வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் லேட் நைட் குடிச்சுட்டு வருவாரு, ஒரு வழியா தூங்க வச்சு அடுத்த நாள் காலையில் எந்த பிரச்சினையும் பண்ணாம அப்பாவை ஆபிசுக்கு அனுப்பி வச்சுட்டு, வெளக்கமாறு எடுத்து வெளுத்து வாங்குவாங்க அம்மா சரண்யா பொன்வண்ணன்.
“நா என்னமா பண்ணினேன் நைட்டு சாப்பிட்டு பேசாம தூங்கிட்டேன்ல” அப்படின்னு சொல்லுவாரு தனுஷ், அதுக்கு சரண்யா பொன்வண்ணன் “பேசாம தூங்கிட்டியா… ரோட்டில விழுந்து கிடந்த நாயேன்னு” இன்னும் ரெண்டு அடி வைப்பாங்க. நம்ம தமிழ்நாட்டுல எல்லா அம்மாவும் கிட்டத்தட்ட அதே கேரக்டர்தான், கோலிவுட்ல இன்னமும் அம்மா கேரக்டருக்காக அளவெடுத்து செஞ்ச மாதிரி நடிச்சு தள்றாங்க சரண்யா பொன்வண்ணன்.
ஒரே மாதிரி அம்மா பாத்திரமா இல்லாம ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசத்தையும் கொடுத்து தன்னுடைய முத்திரையையும் பதிக்கிறார் சரண்யா.
1987-ல் தன்னுடைய 17 வயதில் முதல் படத்தில் அறிமுகமாகிறார், நினைச்சு பார்த்தா இன்னிக்கு வரைக்கும் அது கனவு தான், ஹீரோ ‘கமல்ஹாசன்’ இயக்குநர் ‘மணிரத்னம்’. ஒரு cult கிளாசிக் படமா அமைஞ்சுது நாயகன். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிச்சாங்க.
எல்லா பெண்களை போலவும் திருமணத்துக்கு பிறகு ஒரு Pause, மறுபடியும் அவருடைய குழந்தைகள் வளர்ந்த பின் கேமரா முன்னாடி நடிக்க ஆரம்பிச்சாங்க. அதுவும் அவர்களுக்கு தோதான தொலைக்காட்சி சீரியல்கள்ல,
அடுத்து 6 வருடம் கழித்து ‘அலை’ படத்தில் சிம்புவுக்கு அம்மாவா நடிச்சாங்க. அதற்குப் பிறகு,
ஜீவா
உதயநிதி
விமல்
கருணாஸ்
சேரன்
பிரஷாந்த்
மாதவன்
விக்ராந்த்
நட்ராஜ்
ஸ்ரீகாந்த்
விஷ்ணு விஷால்
விஷால்
சசிகுமார்
ஜெயம் ரவி
கார்த்திக்
விக்ரம்
சிவகார்த்திகேயன்
தனுஷ்
சூர்யா
என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார்.
இருந்தாலும் 2010 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் அம்மாவாக நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். சும்மா சொல்லக்கூடாது கள்ளிக்காட்டில் பிறந்த தாயாகவே வாழ்ந்து நம்மை கலங்க வைத்திருப்பார்.
தற்பொழுது எத்தனையோ படங்களில் அம்மாவாக நடித்து இருந்தாலும், அவர் கதாநாயகியாக நடித்த நாயகன் படத்தில் நீலாவாகவும், கருத்தம்மா படத்தில் பொன்னாத்தாவாகவும், சீவலப்பேரி பாண்டி படத்தில் வேலம்மாளாகவும் , பசும்பொன் படத்தில் மலராகவும் நடித்திருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இருந்தாலும் அம்மாவாக நடிப்பது தான் தனக்கு பிடித்திருப்பதாக சொல்கிறார். ஏன்? என்று கேட்டால் Romance காட்சிகளில் நடிக்க தேவையில்லை, மரத்தை சுற்றி டூயட் இல்லை, கிசுகிசுக்களுக்கு வழி இல்லை என எப்போதும் போல positive ஆக பல் காட்டி சிரிக்கிறார்.
எம்டன் மகன் படத்துல குன்றக்குடி கோயில் வாசல்ல விழுவதற்கு பதிலாக குழப்பத்தில் குழாயடியில் அங்கபிரதட்சணம் செஞ்சது, ‘அவனா பண்றான், அவன் கெரகம் அப்படி பண்ண வைக்குது, ஆடி போயி ஆவணி வந்துருச்சுன்னா டாப்ல வந்துருவான்’ இந்த களவாணி வசனம், தந்தைக்கான படமாக இருந்தாலும் ‘தவமாய் தவமிருந்து’ தாயாக நடித்தது என தமிழ் சினிமாவில் தனி தடம் பதித்தார்.
அப்படித்தான் அம்மா என்றால் அனைத்து இயக்குனர்கள் மனதில் மட்டுமல்ல, ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சரண்யா பொன்வண்ணன். கதாநாயகர் வயதில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல 50 வயது, 60 வயது ஆண்களுக்கும், அம்மா இல்லாதவர்களுக்கும் சரண்யா பொன்வண்ணன் அவர்களை பார்த்தால் அம்மாவின் கனிவு கிடைக்கிறது.
Positivity-ன் மொத்த உருவமாக இருக்கும் சரண்யாவிற்கு தையல் கலை, Fashion Designing என்றால் அவ்வளவு பிடிக்குமாம். சூட்டிங் இல்லாத நேரத்தில் எம்பிராய்டரி தையல் வேலைகள் செய்வதில் அலாதி பிரியம் கொண்டவராக இருக்கிறார். தனக்கு பிடித்த விஷயத்தை மற்ற பெண்களுக்கும் கற்றுத் தருகிறார். தன் வீட்டின் மாடியிலேயே ஒரு ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் நடத்தி பல பெண்களுக்கு தையல் கலையையும், Fashion Technology நுட்பத்தையும் கற்றுத்தந்து அந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கிறார்.
தாயுள்ளம் தாயுள்ளம் தானே! சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.