நேற்றைய FIDE உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தாலும், இதற்கு முன்பே பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அது எந்த போட்டி தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
ஒரு தலை சிறந்த வீரர் ஒரு போட்டியில் வெற்றி பெறுவது சாதாரணமான நிகழ்வு. அந்த இடத்தை தக்க வைப்பதற்காக அவர் தொடர்ந்து வெற்றி பெற்றே தீர வேண்டும். ஆனால் அதே தலை சிறந்த ஒரு வீரரை புதிதாக வந்த ஒருவர் போட்டியில் வீழ்த்துவது என்பது கடினம்.
தலைசிறந்த வீரர் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக இருக்கும். புதிதாக அந்த இடத்திற்கு போட்டி போடுபவருக்கு அந்த அழுத்தம் இருக்காது. வெற்றி பெற்றால் மகுடம். இல்லையென்றால் அது வெற்றிக்கான ஒரு கடுமையான போராட்டமாக மட்டும் முடிந்து விடும்.
அப்படித்தான் நேற்று நடைபெற்ற FIDE உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் வெற்றிக்காக கடுமையாக போராடி வீழ்ந்தார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா. ஒட்டுமொத்த இந்தியாவும் 18 வயதே ஆன இளம் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை தோள் மேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த பதின் வயது சிறுவனை நோக்கி திரும்பியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு வரலாறு படைப்பது என்பது ஒரு புதிய விஷயமல்ல. சிறு வயதில் அக்கா செஸ் விளையாட்டு பயிற்சிக்கு செல்வதை பார்த்து இவருக்கும் ஆர்வம் உண்டாகி செஸ் பயிற்சிக்கு சென்றுள்ளார். தன்னுடைய 5 வயது முதல் செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.
இடைவிடாத தொடர் ஈடுபாடு காரணமாக தனது 7வது வயதில், 8 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அந்த பட்டத்தை வென்றார். அடுத்தபடியாக தனது 10வது வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று உலகம் முழுக்க பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
கடந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெற்ற ‘Airthings Masters rapid online chess tournament 2022’-ல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 16 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும் ஒருவர். அந்த போட்டியில் தான், தனது 8வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இந்த தொடரில் பிரக்ஞானந்தா மொத்தம் விளையாடிய 7 சுற்றுகளில் 1 வெற்றி, 4 தோல்விகள் மற்றும் 2 சமன்.
இறுதியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர் தோல்வி. இந்த நிலையில் தான் தனது 8வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயது மிக்க மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். தொடர் தோல்வி மற்றும் உலகின் நம்பர் 1 வீரருடன் மோதல் உள்ளிட்ட காரணங்களால் கார்ல்சனே அந்த போட்டியில் வெற்றிபெறுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த சமயத்தில் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
கார்ல்சனுக்கு எதிராக கறுப்பு நிற காய்களுடன் விளையாடத் தொடங்கிய பிரக்ஞானந்தா, தனது திறமையான மற்றும் நிதானமான ஆட்டத்தால் 39ஆவது நகர்த்தலில் கார்ல்சனை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றினார். இது உலக அரங்கில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பெரும்பாலும் வெள்ளை நிற காய்களுடன் முதலில் ஆட்டத்தை தொடங்குபவர்களுக்கே வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கும் நிலையில் பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி அனைத்து போட்டியாளர்களுக்கும் புது உத்வேகத்தை அளித்தது. இந்த நிலையில் இந்த வருடம் FIDE உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இருவரும் மீண்டும் மோதியுள்ளனர்.
மீண்டும் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்தி இந்தியாவிற்கு பெரிய அளவில் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்த்த நிலையில், கார்ல்சன் வெற்றியை கைப்பற்றினார். இளம் ரத்தம் பயம் அறியாது என்பதற்கேற்ப பிரக்ஞானந்தா இறுதி வரை கடுமையாக போராடினார்.
ஏற்கனவே ஒருமுறை பிரக்ஞானந்தாவிடம் தோல்வியடைந்ததிலிருந்து அவருக்கு கிடைத்த அனுபவம் மற்றும் அவரது வயதுக்கு அவருக்கு உள்ள அனுபவத்தின் மூலம் பிரக்ஞானந்தாவை இந்த முறை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளார் கார்ல்சன். எனினும் இனிவரும் நாட்களில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரராக வலம் வருவார்.