அழகிய வெண்ணிலவு போல இருட்டில் மெல்லிய ஒளி அம்மா, அவள் பூமியில் பறக்க மாட்டாள், அவளால் தான் இந்த பூமி சற்றே பறந்து கொண்டுள்ளது, ஆயிரம் கவிதைகள் அவளை பற்றி இருப்பினும்… ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் தூய்மை போல் அவளை பற்றி எழுத அவ்வளவு இருக்கிறது. அனைத்தும் எழுத இப்பிறவி போதாது.
அந்த பால் நிலவாகிய தாயையும், அந்த வெண்மையான தாய்மையையும் வணங்கி வரம் கேட்டேன். அந்த வரம் மீண்டும் ஐந்து வயது சிறுவனாக மாறி, உன்னிடம் கொட்டு வாங்க ஆசை என்பது தான். ஏன்?! , அடுத்த பிறவியில் உனை மகளாக பெறுவதை விட உனக்கு மீண்டும் மகனாக பிறக்க வேண்டும், நீ என்னை வளர்த்து போல, உன்னை என்னால் வளர்க்க முடியாது…
நீ என் மேல் கொண்ட காதல் போல உனக்கு நான் குடுக்க முடியாது. பிறவிகள் தாண்டியும் உன் மகனாக உன் பிள்ளை. ஒரு பெண் இங்கு அக்காவாக, தங்கையாக, தோழியாக, காதலியாக பல்வேறு வேடங்களில் இருந்தாலும், நமக்கு கிடைத்த தேவதையாக தாயின் பாத்திரத்தில் வருகிறாள். இந்த ஒருநாளில் அவர்களின் சந்தத்தை பாடிவிட முடியாது.
பல்வேறு இடங்களில் அடிமையாக்கப்பட்டு, ஆசைகள் கலைக்கப்பட்டு, இருட்டிலும் , வீட்டின் ஓரத்திலும் ஒடுக்கப்பட்டு, பாசம், கலாச்சாரம், காதல், என ஏமாற்றப்பட்டு தாய் என்னும் உருவத்தில் மீண்டும் கடவுளாக்கப்பட்டு ஓரத்தில் சிரிக்கிறாள் அந்த பட்டாம்பூச்சி.
சிறு வயதில் இருந்து அந்த தேவதை… அதாவது அம்மா சொல்லிய கதைகளும், அவள் முகமும், அவளின் புடவை வாசமும், வறுமையிலும் பசியிலும் என் வயிற்றை வாட விடாத அந்த அன்புக்கரசியின் காதலையும்
இறுதி நாள் வரை மறக்கமாட்டேன், இருந்தும் இன்று ஒரு நாள் மட்டுமல்லாமல் என்றென்றும் தாயை கொண்டாடுவோம்.