ஒரு படத்தில் இந்த நடிகர் நடிக்கவில்லை, உண்மையில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சில படங்களை பார்த்ததும் நாம் கூறுவோம். ஆனால் இதுவரை மோகன்லால் நடித்த எந்த படத்தை பார்த்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பதாகத்தான் தோன்றும்.
அது அவருக்கு கை வந்த கலை, ஏனெனின் அவர் ஒரு கை தேர்ந்த நடிகர். அதற்கு அவரது படங்கள் அனைத்தும் சாட்சி. தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் போல மலையாளத்தில் மோகன்லால். இதுவரை 300க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எப்படி ரஜினி, கமல் படங்களை பார்த்து வளர்ந்த பலர் இந்த தலைமுறை தமிழ் சினிமா நட்சத்திரங்களாக இருக்கிறார்களோ, அப்படி மோகன்லாலை பார்த்து வளர்ந்தவர்கள் மலையாள சினிமாவில் இந்த தலைமுறை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். ஏன் அவரது மகன் பிரணவ் மோகன்லால் கூட நடிக்க வந்துவிட்டார்.
இன்றும் அவர் மட்டுமல்லாது, அவரது படங்களும் கதாபாத்திரங்களும் பார்ப்பதற்கு இளமையுடனும் துடிப்புடனும் வசூலை குவிப்பதாகவும் இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணமாக ‘த்ரிஷ்யம்’ , ‘Bro daddy’ படங்களை சொல்லலாம். சமீபத்தில் OTT-யில் வெளியாகி இந்தியா முழுக்க அனைவராலும் கொண்டாடப்பட்டது. மோகன்லாலின் அதிதீவிர ரசிகரான ப்ரித்வி ராஜ் இப்படத்தை இயக்கி நடித்தார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் 2019ல் வெளியான Lucifer திரைப்படமும் மாபெரும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மோகன்லால் நடிப்பால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பலர். அந்த காலத்திலேயே இந்திய ரசிகர்கள் அனைவரிடமும் மலையாள திரைப்படங்களை கொண்டு சேர்த்ததில் மிக முக்கிய பங்கு மோகன்லாலுக்கு உண்டு. இன்று வரை அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களையும் முதல் நாளே பார்த்து விட காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம் அனைத்து மொழிகளிலும் அவருக்கு உண்டு.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இருவர், சிறைச்சாலை, ஜில்லா, உன்னைப் போல் ஒருவன், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அனைத்து படங்களிலும் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்திருப்பார். குறிப்பாக சிறைச்சாலை, இருவர், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது.
ஒரு சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துக் காட்டிய மோகன்லால், பல்வேறு விருதுகளையும் நடிப்புக்காக வென்றுள்ளார். எப்படி நடிப்பில் வரும் தலைமுறையினருக்கு உதாரணமாக விளங்குகிறாரோ அதேபோல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
விஸ்வசாந்தி எனும் அறக்கட்டளை மூலம் கேரளாவில் பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். அதில் பல தன்னார்வலர்களையும் இணைத்து மக்களுக்கு உதவி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்துள்ளது.
தற்போது இந்த அறக்கட்டளையின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். கேரளாவின் பழங்குடியின் கிராமமான அட்டப்பாடியில் இருந்து 20 குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அடுத்த 15 வருடங்களுக்கான படிப்பு மற்றும் அது தொடர்பான செலவை ஏற்றுள்ளனர். இந்த 15 வருடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பெற்றோராகவும் ஆசிரியராகவும் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களிலும் இது போன்று குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிக்க வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படியாக திரைத்துறையில் மட்டும் சூப்பர் ஸ்டாராக இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூகத்திற்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து ரியல் சூப்பர் ஸ்டாராக, பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வரும் மோகன்லால், உண்மையில் மலையாள திரையுலகின் பொக்கிஷம் மட்டுமல்ல, கேராளாவிற்கும் பொக்கிஷம் தான்.
இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.