Cinema News Specials Stories

அனுஷ்கா – வின் 15 ஆண்டுகால பயணம்!!!

நடிகை அனுஷ்கா திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அனுஷ்காவின் ரசிகர்கள் இணையத்தில் அதைக் கொண்டாடி வருகின்றனர். அனுஷ்காவின் பதினைந்து வருட கால திரையுலக வாழ்க்கையை சுருக்கமாக இப்பதிவில் காணலாம்.

2005இல் நாகார்ஜுனா நடித்து வெளிவந்த “சூப்பர் ” எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் தன் திரையுலக வாழ்க்கையை அனுஷ்கா தொடங்கினார். தொடர்ந்து தெலுங்கில் ராஜமௌலி, சுரேஷ்கிருஷ்ணா, ஏ. ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார்.

2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த “ரெண்டு” திரைப்படம் மூலம் அனுஷ்கா தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “மொபைலா மொபைலா” பாடல் அனுஷ்காவை ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது என்றே கூறலாம்.

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை தனக்கென பிடித்தார். “வேட்டைக்காரன்” திரைப்படத்தில் தளபதி விஜயுடன் முதன் முதலில் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் “சிங்கம்” , விக்ரமின் “தெய்வத்திருமகள்”, சிம்புவின் “வானம்” போன்ற வெற்றிப் படங்களில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “அருந்ததி” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மெகா ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தில் அனுஷ்கா ஏற்று நடித்த “ஜக்கம்மா” மற்றும் “அருந்ததி” கதாபாத்திரம் படம் பார்த்தவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்த வெற்றி கதாபாத்திரமாக இருக்கிறது. இப்படம் மூலம் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாநாயகியாக அனுஷ்கா மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

2014ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த “லிங்கா” திரைப்படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முதலில் ஜோடி சேர்ந்தார். அதன் பின் தல அஜித்துடன் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் “தேன்மொழி” கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரம்மாண்டப் படங்களான “பாகுபலி” ஒன்று மட்டும் இரண்டாம் பாகங்களில் அனுஷ்காவின் “தேவசேனை” கதாபாத்திரம் பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு “தெய்வத்திருமகள்” படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகை விருதை அனுஷ்கா வென்றார். அதுமட்டுமின்றி தமிழக அரசு கலைத்துறையினருக்கு வழங்கும் உயர் மதிப்புடைய “கலைமாமணி” விருதையும் 2011ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

அனுஷ்கா நடித்து சாக்ஷி இயக்கியுள்ள “நிசப்தம்” திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என அனுஷ்காவின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் திறமை இருந்தால் மட்டுமே 15 வருடங்கள் ஒரு நடிகையால் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடித்து வர முடியும். அந்த வகையில் அனுஷ்காவின் வளர்ச்சி அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே கூறலாம்.

அவர் அறிமுகமான இந்த ஜூலை மாதம் முழுவதும் அவரது ரசிகர்கள் #AnushkaFansTrendOnJuly20 என இணையத்தளத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்தும், படங்களை புகழ்ந்தும் போஸ்ட் செய்துவருகின்றனர்.. #15YearsofAnushkaShetty என்ற டாக்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது..