அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து, இசை, வணிகம் என ஒவ்வொரு துறையிலும் கோலோச்சிய மகா சக்கரவர்த்திகள் ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்து இருப்பார்கள்.ஆனால் அவர்களின் வாரிசுகள் அந்த அளவுக்கு புகழ் அடைந்தார்களா என்ற கேள்வியை முன்வைத்தால் பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் விடையாகக் கிடைக்கும். குறிப்பாக சினிமா துறையில் வாரிசுகள் தங்களது தந்தையை போன்று புகழ் அடைந்திருக்க மாட்டார்கள். அதுவும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அத்தகைய பெயரைப் பெற்று இருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒருவரைத்தான் இன்று நாம் பேசப் போகின்றோம்.
Success என்ற வெற்றி வார்த்தையோடு தன் சினிமா பயணத்தை தொடங்கி நடிப்பின் உச்சத்தை தொட்டு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புதல்வன் என்ற பெருமையோடு சினிமாவில் அறிமுகமான பிரபு, தன் தந்தையின் பெயரைக் காப்பாற்றும் வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
மிகப் பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் நமது நாயகன் பிரபுவுக்கு நடிப்பின் மேல் ஏனோ ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தனது சித்தப்பா வீசி சண்முகத்தின் சரியான வழிகாட்டுதல் படி நடிப்பைத் தேர்ந்தெடுத்தார் .1982 சி.டி.ராஜேந்திரன் இயக்கத்தில் தனது தந்தையுடன் இணைந்து பிரபு சினிமாவில் தோன்றியது சங்கிலி என்ற படம்.
முதல் படத்திலேயே புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்ற பழமொழிக்கேற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரபு. சங்கிலி படம் பிரபுவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 6 படங்களில் பிரபு நடித்திருந்தார். குறிப்பாக கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த “கோழி கூவுது” படம் பிரபுவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதே நேரத்தில் நடிகர் திலகம் தனது மகன் பிரபுவை சினிமாவில் தனியாக விட்டு விடவில்லை. தாய் பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாப்பது போல் மிக கவனமாக பிரபுவை படங்களில் நடிக்க வைத்தார். 19 படங்களில் தந்தையும் மகனும் இணைந்து நடித்தார்கள்.
அப்பாவின் நடிப்பை வெகு அருகில் இருந்து கவனித்து தானோ என்னவோ மிக மிக லாவகமாகவும் இயல்பாகவும் நடிப்பு வந்தது. 1985 வருடம் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த வருடத்தில் தான் இயக்குனர் ஆர்.பாண்டியராஜனின் முதல் படமான கன்னிராசியில் பிரபு கதாநாயகனாக நடித்தார். முழுநீள நகைச்சுவை படத்தில் நகைச்சுவையாகவும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்தார்.
அந்த ஆண்டில் 6 படங்களில் நடித்த பிரபு அடுத்த ஆண்டில் அதாவது 1986 ல் அரை டஜன் படங்களில் நடித்தார், அதில் இரண்டு படங்கள் பெரும் வெற்றி பெற்றது. முதலாவது மணிவண்ணன் இயக்கத்தில் கலைஞரின் வசனத்தில் வெளிவந்த “பாலைவன ரோஜாக்கள்” . இரண்டாவது படம் ஜி.எம்.குமார் இயக்கத்தில் வெளிவந்த அறுவடைநாள் படம்.
1987-ம் வருடம் பத்து படங்களில் நடித்த பிரபு சிறந்த கமர்சியல் நடிகராக வலம் வந்தார். 1988ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அக்னி நட்சத்திரம் படம் பிரபுவை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது. இப்படி அடுத்தடுத்த படங்கள் பெரும்பாலும் தொடர் வெற்றிகளை பெற்று இருந்த நேரத்தில்தான் 1991இல் பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்தது சின்னத்தம்பி படம்.
அதுவரை தமிழ் படங்கள் பெற்றிடாத பெரும் வசூல் சாதனையை படைத்தது சின்னத்தம்பி. அதற்குப் பிறகு பிரபு ஸ்டார் நடிகராக பதவி உயர்வு பெற்றார். ரஜினி, கமலுக்கு அடுத்து பிரபு என்ற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு சின்னத்தம்பியின் வெற்றி அமைந்திருந்தது. வெகுவிரைவில் இளைய திலகம் பிரபு 100 படங்களை தொட்டிருந்தார் .அவரது 100வது படம் ராஜகுமாரன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இளைய திலகம் பிரபு காலத்திற்கு ஏற்றார்போல் குணச்சித்திர வேடங்களிலும் இன்றுவரை தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ்நாடு அரசின் விருதுகளை மூன்று முறை பெற்றுள்ளார். இளையதிலகம் சினிமாவில் மட்டும் நடித்து நிஜத்தில் நடிக்காமல் எப்போதும் மாறாத புன்னகையுடன் வலம் வரும் சிறந்த நடிகர்/ சிறந்த மனிதனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் சூரியன் FM பெருமை கொள்கிறது.