Cinema News Specials Stories

ராகதேவன் தந்த வாசுதேவன்!

80’களில் ஒரே குரல் மெலடியில் குழையும்; அதே குரல் நாட்டு இசையில் குலுங்கும்; மேற்கத்திய இசையில் மின்னும்; சிவாஜிக்கு கம்பீரமாய் பாடும்; ரஜினிக்கும் கமலுக்கும் டூயட் பாடும்; அப்படி ஒரு குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன்.

அவர் பாடகர் மட்டுமில்லை; நடிகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா இப்படி பன்முகங்களைக் கொண்டவர். வாசுதேவன் பிறந்தது தான் மலேசியா; ஆனால் அவரது பூர்வீகம் கேரளா தான்; கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் – அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக இருந்தார்.

மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார்.

Image

இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். ஜி.கே.வெங்கடேசு இசையமைப்பில் “பொல்லாத உலகில் ஒரு போராட்டம்” என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா… என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…” பாடலை எஸ்.பி.பி பாட வேண்டியிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அந்த வாய்ப்பு இவருக்கு வந்தது. இவர் பாடிய அந்த பாடல் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தது.

ராகதேவனின் இசையில் பாடிய பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன. மணிப்பூர் மாமியார் படத்தில் ஆனந்த பூங்காற்று, கன்னிராசியில் சுகராகமே பாடல்களை பழைய பாடல்களின் சாயலில் வித்தியாசமாக பாடியிருப்பார். கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே பாட்டுக்கு முன் அவர் பேசிய டயலாக் அந்த கால காதல் இளசுகளின் மனம் கவர்ந்த டயலாக்காக இருந்தது.

Image

இவர் ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். ஆனந்த் இயக்கிய “மலர்களிலே அவள் மல்லிகை” என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.

மலேசியா வாசுதேவன் 1980’களில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். ராக தேவன் இசை உலகிற்கு தந்த மலேசியா வாசுதேவனின் குரல் காற்றில் எப்போதும் காதல் தொடங்கி கண்ணீர் வரை அத்தனை உணர்வுகளை நமக்கு கடத்திக் கொண்டே இருக்கும்.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.

Add Comment

Click here to post a comment