மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாள் இன்று. மனதை விட்டு நீங்காத பல தமிழ் பாடல்களை நமக்கு கொடுத்த கவிஞர் நா. முத்துகுமார்.
காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரண நடுநிலை குடும்பத்தில் பிறந்த நா. முத்துக்குமார் சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதிலும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் வேலை செய்துள்ளார். அதன்பின் சீமான் இயக்கத்தில் வெளிவந்த வீரநடை திரைப்படத்தில் முதன் முதலில் பாடலாசிரியராக அவதாரம் எடுத்தார்.
1999 ஆம் ஆண்டு முதல் பல படங்களுக்கு பாடலாசிரியராக இருந்துள்ளார் நா. முத்துக்குமார். விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற “உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் நா. முத்துக்குமாருக்கு முதல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.
அதன்பின் சலாம் குலாமு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, தாவணியே என்ன மயக்குறியே போன்ற பாடல்கள் அந்த வருடத்தின் மக்கள் கொண்டாடும் பாடல்களாய் அமைந்தது.
நா. முத்துக்குமார் இயற்றிய பாடல்களில் பல பாடல்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தை நமக்கு புரிய வைக்கும்படி அமைந்திருக்கும். எளிமையான வரிகளில் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கி அனைவரும் எளிதில் புரியும் வண்ணம் நா. முத்துக்குமாரின் வரிகள் அமைந்திருக்கும்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே நா. முத்துக்குமார் எழுதியிருப்பார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்த அனைத்து பாடல்களுமே 2004 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. அதிலிருந்து யுவன் சங்கர் ராஜா – நா. முத்துக்குமார் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி ஆகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே நா. முத்துக்குமாரின் பொக்கிஷ ஆல்பமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த ஆல்பத்தில் அமைந்த “ஒரு நாளில்” பாடல் வாழ்க்கையின் ஆழத்தை கேட்போருக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
நா முத்துக்குமார் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். தங்க மீன்கள் படத்தில் அமைந்த “ஆனந்த யாழை” பாடலுக்காகவும் சைவம் திரைப்படத்தில் அமைந்த “அழகே” பாடலுக்காகவும் தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா. முத்துக்குமார் வென்றுள்ளார்.
தூசிகை, பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா போன்ற கவிதை புத்தகங்களையும் நா. முத்துக்குமார் இயற்றியுள்ளார். இதுமட்டுமின்றி கிரீடம், ஜெகதீஸ்வரன் படங்களுக்கு நா. முத்துக்குமார் வசனமும் எழுதியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலையால் நீண்டகாலம் அவதிப்பட்டு வந்த நா. முத்துக்குமார் அந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் காலமானார். அவரது இழப்பு கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாய் அமைந்தது. அவரது இறப்பிற்கு பின்பும் அவர் எழுதிய பாடல்கள் திரைப்படங்களில் வெளியானது.
2019ஆம் ஆண்டு வெளிவந்த பெட்டிக்கடை திரைப்படத்தில் அமைந்த “சுடலைமாடசாமி கிட்ட” பாடல் தான் நா. முத்துக்குமார் எழுதி கடைசியாக வெளிவந்த திரைப்பட பாடல். நா. முத்துக்குமார் உலகைவிட்டு சென்றாலும் அவரது பாடல்கள் நம் மனதை விட்டு ஒருபோதும் நீங்காது என்பதே உண்மை.