Cinema News Specials

இயக்குனர் பாலாவின் பிறந்தநாள்!!!

இயக்குனர் பாலா தனது 54-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பரிமாணத்தை கடைபிடித்து எதார்த்தமான பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் பாலா.

பாலாவின் படம் என்றாலே நிச்சயம் விருது வாங்கும் திரைப்படம் என மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி பாலா இதுவரை ஆறு தேசிய விருதுகள், 13 மாநில அரசின் விருதுகள், மேலும் பல மதிப்பிற்குரிய விருதுகளை வாங்கி அடுக்கியுள்ளார். பாலாவின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் அவரின் கதைக்கு ஏற்ப ஒரு புதிய பரிமாணத்தை உள்வாங்கி தங்களை தயார் செய்து கொள்வர்.

இயக்குனர் பாலா சினிமாவில் ஆரம்ப காலத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அசிஸ்டன்ட் ஆக பணிபுரிந்தார். 1999-ல் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது தான் பாலா இயக்கிய முதல் திரைப்படம். முதல் படத்திலேயே தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் சேது திரைப்படம் வாங்கியது. விக்ரம் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையை சேது திரைப்படம் அமைத்துக் கொடுத்தது என்றே கூறலாம்.

அதைத்தொடர்ந்து 2001இல் சூர்யாவை வைத்து நந்தா திரைப்படத்தை பாலா இயக்கினார். இப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் இதுவரை இயக்கிய திரைப்படங்கள். இவற்றுள் பரதேசி திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளையும் இந்திய சினிமாவின் முக்கிய விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

பாலா இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்துள்ளார். சூர்யா நடித்த மாயாவி, மிஷ்கின் இயக்கிய பிசாசு, சண்டி வீரன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி தானே இயக்கிய நாச்சியார் மற்றும் பரதேசி திரைப்படங்களுக்கும் பாலா தான் தயாரிப்பாளர்.

எதார்த்தமான கதைக்கருவும் தத்துரூபமான கதாபாத்திரங்களுமே பாலாவின் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பாலாவின் கலைப்பயணம் மேலும் தொடர வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோள். இயக்குனர் பாலாவிற்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.