“நான்தான் முகேஷ்” என்று சொன்னவுடன் உங்களுக்கு தோன்றும் முதல் வார்த்தை திரையரங்கில் திரையிடப்படும் அந்த புகையிலை விளம்பரம். இந்த சிகரெட் கலாச்சாரம் எப்படி இங்கு வந்தது!, திரையில் நமது கதாநாயகன் சிகரெட் பிடித்தால் அதை பார்த்து பிடிக்க ஆரம்பித்ததிலிருந்து “டேய் சும்மா அடிச்சு பாருடா” என்று சொல்லும் நண்பர்கள் வரை அவர்களால் புகைப்பவர்கள் ஏராளம். சிகரெட் மோகம் என்றும் குறையாது எல்லாம் நாகரிகம் என்று நினைப்பதுவரை.
“பத்த வச்சு புகைய விட்டா பவர் கிக்கு” என்று ஸ்டைலாக புகைப்பிடிவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இந்த சிகரெட்டின் ஆரம்ப வரலாறையும் அதை பற்றிய சுவாரஸ்யாமான தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த சிகரெட் எப்படி உலகமெங்கும் வந்தது என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புகையிலை பயன்பாடு இருந்து வருவதாக வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் புகையிலையை கடவுளின் கொடை என நினைத்திருந்தார்கள். வலி நிவாரணியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். காயங்கள், பல்வலி, இன்னபிற உபாதைகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டமாற்று முறையில் புகையிலையைக் கொடுத்து பொருள்களை வாங்கியிருக்கிறார்கள்.
புகையிலையை ஆபத்தான பொருள் என அப்போது யாரும் உணரவில்லை. புகையிலை சத்தமில்லாமல் பல காரியங்களை ஆதிகாலத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் புகையிலை பல நாடுகளை உருவாக்கியிருக்கிறது, பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறது. வல்லரசுகளை உருவாக்கியிருக்கிறது.
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஸ்பெயின் நாட்டிலுள்ள செவில்லாவில் அங்குள்ள பணக்கார மக்கள் பயன்படுத்தி தூக்கி எறிந்த சிகார் துண்டுகளை பிச்சைக்காரர்கள் சேர்த்து ஒரு காகிகத்தில் சுருட்டி அதை புகைத்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த சிறிய காகித சுருட்டுகள் சிகரெட்டாக மாறியது மற்றும் அவற்றின் பயன்பாடு இத்தாலி மற்றும் போர்ச்சுகலுக்கு பரவியது. இப்படியாக சிகரெட் கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.
இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 6.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வெறும் புகைபழக்கம் மட்டுமே கொல்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புகையிலை மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் சிகரெட் மட்டுமின்றி சாக்லேட், எலெக்ட்ரிக் சிகரெட், சிகார் என இன்னும் நிறைய உள்ளன. சிகரெட் பாதிப்புகள் குறித்து 19-ம் நூற்றாண்டு வரை பெரிய விழிப்புணர்வுகளோ, விளம்பரங்களோ வராமலே இருந்தது.
19-ம் நூற்றாண்டில்தான் பல நிறுவனங்கள் சிகரெட் தயாரிப்பில் இறங்கின. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இன்றைக்கு சிகரெட் தயாரிப்பில் உலகின் முதல் நிறுவனமாக இருக்கக் கூடிய இம்பீரியல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதை அப்போது முன்னணியில் இருந்த Buck Duke நிறுவனம் இதனை எதிர்த்தது.
ஆனாலும், இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் இரண்டு நிறுவனங்களும் இணைந்து தங்களுடைய சிகரெட் பொருள்களை British American Tobacco Company என்கிற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்வதென ஒப்பந்தம் செய்துகொண்டனர். தொழில் போட்டியைச் சமாளிக்க 1902-ம் ஆண்டு பிலிப்ஸ் மோரிஸ் நிறுவனம் இப்போது முன்னிலையில் இருக்கிற மார்ல்போரோ சிகரெட்டை தனி பிராண்டாக அறிமுகப்படுத்தியது.
அப்போது புகையிலைக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்ற தடை இருந்தபோது, மார்ல்போரோ என்ற சிகரெட் நிறுவனம் ஒரு கவர்ச்சிகரமான கௌவ் பாய் கையில் மார்ல்போரோ சிகரெட்டை கொடுத்து புகைக்க சொல்லி படமாக எடுத்து புதுவிதமாக அதை விளம்பரப்படுத்தினர். இது அந்த மார்ல்போரோ சிகரெட்டை அதிகம் பயன்படுத்துவதற்கு தூண்டியது. இதனால் மார்ல்போரோ நிறுவனத்தின் வருமானத்தை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்தியாவில் புகையிலை 17-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய புகையிலையானது உலகம் முழுவதிலும் சுவை மற்றும் மென்மையான தன்மைக்குப் பிரபலமானது தவிர, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இந்திய புகையிலைக்கு பெரும் தேவை இருக்கிறது. இந்தியாவில் ஆண்டு உற்பத்தி சுமார் 830,000 மெட்ரிக் டன்கள்.
இப்போது மட்டுமல்ல அந்த காலத்திலிருந்தே நம்முடைய மக்களிடம் இதை செய்யாதே என்று சொன்னால் அதை வீம்புக்கென்று செய்வார்கள். இப்படியாக ஆரம்பித்த இந்த சிகரெட் மோகத்தை நம்மால் மட்டுமே தடுக்க முடியுமே தவிர தானாக அழியாது. சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் சீக்கிரம் இறந்துவிடுவோம் என்று அறிவுரை எல்லாம் உங்களுக்கு சொல்லவில்லை, உங்களுக்கு அதிகநாள் வாழ வேண்டும் என்று வரம் வேண்டுமென்றால் ஒரு வழி இருக்கிறது.
அதற்கு சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள் அவ்வளவுதான்.