80’ஸ் , 90’ஸ் கிட்ஸ் அனைவரிடமும் உங்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி யாரென்று கேட்டால் அதில் பெரும்பாலானோரின் பதில் ‘சிம்ரன்’ என்பதாகத்தான் இருக்கும்.
80’ஸ் , 90’ஸ் கிட்ஸ் அனைவரது மனங்களிலும் என்றும் நீங்கா இடம் பெற்று நிலைத்து நிற்கும் ஒரு கதாநாயகி என்றால் அது சிம்ரன் தான். ஒரு நடிகைக்கு ஆண்கள் பலர் ரசிகர்களாக இருப்பது சாதாரண விஷயம். ஆனால் ஆண்களுக்கு நிகரான பெண் ரசிகைகளையும் கொண்டவர் சிம்ரன். ஏன் சிம்ரனுக்கு இத்தனை ரசிகர்கள்? எப்படி அவர் அனைவரது இதயங்களையும் ஆட்கொண்டார்?
நடிகையாக இந்தியில் முதலில் அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் ‘VIP’ , ‘ஒன்ஸ்மோர்’ , ‘பூச்சூடவா’ படங்களின் மூலம் அறிமுகமான சிம்ரனைத் தான் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால படங்களிலேயே தனது இயல்பான நடிப்பாலும், கதாநாயகிக்கே உரிய தனித்துவத்தை கொண்டிருந்ததாலும் அனைத்து தரப்பு மக்களாலும் எளிதில் கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டார் சிம்ரன். அந்த வருடமே சிறந்த அறிமுக நடிகைக்கான FILMFARE விருதையும் பெற்றார். தொடர்ந்து பல விருதுகளை வென்றுள்ளார்.
ஒரு கதாநாயகியாக சிம்ரனின் தனித்துவத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று உடல்வாகு. தமிழ் இலக்கியங்களில் கொடியிடை கொண்ட பெண், உடுக்கை இடை கொண்டவள் என்று உதாரணம் கூறுவார்களே அப்படியான உடல்வாகு கொண்டவர். சிம்ரனின் பெரும்பாலான பாடல்களில் அவரது இடுப்பசைவுக்கென ஒரு close up shot வைத்திருப்பார்கள். ‘மனம் விரும்புதே உன்னை’ , ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ , ‘மின்னல் ஒரு கோடி’ , ‘வெள்ளி மலரே’ , ‘சேலையில வீடு கட்டவா’ உள்ளிட்ட பாடல்களை உதாரணங்களாக சொல்லலாம்.
சிம்ரனின் தனித்துவத்திற்கான இரண்டாவது காரணம் அவரது நடனம். தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயின் இந்த அளவிற்கு நடனமாட முடியுமா என ஆச்சரியப்பட வைத்தவர். அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகர்களைப் பொறுத்தவரை நன்றாக ஸ்டைலாக நடனமாடக் கூடியவர், எவ்வளவு கடினமான ஸ்டெப் என்றாலும் அசால்ட்டாக ஆடக்கூடியவர் நடிகர் விஜய். அந்த சமயத்தில் யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு விஜய்யுடன் போட்டி போட்டு ஆடியிருப்பார். விஜய்யை தாண்டி தன்னுடைய நடன அசைவுகளால் கவனம் ஈர்த்திருப்பார் சிம்ரன். அந்த பாடல் இன்று வரை பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் பிதாமகன் படத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட பாடலிலும் அற்புதமாக நடனத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். அதுவே அவர் ஆடியதில் மிகவும் கடினமான நடனம் எனவும் சிம்ரனே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சில கதாநாயகிகளின் நடிப்பு அன்றைய காலகட்டத்தில் ரசிக்கக் கூடியதாகவும், தற்போது பார்த்தால் சிரிப்பாக இருப்பது போலவும் தோன்றும். நகைச்சுவை படங்கள் என்பது பலருக்கும் கடினமான ஒரு காரியம், குறிப்பாக கதாநாயகிகளுக்கு. கொஞ்சம் மிஸ் ஆனாலும் அது க்ரிஞ்சாகி விடும். ஆனால் சிம்ரன் நடித்த அத்தனை படங்களையும் இப்போது பார்த்தாலும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும், வாலி, கன்னத்தில் முத்தமிட்டாள், பிரியமானவளே, ஜோடி உள்ளிட்ட படங்களில் மிகவும் சீரியஸாக அழகான நடிப்பை கதாபாத்திரத்திற்கேற்ப இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். அதே போல் பஞ்ச தந்திரம், நியூ, அரசு, வாலி உள்ளிட்ட படங்களில் காமெடி, சீரியஸ் என கலந்துகட்டி அட்டகாசமாக நடித்திருப்பார். இப்படி எந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்திப் போகும் நடிகையாக இருந்தார் சிம்ரன். அவரது காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் கொடிகட்டிப் பறந்தார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு இடைவெளி கொடுத்து வைத்திருந்த சிம்ரன் தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியுள்ளார். பெரிய பெரிய நட்சத்திரங்களாக சினிமாவில் வலம் வந்தவர்கள் பலர் காணாமல் போன வரலாறு உண்டு. ஆனால் சில நட்சத்திரங்கள் மட்டுமே தொடர்ந்து தனக்கான இடங்களை தக்கவைத்துக் கொண்டிருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் Generation Gap. அந்த வகையில் அடுத்த தலைமுறையினருடன் இணைந்து தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார் சிம்ரன். அவருக்கு பின் வந்த கதாநாயகிகள், இனி வரப்போகும் கதாநாயகிகள் பலருக்கும் முன்மாதிரியாகவும் விளங்கி வருகிறார்.
திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்தும் அதே அழகுடன் ஜொலித்து வரும் சிம்ரன் சன் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அவரின் அழகின் ரகசியம் குறித்த கேள்விக்கு இப்படி பதிலளித்திருப்பார். “தினமும் யோகா செய்வேன், டான்ஸ் ஆடுவேன், 8 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட மாட்டேன். நம்மை எப்போதும் நாம் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும், அது நமக்கு நம்பிக்கையை கொடுக்கும். நான் உச்ச நட்சத்திரமாக இருந்த போதெல்லாம் விழாக்களுக்கு செல்லும் போது எனது தோற்றம் குறித்து கவலைப்பட்டதில்லை. இப்போதெல்லாம் எனக்கு வயதாகி விட்டது, விழாக்களுக்கு செல்லும் போது கண்ணாடியை பார்த்து என்ன ட்ரெஸ் போடலாம் என தேர்ந்தெடுத்து மேக்கப் போட்டுக் கொண்டு தான் செல்கிறேன்” என்றார்.
என்ன சிம்ரன் இதெல்லாம்… வயசாயிடுச்சா?! உங்களுக்கா?!
90’ஸ் நாயகி சிம்ரனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.