Specials Stories

இசைப் பேரரசி M.S. சுப்புலக்ஷ்மி !!!

” குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ” என்று ஒலிக்கும் போதெல்லாம் நம் வாழ்வின் குறைகள் அனைத்தும் வற்றி போனதாய் உணரச்செய்தது. மனதை மயக்கி, கேட்போர் உள்ளங்களை உருகச்செய்து , இறை பக்தியில் கண்களில் நீர் சுரக்க வைக்கிறது, சில தருணங்களில் ஓங்கி ஒலித்து நமக்கு தைரியமூட்டுகிறது, அந்தக் குரல் தான் இசை பேரரசி, கோகிலக்காண இசைவாணி, கர்நாடக இசையின் அருஞ்சொற்பொருள் என அனைவராலும் போற்றப்பட்ட M.S. அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பெற்ற மதுரை சண்முகவடிவு சுப்புலஷ்மி அவர்களின் குரல்.

1920களில் மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளியில் ஓர் இசைக்கச்சேரி, அதில் வீணை கலைஞர் சண்முகவடிவு அம்மாள் என்பவர் தனது மகளுடன் கலந்து கொள்கிறார். கச்சேரி ஆரம்பித்த சிறிது நேரத்தில் அவரது கச்சேரி இடையிலேயே நிறுத்தப்படுகிறது. அவர் அங்கு விளையாடிக்கொண்டிருந்த தனது பத்து வயது மகளை அழைத்து பாட சொல்கிறார். கச்சேரியை ரசித்து கொண்டிருந்த அனைவருக்கும் ஆச்சரியம், இந்த சிறுமி என்ன பெரிய பிரமாதமாய் பாடி விடப்போகிறார் இவரை போய் பாட சொல்கிறார்களே என்று. ஆனால் அங்கு கூடியிருந்த அனைவரும் வியந்து மெய்மறக்கும் வண்ணம் சிறிதளவு பயம் கூட இல்லாமல் தனது கம்பீர குரலால் “ஆனந்த ஜா“ என்னும் மராத்திய மொழி பாடலை பாடினாராம் அந்த பத்து வயது சிறுமி.

When M S Subbulakshmi brought Meera to life | Business Standard News

பின்பு ஷண்முக வடிவு அம்மாள் ஒரு நிறுவனத்தின் அழைப்பை ஏற்று தனது இசையை இசை தட்டாக வெளியிட மெட்ராஸ் மாநகரத்திற்கு மகளுடன் வந்தார். “ மரகத வடிவும் செங்கதிர் வேலும் “ என்ற பாடலை பாடினாராம். அந்த காந்த குரலால் ஈர்க்கப்பட்ட அந்த இசை நிறுவனம் அதை பதிவேற்றி இந்த பாடலை பாடியவர் பத்து வயது சிறுமி என வெளியிட்டதாம் .

பெண்கள் பொதுவெளியில் செயல்பட கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருந்த கால கட்டம் அது. இசை போன்ற கலை துறைகளில் பார்வையாளர்களாய் மட்டுமே பெண்களை அனுமதித்தனர். அந்த காலகட்டத்திலும் மேடை ஏறி பாடல்களை பாடி பல பெண்களின் கனவுகளுக்கு வித்திடடவர். M.S அவர்களின் தெய்வீக முகம், கணீர் குரலுக்காகவே 1938-ஆம் ஆண்டு இயக்குனர் கே.சுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய சொந்த படமான சேவாசதனம் படத்தில் இவரை நடிக்க வைத்தார். மயக்கும் இவரது குரல் மற்றும் முக பாவத்திற்க்காகவே அந்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது.

M.S. Subbulakshmi Bengali Songs Download- New Bengali Songs of M.S.  Subbulakshmi, Hit Bengali MP3 Songs List Online Free on Gaana.com

1945 ஆம் ஆண்டு இவர் நடித்த மீரா திரைப்படத்தின் மீராபாய் கதாபாத்திரம் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார், பின்பு ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இந்த படம் குறித்த இன்னொரு சுவாரசிய வரலாற்று சம்பவமும் உண்டு. இப்படத்தில் ஆற்றில் மூழ்கும் மீராவை கிருஷ்ணர் காப்பற்றுவது போல் ஒரு காட்சி உண்டு. அந்த காட்சியை படமாக்கும் போது நிஜமாகவே M.S அவர்கள் ஆற்றில் தவறி விழுந்து விட்டாராம், அவரை காப்பாற்றிய படகோட்டியின் பெயர் கிருஷ்ணர். ஆகவே அந்நாளில் M.S அவர்களை நிஜ மீராகவே மக்கள் நம்பினர்.

மீரா படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடித்தாலும் குறைவாகவே இருக்கும் என்பதால் தான் அவர் திரைப்படங்களில் மீராவிற்கு பின் நடிக்கவில்லை எனவும் சிலர் சொல்வதுண்டு. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் தெலுங்கு , மலையாளம் , மராட்டி, ஹிந்தி ,பெங்காலி ,ஆங்கிலம் என பல மொழிகளில் பாடி பல மொழி ரசிகர்களையும் கவரும் வல்லமை கொண்ட M.S முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் தன் கணவரின் தலை அசைப்பை வைத்தே கச்சேரியின் தரத்தை அறிந்து கொள்வாராம்.

M. S. Subbulakshmi: Divine singer - Independence Day Special News - Issue  Date: Aug 30, 2021

1975 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் M.S பாடிய வெங்கடேச சுப்ரபாதத்தை ஒளிபரப்பியது. இன்றளவும் திருப்பதி ஏழுமலையானை துயில் எழுப்பும் குரலாக இவரது குரல் இருந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் ஒரு வகை நீல கலர் பட்டுப்புடவைக்கு, M.S அவர்களை கவுரவிக்கும் விதத்தில் M.S Blue என பெயர் சூட்டப்பட்டது இவரது தனி சிறப்பு.

எந்த குறிப்பும் இல்லாமலேயே 2500 பாடல்கள் வரை பாடும் திறமை படைத்த M.S அம்மாவின் குரல் குறிப்பறிந்து நம் மனதை ஆற்றுப்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல. சாமானிய பெண்களும் கர்நாடக சங்கீதம் பயிலலாம் என பலரின் இசை கனவிற்கு வித்திட்ட இசைப்பேரரசி இவர். இவ்வுலகில் இசை இருக்கும் வரை இக்கோகில வாணியின் புகழ் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்..

Article by RJ Dharshini