அறுபத்தி நான்கு படங்களுக்கு இயக்குனர், இருபத்தி ஒரு படங்களில் நடிகர், 9 படங்களுக்கு எழுத்தாளர், நான்கு படங்களின் தயாரிப்பாளர், ஒரு படத்தில் பாடகர் என பன்முகம் காட்டுகின்ற பிரபலம் பீதாம்பரம் வாசு என்கிற பி. வாசு. தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர்.
திடீரென்று சினிமா உலகில் நுழையவில்லை வாசு. இவரின் தந்தை பீதாம்பரம் புகழ்பெற்ற கலைஞர்கள் என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர் போன்ற திரைப் பிரபலங்களின் ஆஸ்தான மேக்கப் மேனாக விளங்கினார்.
30 ஆண்டு காலம் ஒப்பனை கலைஞர்களின் சங்கத்தில் தலைவராகவும் இருந்து பின்னர் படத் தயாரிப்பாளராக மாறினார்.
இப்படி தந்தையின் வழியில் சினிமா உலகத்தோடு நெருக்கம் கொண்ட பி.வாசு சந்தான பாரதியுடன் இணைந்து பாரதி வாசு என்ற பெயரில் 1981இல் சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
அந்த இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் “பன்னீர் புஷ்பங்கள்”. பள்ளி பருவ காலங்களில் வரும் காதலையும், பள்ளி ஆசிரியரின் பொறுப்புணர்வையும் சொன்ன “பன்னீர் புஷ்பங்கள்” மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. முதல் படத்தின் பிரமாண்டமான வெற்றி அந்த இரட்டை இயக்குனர்களை அடுத்தடுத்து படம் பண்ண தூண்டியது.
தொடர்ந்து ஐந்து படங்கள் சந்தான பாரதியுடன் இணைந்து இயக்கிய பி.வாசு தனியாகப் படமெடுக்க முடிவு எடுத்தார். நமது இயக்குனர் பி.வாசு 1986 முதல் தனித்து இயங்க ஆரம்பித்து கன்னட திரையுலகில் கால் பதித்தார்.
தொடர்ந்து ஐந்து கன்னடப் படங்கள், ஒரு மலையாள படம் என இயக்கிய வாசு தமிழில் தனியாக இயக்கிய முதல் படம் 1988 ஆம் ஆண்டு பிரபு கதாநாயகனாக நடித்த “என் தங்கச்சி படிச்சவ” படம். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் பிரபுவுடன் இணைந்து “பிள்ளைக்காக” படத்தை வாசு இயக்கினார். அந்தப் படத்தில் தான் ஒரு பாடலையும் வாசு பாடியிருக்கிறார்.
பிரபு மற்றும் குஷ்பு நடிப்பில் வெளிவந்த “சின்னத்தம்பி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இசைஞானியின் இசையும், கவுண்டமணியின் நகைச்சுவையும், சுவாரஸ்யமான திரைக்கதையும் படம் பிரமாண்ட வெற்றி அடைய உதவியது.
2005 இல் வெளிவந்த சந்திரமுகி 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. 2019 வரை தொடர்ந்து இயக்குனராக தன் படைப்புகளை கொடுத்து வந்தார் பி.வாசு.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
பல வெற்றிப்படங்களை இயக்கி குவித்த இயக்குனர் பி.வாசுவுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by K.S.Nathan