அவதார் படத்த உலகமே வியந்து பாத்துட்டு இருக்கப்போ அந்த படத்தோட டேரக்டர் ஜேம்ஸ் கேமரூன், இந்தியால உருவான RRR படத்த 2 முறை பார்த்து வியந்து பாராட்டியிருக்காரு.
2023 ஆரம்பத்துல இருந்து உலக சினிமா அரங்குல RRR தொடர்ந்து அதிர்வலைகள உண்டு பண்ணிட்டு இருக்கு. ராஜமவுலி இயக்கத்துல ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிப்புல 2022-ல வெளியாகி 1000 கோடிக்கு மேல வசூல் செஞ்சு சாதனை படைச்ச படம் RRR. இந்த சாதனை ராஜமவுலிக்கு ஒன்னும் புதுசில்ல.
திரைத்துறைல அவருடைய வளர்ச்சி இந்தியா முழுக்க எல்லாருக்கும் தெரியும். மஹதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 இப்ப RRR னு இவருடைய திரைப்படங்கள் எல்லாமே நம்ப முடியாத கதைக்களத்தோட இருக்கும். ஆனா அத நம்புற மாதிரி அவரு திரைல காட்சிப்படுத்தியிருப்பாரு. இந்திய சினிமால எவ்வளவு பெரிய கிராபிக் அனிமேஷன் காட்சியா இருந்தாலும் அத அதிகபட்சம் தத்ரூபமா திரைல கொண்டு வரக்கூடிய இயக்குநர் ராஜமவுலி தான்.
இதத்தாண்டி விறுவிறுப்பான கதை, திரைக்கதை, வசனம் அதுமட்டுமில்லாம பாடல்களுக்கான முக்கியத்துவம் எல்லாமே இவர் படங்கள்ல சரி சமமா இருக்கும். இதுதான் அவருடைய வெற்றிக்கான ஃபார்முலா. அப்படி இறுதியா இவர் இயக்கத்துல வெளியாகி வெற்றி பெற்ற படம் RRR ஹாலிவுட் பக்கம் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு இருக்கு.
இந்த படத்துல வந்த நாட்டுக்கூத்து பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோப் அவார்ட் குடுத்துருக்காங்க. ரீல்ஸ்லயும் இந்த பாட்டு குறிப்பா அதுல இருந்த Dance Steps மூலமா உலகம் முழுக்க பிரபலமாச்சு. இது ஒருபக்கம் இருக்க சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்சன் படம், சிறந்த சண்டைக் காட்சிகள் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய 4 பிரிவுகளுக்குனு Hollywood Critic Association அமைப்பு RRR படத்துக்கு 4 விருதுகள் வழங்கியிருக்கு.
அடுத்ததா ஆஸ்கர் விருதுக்கும் நாட்டுக்கூத்து பாட்ட Recommend பண்ணியிருக்காங்க. 95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12 ஆம் தேதி நடக்கப்போகுது. அதுல சிறந்த பாடலுக்கான பிரிவுல 5 ஹாலிவுட் பாடல்களோட ஆறாவதா நாட்டுக்கூத்து பாடலும் இணைஞ்சு போட்டி போடப்போகுது.
இதயெல்லாம் விட இன்னொரு சூப்பரான விஷயம் என்னனா… ஆஸ்கர் மேடைல நம்ம நாட்டுக்கூத்து பாட்ட Live-ஆ பாட போறாங்க. இந்த பாட்ட பாடின பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா 2 பேருமே ஆஸ்கர் மேடைல இந்த பாட்ட பாட போறாங்க அப்படிங்குற அதிகாரப்பூர்வ செய்திய ஆஸ்கர் அகாடமியே சொல்லியிருக்காங்க. இது இந்திய சினிமாவுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கக் கூடிய ஒரு விஷயம்.
ஆஸ்கர் விருதும் வாங்கிட்டா கூடுதல் சந்தோஷம். இல்லனாலும் ஆஸ்கர் விருது மேடைல நாட்டுக்கூத்து பாடல் ஒலிக்கப் போதுங்குறதே அந்த பாட்டுக்கு கிடைச்சிருக்க மிகப்பெரிய அங்கீகாரம் தான்.