Specials Stories

நெருப்பை சுமந்த கருப்பை!

“அது எப்படி? எட்டயபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை”, இப்படித்தான் பாரதியைப் பற்றி கவியரசு வைரமுத்து வியந்து பேசுவார். அவர் சொன்னதைப் போலவே நிஜமாகவே நெருப்பாய் தான் வாழ்ந்தார் பாரதி.

ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் தூத்துக்குடியில் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாய் பிறந்த சுப்பையா, தனது 8வது வயதிலேயே அம்மாவை இழந்தார். தனது 11வது வயதில் கவிதை புனையும் ஆற்றலால் அருகில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து, முதல் கவிதையை அரங்கேற்றம் செய்தார். அதற்குப் பிறகு சுப்பையா பாரதியாக போற்றப்பட்டார்.

1897-ல் 14வது வயது இருக்கும் போது தன் வயதில் பாதி வயதான செல்லமாளை திருமணம் செய்த பாரதியின் வாழ்க்கை வசந்தங்களால் நிரப்பப்படவில்லை. சோதனைகளாலும், இழப்புகளாலும், போராட்டங்களாலும் வடிவமைக்கப்பட்டது. கொஞ்ச நாளில் பாரதியினுடைய தந்தை இறந்து போக, அவரின் இறப்புக்கு வந்த அத்தை குப்பம்மாளின் அறிவுரை படி காசிக்குச் சென்று ஜெய்நாராயணன் இன்டர்மீடியட் கல்லூரியில் சேர்ந்தார்.

அங்கு தான் அவருக்கான புதிய உலகமும், புதிய மொழிகளும், புதிய தேடல்களும் அறிமுகம் ஆகின. ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்கம் என பல மொழிகளை கற்றறிந்தார். அது மட்டுமல்ல அங்கு அடிக்கடி நடந்த அரசியல் மாநாடுகள் பாரதிக்குள் புதிய அரசியல் ஆர்வத்தையும், தேசிய நேசிப்பையும், போராட்ட குணத்தையும் உண்டாக்கின. காசியில் இருந்து எட்டயபுரம் திரும்பிய பாரதி எட்டயபுர அரண்மனையில் பணிக்குச் சேர்ந்தார்.

அக்கினி பந்தை பஞ்சு போர்வைக்குள் மூடி வைக்க முடியுமா என்ன? அப்படித்தான் அந்த தீக்கவிஞனின் வாழ்க்கை எட்டயபுர ஜமீன்தார்களின் அறிவு விருத்திக்காக பயன்படுத்தப்பட்டது. ஆழக்கடலாய் அறிவு பெற்றிருந்த பாரதி அலை கடலாய் பரந்து விரிய ஆசைப்பட்டார். 1941 ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். பொங்கிவரும் பெரும் வெள்ளத்தை மரக்கட்டைகள் போட்டு தடுக்கி விடவா முடியும்?

வெறும் 101 நாட்களில் ஆசிரியர் பணியில் இருந்து விலகி, சென்னையில் சுதேசி மித்ரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்தார். ஆனால் பாரதியின் வேகத்திற்கும் போராட்டத்திற்கும் சுதேசி மித்ரன் பத்திரிக்கையின் பக்கங்கள் அவ்வளவு அனுகூலமாக இல்லை. இந்த நேரத்தில் தான் “இந்தியா” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகி தனது நெருப்பு எண்ணங்களை விருப்பம் போல எழுதி மக்களுக்கு விருந்து வைத்தார்.

பாரதியின் வரிகளும் கவிதைகளும் நோக்கங்களும் மக்களிடத்தில் பெரும் மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. அதனால் பிரிட்டிஷ் அரசு அவரை கைது செய்ய நினைத்தபோது, பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இதனால் பிரிட்டிஷ் அரசால் பாரதியை ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.

இந்த நேரத்தில் தான் ஐரோப்பாவில் முதல் உலகப்போர் 1914 இல் இருந்து 1919 வரை நடந்தது. போரின் பிற்பகுதியில் 1918 இல் பிரிட்டனின் நேச நாடுகள் வெற்றி பெற்றதால், இனி தமிழகம் வந்தால் பிரச்சனைகள் இருக்காது என்று நினைத்த பாரதி மனைவியுடன் தமிழகம் வந்தார். ஆனால் தமிழக எல்லையிலேயே கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு 1918 டிசம்பர் 14 விடுதலையும் ஆனார் பாரதி.

இந்த நேரத்தில் தான் தனது செல்ல மகள் “தங்கம்மாளுக்கு” திருமணம் செய்ய எண்ணி பலரிடமும் கடன் கேட்டு மிகுந்த பொருளாதார நெருக்கடி சூழலில் தன் மகளின் திருமணத்தை முடித்தார். வறுமையும் சோதனைகளும் இருந்தாலும் தனது கொள்கையில் சமரசமாகாத அந்த மாபெரும் கவிஞன், வாழ்க்கை கொடுத்த நெருக்கடிகளால் மீண்டும் சென்னையில் சுதேசி மித்ரன் பத்திரிக்கையில் சேர்ந்தார்.

சென்னையில் ஜார்ஜ் டவுன், தம்பி செட்டி தெருவில் வாடகைக்கு குடி போன பாரதி, அங்குள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வதையும் அங்குள்ள யானைக்கு பழங்கள் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த மாதிரியான ஒரு நாளில் தான் பார்த்தசாரதி கோவிலில் இருந்த “அர்ஜுனன்” என்ற யானைக்கு பழம் கொடுக்கும் போது யானையால் தாக்கப்பட்டு தலையில் அடிபட்டு நோயாளியாக வீட்டில் இருந்தார்.

கொஞ்சம் உடல் நலம் தேறிய பாரதி 1921 அதே ஜூலை மாதத்தில் சென்னை பிராட்வே “ரத்னா கம்பெனியில்” எடுத்த ஒரு புகைப்படத்தை தான் இன்றும் நாம் போற்றிக் கொண்டிருக்கின்றோம். பாமரனுக்கும் புரிகின்ற வகையில் இலக்கியத்தை எளிமையாக்கிய முதல் கவிஞன் பாரதி தான். உரைநடையில் புதிய வீச்சையும், புதுக்கவிதையின் ஆரம்பமுமாய் இருந்த பாரதி, எழுத்தில் மட்டுமல்ல தனது வாழ்க்கையிலும் பெரும் புரட்சியை செய்தவன்.

பெண் அடிமையை எதிர்த்தார், சாதிகளை ஒழிக்க முற்பட்டார், எளிய மக்களின் நியாயங்களுக்காக உரக்க குரல் கொடுத்தார், இப்படி புரட்சி நெருப்பாய் திகழ்ந்த பாரதி என்னும் மாபெரும் சக்தி 1921 செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு அணைந்து போனார். 38 வயதில் பாரதி இறக்கின்ற பொழுது அவரது எடை வெறும் 45 கிலோ தான். வாழும் காலத்தில் வாழத்தெரியாத ஒரு புரட்சியாளர் பாரதி. அவரது இறப்புக்குப் பின் அவர் புகழ் உலகமெங்கும் பரவியது.

“தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்ன சிறு கதைகள் பேசி -மனம்
வாடி துன்பம் மிக உழன்று -பிறர்
வாட பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையான பின் மாயும்
பல வேடிக்கை மனிதர்களைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”

https://www.youtube.com/watch?v=pOH-986LPuw

என்று கடைசிவரை தன் கவிதையைப் போலவே கம்பீரமாய் வாழ்ந்த முண்டாசு கவிஞன் முறுக்கு மீசை பாவலன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11, 1882 இதே நாள் தான். 150 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு கவிஞனை ஒன்றர நூற்றாண்டுகள் கடந்தும் நாம் நினைவில் கொள்கிறோம் என்றால், அது வெறும் அவனின் எழுத்துக்காக மட்டுமல்ல. அவன் எழுத்தை போலவே நேர்மையாக வாழ்ந்த அவரின் வாழ்க்கைக்கும் சேர்த்து தான்.

Article By RJ K.S.Nadhan