இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவில் நம் மனம் கவர்ந்த எண்ணற்ற கதாநாயகிகள் திரையில் வலம் வந்துள்ளனர். அப்படி மனம் கவர்ந்த கதாநாயகிகளுள் ஒரு சிலர் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். அவ்வாறு ஒரு சில படங்களில் நடித்து கோலிவுட்டில் இருந்து Miss ஆகும் சில திறமையான நடிகைகளின் பட்டியலை கீழே காணலாம்.
1. ரியா சென்
1999-ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் ‘தாஜ் மஹால்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். அப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை இவர் பிடித்தார் என்றே சொல்லலாம். இவரை மேலும் பல தமிழ் படங்களில் காணலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அரசாட்சி’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியதோடு சரி, அதற்கு பின் எந்த ஒரு தமிழ் படத்திலும் இவரை காண முடியவில்லை. ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு என பல மொழிகளில் தொடர்ந்து நடித்த இவர் தமிழ் படங்களில் மட்டும் 2004-ஆம் ஆண்டிற்கு பின் நடிக்கவில்லை.
2. ரிச்சா பல்லோட்
தளபதி விஜயின் ‘ஷாஜஹான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ரிச்சா பல்லோட் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏன் நிறைய படங்கள் நடிக்கவில்லை என்பது சினிமா ரசிகர்கள் பலரின் சந்தேகம். ஷாஜஹான் மட்டுமின்றி அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், சம்திங் சம்திங் ஆகிய படங்களிலும் ரிச்சா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு பின்னும் இன்று வரை எந்த தமிழ் படத்திலும் ரிச்சா நடிக்கவில்லை.
3. ரிங்கி கன்னா
மஜ்னு திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த ரிங்கி கன்னா, அந்த ஒரு படத்தை தவிர வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்காதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இன்றும் ‘முதல் கனவே’ பாடலை நாம் கேட்கும்போதெல்லாம், அப்பாடலில் நடித்துள்ள ரிங்கி தான் நமக்கு ஞாபகத்திற்கு வருவார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் இவர் நீண்ட நாட்கள் தொடர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை மட்டுமே திரைத்துறையில் இருந்த இவர் மொத்தமாக 9 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
4. மானு
இவரை மானு என்று அறிமுகப்படுத்துவதை விட ‘திலோத்தம்மா’ என்று அறிமுகப்படுத்தினால் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவர் யாரென தெரியும். தல அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய வெற்றிப்படமான ‘காதல் மன்னன்’ திரைப்படத்தின் கதாநாயகி தான் மானு. இப்படத்தில் இவர் ஏற்று நடித்த ‘திலோத்தம்மா’ கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் கதாபாத்திரமாக இருக்கிறது. இப்பேற்பட்ட வெற்றிப்படத்தில் நடித்த மானு தன் திரையுலக வாழ்க்கையில் வெறும் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவல் என்றே சொல்லலாம். காதல் மன்னன் திரைப்படத்திற்கு பிறகு 2014-ஆம் ஆண்டில் இவர் நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ திரைப்படம் தான் இவரது திரையுலக வாழ்க்கையில் இவர் நடித்த கடைசி படமாகும்.
5. பிரியங்கா கோத்தாரி
2003-ஆம் ஆண்டு மாதவன் நடித்த ‘ஜே ஜே’ திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியங்கா கோத்தாரி, தன் Cute ஆன நடிப்பினால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்த பிரியங்கா தமிழ் படங்களில் அதிகம் நடிக்கவில்லை. கடைசியாக 2010-ஆம் ஆண்டு வெளிவந்த கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் ‘வாடா வாடா பையா’ பாடலுக்கு நடமாடியதோடு தமிழ் சினிமாவில் இவர் Re-entry கொடுக்கவே இல்லை.
6. யாஸ்மின் பொன்னப்பா
தியாகராஜா குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் அறிமுகமான யாஸ்மின் பொன்னப்பா நடித்த ஒரே படமும் அது தான் என்பது சினிமா ரசிகர்களுக்கு ஒரு திடுக்கிடும் தகவலே. ஏனெனில் அப்படத்தில் அவர் நடித்த ‘சுப்பு’ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை தத்ரூபமாக கையாண்ட நடிகை யாஸ்மின் இன்னும் நிறைய Experimental Role-களில் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
7. வசுந்தரா தாஸ்
பிரபல பின்னணி பாடகரான வசுந்தரா தாஸ் இரண்டு தமிழ் படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ளார். உலகநாயகன் கமலஹாசனின் ‘ஹே ராம்’ மற்றும் தல அஜித்தின் ‘சிட்டிசன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்த வசுந்தரா, அதற்கு பின் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிகையாக தென்படவில்லை. இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த இரண்டு படங்களிலுமே தன் திறமையான, அழகான நடிப்பை வசுந்தரா வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 2007-ஆம் ஆண்டு வரை வசுந்தரா நடித்தது குறிப்பிடத்தக்கது.
8. ரோஷினி
குணா திரைப்படத்தில் அபிராமியாக நம் மனதில் பதிந்துள்ள ரோஷினி அப்படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. குணா திரைப்படத்தில் தன் திறமையான நடிப்பை இவர் வெளிப்படுத்தியிருப்பார். இன்றும் சினிமா ரசிகர்கள் பலருக்கு ‘அபிராமி’ என்று சொன்னாலே இவரது ஞாபகம் தான் வரும். இவர் மேலும் படங்களில் நடிக்காமல் போனது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயமே.
இவர்கள் மட்டுமின்றி மேலும் பல நடிகைகள் ஓரிரு தமிழ் படங்களில் மட்டுமே நடித்து கோலிவுட்டிலிருந்து காணாமல் போயுள்ளனர். திறமையான நடிகைகள் நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.