நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 19 ஆவது நினைவு தினம் இன்று (21 ஜூலை, 2020). இந்திய சினிமா கண்டெடுத்த பொக்கிஷமாகவே இன்று வரை சிவாஜி கணேசன் திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிவாஜி கணேசனின் திரையுலக வாழ்க்கையின் பயணத்தை ஒரு தொகுப்பாக இப்பதிவில் காண்போம்.
1928ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் நாள் விழுப்புரம் மாவட்டத்தில் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்னும் இயற்பெயரை உடைய சிவாஜி கணேசன் பிறந்தார். தனது ஆரம்ப கால நடிப்பு வாழ்க்கையில் மேடை நாடகங்களில் சிவாஜி நடித்து வந்துள்ளார். தனது ஏழு வயது முதலே மேடை நாடகங்களில் சிவாஜி நடித்து வந்துள்ளார். தன் சிறுவயதிலேயே பரதநாட்டியம், கதகளி, மணிபுரி, நடனங்களை சிவாஜி பயின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது மூச்சு விடாமல் தொடர்ந்து பேசப்படும் பெரிய வசனங்களே. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை மனதில் வைத்து சரளமாக பேசி நடிப்பதில் சிவாஜி வல்லவர். “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற தலைப்பில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் இவர் பேசியதை கண்டு வியந்த தந்தை பெரியார் அவர்கள் இவருக்கு சிவாஜி எனும் பெயரை சூட்டினார். திறமையான நடிகர்கள் இருந்தும் தமிழில் சரளமாக வசனம் பேச ஒரு சிறந்த நடிகரை தமிழ் சினிமா தேடி வந்த காலத்தில் தான் சிவாஜி எனும் அரிய பொக்கிஷம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது.
1952இல் இயக்குனர்கள் கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இணைந்து இயக்கிய “பராசக்தி” திரைப்படம் தான் சிவாஜியின் முதல் படம். இப்படத்தின் தயாரிப்பாளர் பெருமாளிடம் தந்தை பெரியாரே சிவாஜியை கதாநாயகனாக போடுமாறு பரிந்துரை செய்துள்ளார். இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனங்கள் எழுத இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 1954-இல் பாடல்களே இல்லாமல் வெளியான “அந்த நாள்” திரைப்படத்தில் சிவாஜி வில்லன் கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடித்தார். அதே ஆண்டில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து “கூண்டுக்கிளி” படத்திலும் வில்லனாக நடித்தார்.
பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசனுக்கு “வீரபாண்டிய கட்டபொம்மன்” ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்துமே இன்றுவரை காலத்தால் அழியாத வசனங்களாக கருதப்படுகிறது. இப்படத்திற்காக சர்வதேச திரைப்பட திருவிழாவான ஆப்ரோ ஏசியன் திரைப்படவிழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெரும் முதல் ஆசிய நடிகர் சிவாஜிதான் என்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்.
புராண கதைகளிலும் வரலாற்றுக் கதைகளிலும் சிவாஜி தன் தனித்துவமான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார். அந்தவகையில் திருவிளையாடல், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை சிவாஜி ஏற்று நடித்திருப்பார்.
சிவாஜியின் கர்ணன் கதாபாத்திரத்தை புகழா தவர்கள் இருக்கவே மாட்டார்கள். பல்வேறு படங்களில் பல்வேறு பரிமாணத்தில் தனது கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கும் சிவாஜி அவர்கள் 1980 க்கு மேல் ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
முதல்மரியாதை, தேவர்மகன், பசும்பொன், ஒன்ஸ்மோர், என் ஆசை ராசாவே, மன்னவரு சின்னவரு, படையப்பா போன்ற படங்களில் சற்று வயதான கதாபாத்திரங்களை சிவாஜி ஏற்று நடித்தார். பராசக்தி முதல் படையப்பா வரை தனக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக உள்வாங்கி தன் நடிப்பை சிவாஜி கணேசன் திரையில் வெளிப்படுத்தியிருப்பார். 288 படங்கள் நடித்திருந்தாலும் “எனது மேடை நாடகங்கள் தான் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தது” என சிவாஜி கூறியுள்ளார்.
சிவாஜி கணேசனுக்கு பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் தமிழக அரசும் இந்திய அரசும் வழங்கி கௌரவித்துள்ளது. அந்தவகையில் 1966 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 1984 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் சிவாஜி கணேசனுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. 1995ஆம் ஆண்டு செவிலியர் விருதை சிவாஜிக்கு பிரான்ஸ் அரசு வழங்கி கௌரவித்தது. 1992 ஆம் ஆண்டு தேவர்மகன் படத்திற்காக சிறப்பு தேசிய விருது ஒன்றையும் இந்திய அரசாங்கம் சிவாஜிக்கு வழங்கியுள்ளது. 1996 ஆம் ஆண்டு இந்திய கலைத் துறையின் ஒரு மிகப்பெரிய உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை சிவாஜிக்கு வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.
தேவர்மகன், வியட்னாம் வீடு ஆகிய படங்களுக்காக 1969 மற்றும் 1970 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை சிவாஜிக்கு வழங்கியது. 1989 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருது வழங்கியும் சிவாஜியை தமிழக அரசு கௌரவித்தது. அதுமட்டுமின்றி கலைத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை 1962-ஆம் ஆண்டு தமிழக அரசு சிவாஜிக்கு வழங்கியது.
இந்திய அரசு, தமிழக அரசை தாண்டி ஆந்திர அரசும் சிவாஜியை கௌரவிக்க தவறவில்லை. 1998 ஆம் ஆண்டு சிவாஜிக்கு என்.டி.ஆர் தேசிய விருதை ஆந்திர அரசு வழங்கி அழகு பார்த்தது. புதுச்சேரி அரசு தான் முதன்முதலில் சிவாஜிகணேசனுக்கு சிலை வைத்த அரசாகும். அதன்பின் 2006ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் சிவாஜிகணேசனுக்கு தமிழக அரசு ஒரு சிலையை நிறுவியது.
ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு சிவாஜி தனது 72 வயதில் காலமானார். இவரது இறப்பு இன்று வரை தமிழ் சினிமாவிற்கும், இந்திய சினிமாவிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.
காலங்களைக் கடந்தும் சிவாஜியின் நடிப்பை எவராலும் எளிதில் மறந்து விட முடியாது. அந்த வகையில் சிவாஜி அவர்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும் கலைத்துறையில் அவர் புரிந்த சாதனைகளும், அவரது காலத்தால் அழியாத கதாபாத்திரங்களும் என்றென்றும் நம் மனதில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கும் என்பதே உண்மை.
திரையுலக பொக்கிஷத்திற்கு நினைவஞ்சலியை ரசிகர்கள் #SivajiGanesan என இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்…