இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவாி 24ம் தேதி பெண் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. இந்தியா வளா்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் 68.4 சதவீத பெண்குழந்தைகளே பள்ளி படிப்பை பெறுகின்றனா். இந்த விகிதம் ஆண் குழந்தைகளை விட குறைவு என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 55 சதவீத பெண் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெண்குழந்தைகள் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக குழந்தை திருமணம் அமைகின்றது. அதன்படி இந்தியாவில் 26.8 சதவீதம் பெண் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டு குழந்தை திருமணத்திற்கு ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதில் அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 40 சதவீத குழந்தை திருமணம் நடைபெறுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இனியும் பெண் குழந்தைகள் மீதான அநீதி தொடராமல் பெண் குழந்தைகளை பாதுகாப்போம். சட்டங்கள் மாறினாலும், புதிதாகச் சட்டங்கள் இயற்றினாலும் ஒதுக்கீட்டில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது பெண் வாழ்வு.
சிறு வயதில் தொலைக்காட்சியில், “பொண்ணாப் பொறந்ததாலே பல பொறுப்பு வந்தது மேலே” என்று பெண் விடுதலைக்கான செய்திகள் அடங்கிய பாடலை, வண்டி இழுத்துக்கொண்டே ராஜீவ் பாடுவது ஒலிபரப்பாகும். டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கம் உலகெங்கும் கேட்கும் நிலையிலும், இப்படியொரு தினத்தைப் பற்றி எழுதும் பொழுது பாரதியின் பாடலைச் சொல்லி சொல்லி உள்ளம் அழுது ஊமையாகிறது.
‘உயிரைக் காக்கும்; உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக்கு உயிராய் இன்பமாகிடும்;
உயிரும் இந்தப் பெண்மை இனிதடா;
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே’
மகாகவியின் வாக்குப் பலிக்கட்டும். திக்கெட்டும் பெண்மை ஒளிரட்டும். தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்.