடம்பு முடியாம இறந்துட்டான். அவன் இறந்ததும் அந்த கிராமமே அவனை அலங்கரிச்சு, பூஜ பண்ணி, ஊர் சபை ல வச்சு கும்பிட்டு ஊரே சேர்ந்து அடக்கம் பண்ணாங்க.. சாவுன்னா அப்படி இருக்கனும். உலக நாட்டுல எல்லாம் ஒரு மாட்டுக்கு ஒரு போட்டி தானாம். அந்த போட்டிக்கு அப்பறம் அந்த மாட்ட கொன்னுடுவாங்கலாம். ஆனா நம்ம மண்ணுல தான் எங்களை உசுரா நெனச்சு வளக்குறாங்க.
காலைல ஆத்துமேட்டுக்கு கூட்டிட்டு போய் எங்களை குளிப்பாட்டி விடுறது, மண்ண குத்தி கிழிச்சு சீறி பாய பயிற்சி கொடுக்குறது, கொம்ப சீவி விட்டு, எங்க கிட்ட பேசிக்கிட்டே அலங்காரம் பண்றது னு அந்த ஜல்லிக்கட்டுக்காக எங்களை தயார் பண்றதே அழகு தான் ல…
அப்படி ஒரு நாள் நாங்க ஜெயிச்சு கொடுக்குறது ஒன்னும் பெரிய சொத்து இல்லங்க.. போன வருஷம் நான் ஜெயிச்ச கப்ப என் முதலாளி ஊருக்குள்ள தூக்கிட்டு வரப்ப அவர் முகத்துல இருந்தசிரிப்பு, நடைல இருந்த கர்வம், என்ன நெனச்சு பெருமிதம் னு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. எனக்கும் வீட்ல நல்ல கவனிப்பு.
இதோ, இப்ப இந்த வருஷ ஜல்லிக்கட்டு க்கு நான் தயார் ஆகிட்டேன்.. நீங்களும் ரெடி தானே..? வாங்க களத்துல சந்திப்போம்..