Cinema News Specials Stories

சந்தோஷ் நாராயணன் பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

சந்தோஷ்நாராயணன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர். தமிழ் சினிமாவின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு பல புதிய முயற்சிகளை  மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு வருபவர்.

இவரை  சினிமா பிரபலமாக இசைக்கலைஞனாக பலரும் அறிந்திருப்பார்கள். அப்படி அறிந்திருந்தாலும் அதனைத் தாண்டி தனிப்பட்ட முறையில் சந்தோஷ் நாராயணன் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.

Independent Artist ஒருவர் சினிமாவில் வந்து வெற்றியடைய முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குபவர் இவர். தான் சினிமாவிற்கு வந்து சாதித்தது மட்டுமன்றி தன்னைப் போலவே Independent Artist-களாக இருந்து வந்த அவரது நண்பர்கள் பிரதீப்குமார், ஷான்ரோல்டன், அருண்ராஜா காமராஜ், GKB  அனைவரையும் தமிழ் சினிமாவிற்குள் நுழைத்தார்.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பாடல்களோடு பெயர் தெரியாமல் இருந்த பாடகர்கள், இவர் இசையில் பாடிய பிறகு வெளியில் தெரிய ஆரம்பித்தனர். கானா பாலா, அந்தோணி தாசன், மேயாத மான் படத்தில் பாடிய ஏரியா கானா பசங்க வரை அதற்கு உதாரணம்.

இவருக்கு பாரம்பரிய இசைக்கருவிகள் என்றால் மிகவும் பிடிக்கும். தான் பணிபுரியும் படங்கள் அனைத்திலும் படத்தின் கதைக்கும், அந்த களத்திற்கும் தகுந்தாற் போல அந்த மண்ணின் இசைக்கருவிகளை பயன்படுத்தக் கூடியவர். அட்டக்கத்தி, மெட்ராஸ் முதற்கொண்டு, தற்போது வரை அவரது படங்களில் இதனை கவனிக்க முடியும்.

சினிமா உலகில் அறிமுகமான ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பாட்டிற்கு இசையமைக்கும் போது  பாட்டு ஆரம்பிப்பதற்கு முன் ரெக்கார்டிங் தியேட்டரில் உண்டாகும் சலசலப்பு சத்தம், கிட்டார் மற்றும் வயலின் டியூன் செய்யும் சத்தம் ஆகியவற்றையும் சேர்த்து ரெக்கார்ட் செய்து பாட்டினை ஆரம்பிப்பதை ஒரு ஸ்டைலாகவே வைத்திருந்தார்.

பார்ப்பதற்கு சீரியஸான ஆளாக தெரிவார். ஆனால் மிகவும் ஜாலியான மனிதர். அனைவரையும் பயங்கரமாக கலாய்த்து விடுவார். பாட்டு பதிவு செய்யும்பொழுது டான்ஸ் ஆடிக்கொண்டே அந்த இடத்தை கலகலவென வைத்திருப்பார். அவ்வப்போது மிமிக்ரியும் செய்வார்.

ஆரம்பத்தில் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கவே மிகவும் கூச்சப்படுவார். ஆனால் இன்று மீடியா மேல் இருந்த அலர்ஜியெல்லாம் போய்விட்டது. எப்பொழுதும் ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டில் இருப்பது தான் அவருக்கு பிடிக்கும். வேறு எந்த ட்ரெஸ் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அவருக்கு Comfortable-ஆக இருக்காது. ஷார்ட்ஸ் டீசர்ட் உடன் தான் எப்பொழுதும் சுற்றுவார்.

சாப்பாட்டினை வீணடிப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. சில சமயங்களில் உணவு அதிகாமாக சமைத்து விட்டாலோ, மீந்து விட்டாலோ உடனடியாக தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விடுவார். மேலும் அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்துவிட்டு சாப்பிட முடியவில்லை அல்லது ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன் என்று கூறும் நண்பர்களை, சாப்பிட்டால் படத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று கூறி.. அவர்களை சாப்பிட வைத்து படத்திற்கு அழைத்துச் செல்வார்.

சத்யம் தியேட்டர் பாப்கார்ன் என்றால் சந்தோஷ் நாராயணனுக்கு கொள்ளை விருப்பம். அதற்காகவே எந்த படம் வந்தாலும் அங்கு சென்று பாப்கார்ன் வாங்கிக்கொண்டு படம் பார்த்து வருவார். ஒரு படம் விடாமல் அனைத்து படங்களையும் பார்த்து விடுவார்.

சமீபகாலமாக போரம் மாலில் பாலசோ திரையரங்கம் திறந்ததற்குப் பின்பாக அங்கு தான் படம் பார்த்து வருகிறார். கண்டிப்பாக இரவு 9:30 மணிக்காட்சியில் பாலசோ திரையரங்கத்திற்குச் சென்றால் எந்த படத்திலாவது இவர் இருப்பார். தன்னுடைய பாடல்களில் ஸ்ட்ரிங் கருவிகளை எக்ஸ்ப்ளோர் பண்ணுவதில் மிகவும் விருப்பமுடையவர். பெரும்பாலும் அனைத்து படங்களிலும் அகார்டியன் இசைக்கருவியை பயன்படுத்துவார்.

இசையால் அனைத்தையும் செய்ய முடியும். உலகில் அன்பை பரப்புவதற்கான ஒரே வழி இசைதான் என நம்புபவர். அதனை எப்பொழுதும் சொல்லிக்கொண்டும் இருப்பார். இருக்குமிடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டுமென நினைப்பவர் சந்தோஷ் நாராயணன். வேலையில்லாத சமயங்களில் வீட்டினை சுத்தம் செய்துகொண்டே இருப்பார்.

நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் கூட அவர்களின் வீட்டினை சுத்தம் செய்து அடுக்கி வைத்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார். ஒருகட்டத்தில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு அடுத்ததாக வீதியில் இறங்கிவிட்டார். தற்போது அவரது ஏரியாவை சுத்தம் செய்துகொண்டு இருக்கிறார்.

கிரிக்கெட் இவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. அவரது ஏரியாவில் புழக்கத்தில் இல்லாமல் இருந்த காலி இடத்தின் ஓனரிடம் பேசி, அந்த இடம் முழுக்க சுத்தம் செய்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கென தயார் செய்து கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக் மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் அங்கு கிரிக்கெட் விளையாடுவதை அடிக்கடி பார்க்கலாம்.

குழந்தைகள் என்றால் இவருக்கு உயிர். குழந்தைகளை பார்த்தால் போதும் முதல் வார்த்தையிலேயே கண்ணே  என கொஞ்சத் தொடங்கி விடுவார். அவரது வீட்டிலும் கண்ணே எனும் வார்த்தையைத்தான் அவர் அதிகம் பயன்படுத்துவார். தினமும் சாயங்காலம் நடைபயிற்சி போகும்போது பாக்கெட்டில்  சாக்லேட்கள் வைத்திருப்பார். வழியில் பார்க்கும் சிறுவர்களுக்கெல்லாம் சாக்லேட் கொடுத்துக் கொண்டே செல்வார்.

பிரபல  இசைக்கலைஞன் என்பதைத் தாண்டி, இன்று பிறந்தநாள் காணும் வெகுளித்தனமும் அன்பும் நிறைந்த சந்தோஷ் நாராயணன் எனும் சிறந்த மனிதனுக்கு தித்திக்கும் சாக்லேட்டுகள்.

Article By MaNo

About the author

MaNo