பி.பி.எஸ் என்று அன்போடு அழைக்கப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ் தென்னிந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்ற பின்னணி பாடகர் மற்றும் இசைக்கலைஞர். தன்னுடைய வசீகர பாடல் வரிகளில் இனிமையை கூட்டி ஒரு புதிய பாணியை கொண்டு வந்தவர்னு சொல்லலாம். இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என்று 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய பெருமை பெற்றவர்.
அந்த காலத்துல தன்னுடைய இனிமையான குரலால் காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்த ஒரு அற்புத கலைஞர். தமிழில் அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம், மயக்கமா கலக்கமா, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கின்றன.
திரைப்படத் துறையில் கிட்ட தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காக்கிநாடா என்ற இடத்தில் பனீந்திரஸ்வாமி கிரியம்மாவிற்கு மகனாக பிறந்தார். அவருடைய அம்மா ஒரு இசை ஆர்வலராக இருந்ததனால் அந்த தாக்கம் பி.பி.ஸ்-ஐ இசையில் ஈடுபட வைத்தது. ஆனா அவருடைய பெற்றோர் அரசு பணியாளராக்க விரும்பி பி.காம் படிக்க வைத்தார்கள். பிறகு வழக்கறிஞராக்க விரும்பி சட்டக்கல்லூரியில் சேர்த்தார்கள்.
சட்ட கல்வி பயில்வதை விட்டுட்டு இசை துறையை தேர்ந்தெடுத்து முறையாக சங்கீதம் படிச்சு 1951-ல ஜெமினி தயாரித்து வெளிவந்த மிஸ்டர் பாரத் ஹிந்தி படத்துல தன்னுடைய முதல் பாடலான கனகிபாரது என்ற பாடலை பாடினார். பிறகு, தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் “சிந்தனை செய் செல்வமே” என்ற பாடலின் மூலம் அறிமுகமான அவர், பாசமலரில் “யார் யார் யார் இவர் யாரோ”, பாவ மன்னிப்பில் “காலங்களில் அவள் வசந்தம்”, எதிர்நீச்சலில் “தாமரைக் கன்னங்கள், தேன்மலர் கிண்ணங்கள்”, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் “காத்திருந்த கண்களே”, அடுத்த வீட்டுப் பெண்ணில் “கண்ணாலே பேசி பேசி கொல்லாதே” மேலும் “மயக்கமா?கலக்கமா? மனதிலே குழப்பமா?”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “ரோஜா மலரே ராஜ குமாரி”, போன்ற மனதை உருக்கும் பாடல்களைப் பாடி, அழியா புகழ்பெற்றார்.
சுசிலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஷ்கர் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ள இவர், தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, நாகேஷ் போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களுக்குப் பின்னணிக் குரலாய் பாடியுள்ளார். கர்நாடக இசை மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகருக்கு நிகராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சிறந்த பின்னணிப் பாடகராக முத்திரைப் பதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “கஸல்” பாடல்களை அழகாகப் பாடுவதில் பெயர்பெற்று விளங்கினார்.
சினிமாவில் இவருடைய கலை சேவையைப் பாராட்டி, தமிழக அரசு ‘கலைமாமணி விருது’ வழங்கி கௌரவித்தது. கர்நாடக அரசின் மதிப்புமிக்க ‘கன்னட ராஜ்யோத்சவா’ விருது வழங்கப்பட்டது. இப்படி பல விருதுகளை பெற்றுள்ளார்.
தன்னுடைய வித்தியாசமான குரலால் இசை ரசிகர்களை தன்வசப்படுத்திய பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய 82 வது வயதில் சென்னையில் காலமானார். அவருடைய உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
Article by RJ Valli Manavalan.