Specials Stories

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ‘2022 செஸ் ஒலிம்பியாட்’

Chess

2022ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் சூழல் காரணமாக இந்தியாவில், மாமல்லபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியானது முதன்முதலாக 1924ஆம் ஆண்டு பாரீஸில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்றதாகவும், பின்னர் 1927ஆம் ஆண்டு லண்டனில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். தற்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் நடைபெற இருந்த பல்வேறு சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதற்கான ஏலம் விடப்பட்டது. அதில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தில், மாமல்லபுரத்தில் இந்த போட்டிகளை நடத்துவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது ஏற்கனவே குறிப்பிட்டபடி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை மாமல்லபுரத்தில் நடைபெறும். போட்டியில் 200 நாடுகளிலிருந்து 2000 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை. அதிலும் குறிப்பாக மாமல்லபுரத்தில் இந்த சர்வதேச போட்டி நடைபெறுவது உலகளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க தமிழகம் வரவுள்ள உலக செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்று தமிழக முதலமைச்சர் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

Article By MaNo