கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை பூரண குணமடைய வேண்டி பிரபலங்கள் பலரும் தங்களது வேண்டுதல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, சிவகுமார் ஆகியோர் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்தனர். தற்போது காமெடி நடிகர் சூரி எஸ்.பி.பி-யின் உடல் நிலை சரியாக வேண்டி கடிதம் ஒன்றை எழுதி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சூரி எழுதியுள்ள கடிதத்தில், தான் விவரம் தெரிந்த நாள் முதல் ஒரு நாள் கூட எஸ்.பி.பி-யின் குரலை கேட்காமல் கடந்தது இல்லை எனவும், விரைவில் எஸ்.பி.பி குணமடைந்து தங்களுக்காக பாடல்களைப் பாட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் எஸ்.பி.பி-யின் உடல்நலம் சரியாக வேண்டி “ஆத்தா மதுரை மீனாட்சி”-யை மனசார வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சூரி தான் எழுதிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எஸ்.பி.பி-யின் உடல் நலம் குறித்து வீடியோ வெளியிட்ட அவரது மகன் எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் விரைவில் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப சூரியன் FM சார்பிலும் வேண்டிக் கொள்கிறோம். நடிகர் சூரி அவர்களின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
Pray for SPB sir 🙏🙏🙏 pic.twitter.com/qqybUP4fAf
— Actor Soori (@sooriofficial) August 18, 2020