Cinema News Specials Stories

19 வருட ‘தில்’ கொண்டாட்டம்!!!

விக்ரம் நடிப்பில் தரணி இயக்கிய ஆக்சன் திரைப்படம் தில். இப்படம் வெளியாகி இன்றுடன் 19 வருடங்கள் நிறைவடைகிறது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டின் ரசிகர்கள் கொண்டாடிய கமர்ஷியல் மசாலா திரைப்படமாக அமைந்தது.

இத்திரைப்படத்தில் விக்ரம், லைலா, ஆஷிஷ் வித்யார்த்தி, நாசர், விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். விக்ரம் சியான் விக்ரம் ஆக மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த வேலையில் தில் திரைப்படம் மற்றுமொரு வெற்றி படமாய் விக்ரமிற்கு அமைந்தது.

தரணியின் திரைக்கதை படம் பார்ப்போரை விறுவிறுபின் உச்சத்திலேயே முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை வைத்திருந்தது. இத்திரைப்படத்திற்கு அழகிய தமிழ் மகன், பைரவா போன்ற படங்களை இயக்கிய பரதன் வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்க பின்னணி இசையும், பாடல்களும் பட்டையை கிளப்பியது என்றே கூறலாம். இப்படத்தின் அனைத்து பாடல்களுமே 2001 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. குறிப்பாக கண்ணுக்குள்ளே, மச்சான் மீசை, உன் சமையலறையில் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்களாய் அமைந்தது.

அதுமட்டுமின்றி திரைக்கதைக்கு ஏற்ப விறுவிறுப்பை வித்யாசாகரின் பின்னணி இசை இப்படம் முழுக்க கொடுக்கத் தவறவில்லை. தில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு விக்ரம் – தரணி கூட்டணி மீண்டும் தூள் படத்தில் இணைந்தது.

இத்திரைப்படம் தமிழக மாநில அரசின் திரைப்பட விருதுகளில் ஆறு விருதுகளை வென்றது. வித்யாசாகருக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருதும், உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதாவிற்கு சிறந்த பின்னணிப் பாடகர்கள் விருதும், நாகேஸ்வர ராவ் அவர்களுக்கு சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட் விருதும், சாய் ரவி மற்றும் ஸ்ரீஜாவிற்கு சிறந்த பின்னணி குரலுக்கான விருதும் கிடைத்தது.

இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் சய் எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தில் படத்தின் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையுலக வாழ்க்கையில் விக்ரமுக்கும் தரணிக்கும் தில் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது. தில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. விக்ரமிற்கு சீயான் என்று முதன் முதலாக டைட்டில் கார்டு போடப்பட்டது தில் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வெளியாகி 19 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் விக்ரமின் ரசிகர்கள் #19YearsOfBlockbusterDHILL என இணையத்தில் படத்தின் வெற்றியை நினைவு கூறி கொண்டாடி வருகின்றனர்.