பொதுவாக வயது ஆக ஆக மனிதர்களின் குரலில் முதிர்ச்சியும் நடுக்கமும் ஏற்படும். ஆனால் ஒரே ஒரு குரலுக்கு மட்டும் வயது கூட கூட குழைவும், இளமையும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றால் அது எஸ்.ஜானகி அம்மாவின் குரல் தான்…
சிங்கார வேலனே தேவாவில் அவரது இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி திளைக்க ஆரம்பித்த இசை ரசிகர்கள் இன்னும் அந்த இன்பத்திலேயே ஆழ்ந்துகிடக்கிறார்கள். ஜானகி அம்மாவின் குரலை கேட்காமல் ஒரு நாளை சராசரி இசை ரசிகன் கடந்து விட முடியாது.
ஒரு பாடலை பாடுவது மட்டும் பாடகியின் வேலை இல்லை; அது காட்சி ஆக்கப்படும் முன்பு அதற்கு தானாக ஒரு காட்சி வடிவம் கொடுத்து, அதற்கு உயிர் கொடுத்துப்பாடுவார் ஜானகி அம்மா. அழுகை,கோபம், மகிழ்ச்சி, காதல், கவர்ச்சி இப்படி அனைத்தையும் தன் குரலில் கொண்டு வந்து அந்த பாடலுக்கு முகபாவம் காட்டி நடிக்கும் நடிகைகளை திக்குமுக்காட வைத்துவிடுவார். சில்க் ஸ்மிதாவின் பல பாடல்கள் நம்மை கிறங்கடிக்க வைக்க முக்கிய காரணம் ஜானகி அம்மாவின் குரல். அத்தனை உணர்வுகளையும் குரலில் காட்டும் ஜானகி அம்மா பாடும் போது முகத்தில் எந்த அசைவும் காட்டமாட்டார் என்பதும் ஆகப் பெரிய அதிசயம் தான்.
சின்னதாக ஒரு நோட்டில் பாடலை தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு பாடுவார். அது அவருக்கு மட்டும் தான் புரியும்; பாடும் போது கையில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு, அதை கசக்கிக் கொண்டே பாடுவது அம்மாவின் மேனரிசம் என்று பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள் அம்மாவை செல்லமாக கிண்டல் செய்வார். ஜானகி அம்மாவுக்கு சிறுவயதிலிருந்தே சைனஸ் பிரச்சனை இருக்கிறது. பல பாடல்களை உடல் சிரமங்களோடு பாடியிருக்கிறார். ஆனால் அவர் பாடிய எந்த பாடலை கேட்டாலும் அப்படி நமக்கு தெரியாது. ஓரே நாளில் ஆறுக்கும் மேற்பட்ட பாடல்கள் கூட பாடியிருக்கும் ஜானகி அம்மா 17 மொழிகளில் 50,000 பாடல்கள் பாடியிருக்கிறார்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடங்கி அனிருத் வரை ஆறு தலைமுறை இசையமைப்பாளர்களோடு பணியாற்றி இருக்கிறார். அவரும் சில தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரங்கா,மெளன கீதங்கள் தொடங்கி பல்வேறு படங்களில் குழந்தைகளுக்கு குரல், ஒரே பாடலில் மூன்று பல்வேறு நாயகிகளுக்கு குரல், 16 வயதினிலே படத்தில் பாட்டிக்கு குரல், நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் ஆண் குரல் என முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
எம்.எஸ்.வி, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் என மூன்று முண்ணனி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடி மாநில விருதுகள் பெற்ற ஒரே பாடகி ஜானகி அம்மா தான். 90’களின் போது ஜானகி தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பல சிறந்த தமிழ் பாடல்களைப் பாடினார் . ஒட்டகத்த கட்டிக்கோ, கோபாலா கோபாலா, நெஞ்சினிலே நெஞ்சினிலே, காதல் கடிதம் தீட்டவே, முதல்வனே முதல்வனே, எந்தன் நெஞ்சில், மார்கழி திங்களல்லவா போன்ற பாடல்கள் இன்னும் பிரபலமாக உள்ளன. அவரது இசையமைப்பின் கீழ் சங்கமம் திரைப்படத்திலிருந்து மார்கழி திங்களல்லவா படலுக்காக சிறந்த பெண் பின்னணிக்கான தமிழக மாநில திரைப்பட விருதை வென்றார்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகும் அவருக்கு பாடல் வாய்ப்பு வந்தாலும் அவர் இசை உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் ஜானகி அம்மாவின் குரலுக்கு என்றுமே ஒய்வில்லை; அந்த இசையரசி நமக்காக எப்போதும் பாடிக் கொண்டே தான் இருப்பார். அவரது 84ஆம் ஆண்டு பிறந்தநாளில் அவரை வணங்கி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறது தமிழகத்தின் முதல்நிலை வானொலி குழுமம் சூரியன் FM.
உங்க குரல் என்றும் இளமையாக இருக்கும்… லவ் யூ ஜானகி அம்மா…