Cinema News Specials Stories

2022 Top 10 Tamil Albums

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அந்த வருடத்தை ஒரு முறை திரும்பி பார்த்து, அந்த வருடத்தில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்களை நினைவு கூர்வோம். அப்படியாக தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த பாடல்களை கொண்ட 10 திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Beast

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட். படத்தில் மொத்தம் 3 பாடல்கள் ஹலமத்தி ஹபிபூ, ஜாலியோ ஜிம்கானா, திரை தீப்பிடிக்கும். பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் இருக்குமாறு அனிருத் இசையமைத்திருந்தார். அரபிக்குத்து பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக இருந்தது கூடுதல் கவனம் ஈர்த்தது. மேலும் 2 பாடல்களில் ஜானி மாஸ்டரின் நடன அசைவுகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அரபிக்குத்து பாடல் லிரிக்கல் வீடியோ வெளியான நாளிலிருந்து இன்று வரை பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

சமூகவலைதளங்களில் மொழிகளை கடந்து பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் அரபிக்குத்து பாடலுக்கு ரீல்ஸ் செய்து பகிர்ந்து வந்தனர். யூட்யூபில் கிட்டத்தட்ட 489 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள அரபிக்குத்து பாடல் விரைவில் 500 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி உலகளாவிய மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்த ஆல்பம் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் மியூசிக் ஆல்பங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

KGF

இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்த ஒரு திரைப்படம் என்றால் அது KGF. KGF படத்தின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. முதல் படமே இந்திய சினிமா ரசிகர்கள் பலரிடமும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இரண்டாம் பாகம் அந்த எதிர்பார்ப்புகளை 200% பூர்த்தி செய்தது என்றே சொல்லலாம். குறிப்பாக பாகம் 1-ல் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்.

அதே போல் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியானதுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்க செய்தன. படம் வெளியான பின்பு பாடல்கள் பயங்கரமான ஹிட் அடித்தன. Toofan, Mehabooba, Sulthana உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் மக்களின் உணர்ச்சிப் பெருக்கை தூண்டும் வகையில் அமைந்திருந்ததே அதன் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக Mehabooba பாடல் காதலர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சமூகவலைதளங்களில் பல்வேறு போராட்டங்கள் தொடர்பான வீடியோக்களுக்கு KGF பாடல்கள் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Vikram

உலக நாயகன் கமல்ஹாசன் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றிய திரைப்படம் விக்ரம். இதனாலேயே தமிழ் சினிமா ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. பட வெளியீட்டிற்கு முன்பே அந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது படத்தில் இடம்பெற்ற பாடல்கள். அனிருத்தின் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக அதே சமயம் அனைவரும் ரசிக்கும்படியானதாக அமைந்தது.

படத்துடன் ஒன்றி இரண்டறக் கலந்துவிட்டது பின்னணி இசையும், பாடல்களும். PAN INDIA திரைப்படமாக வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியில் இசைக்கும் பெரும்பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றுவரை சமூகவலைதளங்களில் ‘Once Upon A Time’ BGM வலம் வந்து கொண்டிருப்பதே அதற்கு சான்று.

PS 1

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்போது படமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு பல கோடி தமிழ் மக்களின் அந்த எதிர்பார்ப்பை மணி ரத்னம் பூர்த்தி செய்தார். கொரோனா காலகட்டத்தில் தொடங்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. பல்வேறு தடைகளை தாண்டி பொன்னியின் செல்வன் பாகம் 1 இந்த ஆண்டு திரைக்கு வந்தது.

அடுத்த பாகம் 2023-ல் வெளியாகவுள்ளது. பட அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அனைவராலும் கொண்டாட்டப்பட்ட திரைப்படத்தின், இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதன் பின் அனைத்து பாடல்களும் தமிழ் மக்களின் மொபைல்களில் தொடர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. குறிப்பாக வந்தியத்தேவன் பயணம் செய்யக்கூடிய பொன்னி நதி பாடல் பெருமளவில் பேசுபொருளானது. ஒவ்வொரு பாடலுக்காகவும் மணிரத்னம், பாடலாசிரியர்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் அனைவரும் மெனக்கெட்டிருந்தனர்.

கதை நடக்கும் சோழர் ஆட்சியின் காலகட்டத்திற்கேற்ப இசைக்கருவிகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து இசையமைத்திருந்தார் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான். படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் என சுற்றுலா சென்ற நம் மக்கள் அனைவரும் கோயிலை படம்பிடித்து பொன்னியில் செல்வன் பாடல்களை அதில் சேர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது.

திருச்சிற்றம்பலம்

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் இணைந்த D&A கூட்டணியின் மற்றுமொரு ஹிட் ஆல்பம் தான் திருச்சிற்றம்பலம். சாதாரண மனிதர்களின் குடும்பக் கதையான திருச்சிற்றம்பலம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

படத்தின் பாடல்கள் வெளியான நாளிலிருந்து தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கேட்கத் தொடங்கியது. தாய்க்கிழவி, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தேன் மொழி, Life of Pazham என அனைத்து பாடல்களும் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக அமைந்தது. இன்றும் பலரது காலர் டோன், ரிங் டோன்களாக இந்த பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நட்சத்திரம் நகர்கிறது

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அனைத்து திரைப்படங்களிலும் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் நட்சத்திரம் நகர்கிறது ஒரு மியூசிக்கல் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் இசைக்கான முக்கியத்துவம் கூடுதலாகவே இருந்துள்ளது.

காதலை மையப்படுத்தி அதனை சுற்றியுள்ள பிரச்னைகள் குறித்து பேசியுள்ள இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். ரங்கராட்டினம், பருவமே, பேரின்ப காதல், நகர்வாய் நட்சத்திரமே, காதலர் என அனைத்து பாடல்களும் உலகத்தரத்தில் இசையமைப்பாளர் தென்மாவின் இசையில் அற்புதமாக உருவாகியிருந்தது. பாடல்களின் காட்சியமைப்பும் இசைக்கு ஈடாக உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டான்

சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றாலே படத்தை தாண்டி பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனை டான் திரைப்படத்திலும் காண முடிந்தது. ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜல புல ஜங்கு, Bae, Private Party, முதல் நாயகன் என ஒவ்வொரு பாடலும் இளைஞர்கள் மனதில் நிற்கும் பாடலாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் நடனம் பாடல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகவும், ரசிக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.

Private Party, Bae என காதல் பாடல்களில் ரசிகர்களை கவர்ந்தார் பிரியங்கா மோகன். இப்படியாக 2022 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

நானே வருவேன்

யுவன் – செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்கள் பெரும் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி. அதைத் தாண்டி படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் மக்களால் கொண்டாடப்படும் பாடல்களாக அமையும். அதற்கு இந்த வருடம் வெளியான நானே வருவேன் திரைப்படமும் சாட்சி. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதமும் வழக்கம் போல அற்புதமாக இருந்தது. படத்தின் திகிலூட்டும் பின்னணி இசை, வீரா சூரா உள்ளிட்ட பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது.

முக்கியமாக ஒரே ஒரு ஊருக்குள்ள பாடலில் தனுஷின் நடனம், காதல் கொண்டேன் தனுஷ் நடனத்தை நம் கண்முன் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெந்து தணிந்தது காடு

யுவன் – செல்வராகவன் – தனுஷ் கூட்டணி போன்ற மற்றொரு வெற்றிக் கூட்டணி தான் ஏ.ஆர்.ரஹ்மான் – கெளதம் வாசுதேவ் மேனன் – சிம்பு கூட்டணி. இவர்கள் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்பை மக்களிடம் உருவாக்கியிருந்தது. அதற்கு படக்குழுவினரை தாண்டி மிக முக்கிய காரணமாக விளங்கியவர் கூல் சுரேஷ். வழக்கம் போலவே இந்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் – கெளதம் வாசுதேவ் மேனன் – சிம்பு கூட்டணி ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான பாடல்களை உருவாக்கியிருந்தனர்.

அதிலும் குறிப்பாக மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி சமூகவலைதளங்களை இன்று வரை வலுவாக ஆக்கிரமித்துள்ளது. மேலும் படத்தின் பின்னணி இசையும் படத்திற்கு மாபெரும் பக்கபலமாக அமைந்தது.

லவ் டுடே

கோமாளி பட இயக்குநரின் 2 வது படமான லவ் டுடே திரைப்படம் இந்த வருட இறுதியில் வெளியானது. இயக்குநரே கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படத்தின் வெற்றியில் யுவனின் இசைக்கும் பெரும் பங்கு உண்டு. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இளைஞர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது.

யுவனின் இசையில் சித்ஸ்ரீராம் குரலில் ‘என்னை விட்டு’ பாடல் தீயாய் அனைத்து இடங்களிலும் பரவியது. யுவனின் குரலில் உருவான இதே பாடலின் இன்னொரு Version-ம் மாபெரும் ஹிட். மற்ற பாடல்கள் அனைத்தும் வித்தியாசமானதாக 2K Kids-ஐ கவரும் வகையிலும் அதே சமயத்தில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியானதாகவும் இருந்தது. பின்னணி இசை மனதை வருடிச் சென்றது. இப்படியாக இந்த வருடத்தில் வெளியான ஒரு சிறந்த ஆல்பமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது.

Article By MaNo