Specials Stories

ஆக்ஷன் கிங் அர்ஜுன் பிறந்தநாள்

நடிகர் அர்ஜுன் தனது 56 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் அர்ஜுன் படங்கள் நடித்துள்ளார். தேசப்பற்று அதிகமாக இருக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்த இவரது பிறந்தநாள் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருவது ஒரு சிறப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

1981 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சிமடா மாரி சைஞா எனும் திரைப்படம் மூலம் நடிகராக தடம் பதித்தார் அர்ஜுன். கன்னடத்தில் வெளிவந்த மாலே பண்டு மாலே எனும் திரைப்படம் மூலம் தான் முதன்முதலில் அர்ஜுன் கதாநாயகனாக அறிமுகமானார். கன்னட மொழியில் ஏழு படங்கள் நடித்த அர்ஜுன் தனது எட்டாவது படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த நன்றி திரைப்படம் தான் அர்ஜுனின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல வித்தியாசமான கதைக் கரு உடைய படங்களில் அர்ஜுன் நடித்து வந்தார். 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் நடித்தார். இப்படம் அர்ஜுனின் திரையுலக வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பல ஆக்சன் படங்களில் அர்ஜுன் நடித்ததால் ரசிகர்கள் அர்ஜுனை ஆக்ஷன் கிங் என கொண்டாடினர்.

நடிப்பது மட்டுமின்றி அர்ஜுன் இதுவரை 12 படங்களை இயக்கவும் செய்துள்ளார். 1994 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் அவரை ஒரு வெற்றி இயக்குனராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது.

ஆக்சன் கிங் அர்ஜுன் இதுவரை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு முறை வாங்கியுள்ளார். 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படத்திற்காகவும், 1999 ஆம் ஆண்டு முதல்வன் திரைப்படத்திற்காகவும் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை அர்ஜுன் பெற்றார். இந்த இரு படங்களையும் இயக்கியது ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் பிரசாத் எனும் திரைப்படத்திற்காக 2012 ஆம் ஆண்டு அர்ஜுன் பெற்றார்.

கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரமும் அர்ஜுனுக்கு கைவந்த கலையே. கடல், இரும்புத்திரை போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மேலும் பல வெற்றிப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை. சூரியன் FM சார்பில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.