பத்மினியில் இருந்து ஆரம்பித்தது தான் இந்த சகாப்தம் இன்று லேடி சூப்பர் ஸ்டார் வரை தொடர்கிறது .
பெண்களை திரையின் ஒரு அம்சமாய் ,காட்சிப் பொருளாய் கதைப்படுத்தாத கதைக்களங்கள் கொண்ட இவர் கால படங்கள் தான் முதலில் இந்திய சினிமாவில் அடியிட்டன .
இன்று நடிப்பு என்பது ஒரு கலை ஆனால் நடிக்க வேண்டுமெனில் ஆடலும், பாடலும், மொழியறிவும் மற்ற பிற கலைகளும் அதன் உள்ளடங்கியாக வேண்டும் என்ற தேவையே இல்லை. ஆனால் இன்றைய சினிமாவின் பாணிக்கு முற்றிலும் முரண்பாடாய் அமைந்தது அன்றைய திரையுலகின் வழக்கம்.
நடனம், மொழியறிவுடை கூடிய வசன உச்சரிப்பு, இவை அத்தியாவசியமானவை. கண்களிலே காவியங்களை சொல்லும் நாட்டிய பேரொளி பத்மினி கலையின் மற்ற பிற அங்கங்களையும் சிறுவதிலேயே தனதாக்கி கொண்டார்.
சபைகளில் நாடகம் நடிக்கவும் தொடங்கினார் . பத்மினியின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம். இதனாலேயே இவரும் இவரது சகோதரிகளான லலிதா ,ராகினி மூவரும் திருவாங்கூர் சகோதரிகளாய் அறியப்பெற்றனர் . திருவனந்தபுர அரண்மனையின் ஆஸ்தான குரு கோபிநாத் அவர்களிடம் 4 வயதிலிருந்தே நாட்டிய பயிற்சி பெற்ற இவர் 9 வயதில் 9 கெஜ சேலை கட்டி தனது அரங்கேற்றத்தை முடித்தார்.
பாரிஜாத புஷ்கரணம் என்னும் நாடகத்தில் நடித்த பத்மினி நாரதர் வேஷம் தரித்த போது அதை கண்ட N.S.K தேவலோகத்தில் நாரதர் கூட பேரழகாய் இருக்கிறார் என பாராட்டி பரிவட்டம் காட்டினார். பரம்பரையான கலை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல பத்மினி சகோதரிகள், அவர்களை உற்சாகப்படுத்தி கலை துறையில் கோலோச்ச செய்தது அவர்களின் பெரியம்மா தான். திருவாங்கூர் சகோதரிகளுக்கு இன்னல் வந்ததே இல்லை .
ஒரே மாதிரி உடைகள், அச்சு பிசகா பாவனை, பிசிர் இல்லா நடனம் என ஒற்றுமை மிளிர திரையில் அசத்தினார். பத்மினியின் ஆரம்ப கால திரை பிரவேசம் நடனம் சார்ந்ததே ஆகும். கதாநாயகியாகவோ, ஆண்களுடன் ஜோடி சேரும் எந்த கதை கலத்திலும் நடிக்க பத்மினியின் குடும்பம் அவரை அனுமதித்ததே இல்லை. தமிழ் திரையுலகின் முதல் பிரசித்தி பெற்ற நடன மங்கை இவர் தான் . இவரது நடனம் மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை கூட நிர்ணயிக்க கூடிய அளவு பேராற்றல் பெற்றது.
”ஏழை படும் பாடு” படத்தில் கதாநாயகனுடன் நடிக்க அவருக்கு குடும்பத்தின் ஒப்புதல் இல்லாததால் கதாநாயகனுக்கு பதிலாக அவரது தங்கை ராகினி ஆண் வேடமிட்டு நடித்து படம் முடிக்கப்பெற்றது. பின்னர் சிவாஜியின் நம்பர் 1 ஜோடியானார் பத்மினி. சிவாஜியுடன் பத்மினியின் ஜோடி பொருத்தம் பேசப்படும் வரை பத்மினியுடன் நடித்த நாயகர்கள் அவருக்கு பொருத்தம் சேராமல் படங்கள் வீண்போயின.
பராசக்தி , பணம், இல்லற ஜோதி என சிவாஜியுடன் பின் இணை சேர்ந்த படங்கள் ஹிட் அடித்தன. கடிகாரம் கூட சாவி கொடுத்தால் தான் ஓடும், ஆனால் பத்மினிக்கு அந்த வாய்ப்பு கூட கிட்டவில்லை, உழைப்பிற்கு நேரம் கொடுத்து ஓயாமல் ஓடினார். தூக்கம் இல்லா இரவுகளும் அவர் கலைப் பயணத்தின் துணைகளாயினர்.
சிவாஜிக்கு நிகராக அந்த காலத்து வில்லன் நடிகர்களே வசனம் பேசி திரையில் எதிர்த்து நிற்க பயந்த நேரத்திலும் கூட சிவாஜிக்கு எதிர் நின்று பேசி கோவம் கொண்ட நடன மங்கை தில்லானா மோகனாம்பாள் என தில்லாக நடித்தார் பத்மினி. நவரத்தினங்களாக சாவித்ரி , பானுமதி, வைஜெயந்தி, மாலா என படை திரண்டு தெலுங்கு நடிகைகளின் போட்டி இருந்தும், தன் திறமையால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காஞ்சனை நாட்டிய பேரொளி பத்மினி.
ஆறு வகை நடனங்களில் பிரசித்தி பெற்ற பத்மினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள் மட்டுமன்றி ஹிந்தியிலும் ராஜ்கபூருடன் ஜோடி சேர்ந்து சொக்கும் பௌர்ணமியாய் ஜொலித்தார். திருவிதாங்கூர் சகோதரிகள் நடித்த நாடகங்கள் இந்திய பிரதமர் நேருவின் விருப்பமான நாடகங்கள். அவைகளை பார்க்கும்போது நேரு தன்னை மீறி ஆர்ப்பரிப்பாராம் .
திருமணம் அவரது திரைவாழ்க்கைக்கு இடைவெளி கொடுத்தாலும் முற்றுப்புள்ளி ஆகவில்லை, தனது 50 வயது தொடர்ந்தும் அவர் அதே பேர் ஆற்றலோடு நடிப்பால் ஹிந்தி டெலிவிஷன் நாடகங்களில் நடித்து வந்தார். நாட்டிய பேரொளி என அங்கீகரிக்கப்பட்டாலும் பிரியமானவர்கள் மனத்திலும் அன்பிலும் இன்றும் என்றும் நீங்கா இடம் பிடித்த பப்பிம்மா என்னும் பத்மினி அவர்களை அவரது பிறந்த நாளில் மானசீகமாய் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறது சூரியன் FM.
Article by RJ Akshaya