Cinema News Specials Stories

தியேட்டரில் இனி இந்த உணவுகளுக்கு அனுமதி உண்டு!

தியேட்டர்ல படத்துக்கு வசூலாகுற காச விட பாப்கார்னுக்கு வசூலாகுற காசு அதிகம். அதனால தான் நிறைய தியேட்டர்ஸ்ல என்ன பண்றாங்கனா வெளில இருந்து எடுத்து வர உணவு பொருட்களுக்கு இங்க அனுமதி கிடையாதுனு சொல்லிடுறாங்க.

அதையும் மீறியோ மறந்தோ ஏதாவது கொண்டு போனா எண்ட்ரன்ஸ்லயே செக் பண்ணி அத வாங்கி வச்சுட்டு தான் உள்ள விடுறாங்க. மத்தபடி தியேட்டர் கேண்டீன்ல கிடைக்குற எல்லாமே நாம காசு கொடுத்து வாங்கி சாப்டுக்கலாம். இப்படி இருக்க இந்த விஷயம் சமீபமா இந்திய அளவுல பேசுபொருளாயிருக்கு.

என்ன காரணம்னா சமீபத்துல ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் வெளில இருந்து கொண்டு வர தியேட்டர் உணவுப்பொருள், குளிர்பானங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தடைவிதிக்கக் கூடாதுனு உத்தரவு பிறப்பிச்சிருந்துது. அதை எதிர்த்து தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செஞ்சாங்க.

அதுமட்டுமில்லாம தியேட்டர்ஸ் தனியாருக்கு சொந்தமானது. மக்களுக்கு இடைஞ்சல் இல்லாம தியேட்டர் உரிமையாளர்கள் விதிமுறைகள் விதிக்கலாம். இது ஒரு பொழுது போக்கு அரங்கம். பொழுத போக்க தான் பார்வையாளர்கள் இங்க வராங்க. சத்துணவு கொடுக்க இது ஜிம் கிடையாது. பொழுதுபோக்கு இடங்கள்ல இருக்க தீனி தான் இங்க இருக்கும். அவங்ககிட்ட நீங்க உணவு பொருட்கள் வாங்கி தான் ஆகனும்னு யாரும் கட்டாயப்படுத்துறது கிடையாது.

அவங்க வெளிய இருந்து எது வேணா எடுத்து வந்து சாப்ட்டு தியேட்டர்ல எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு துடைச்சிட்டு போனா யார் சுத்தம் செய்றது அப்படினு அவங்க தரப்பு வாதத்த வச்சிருக்காங்க. இந்த வழக்க விசாரிச்ச உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிய இருந்து கொண்டு வர உணவுப்பொருள், குளிர்பானங்கள தடை செய்ய தியேட்டர் உரிமையாளர்களுக்கு உரிமை இருக்குனு சொல்லியிருக்காங்க.

அதே சமயம் தியேட்டருக்கு வரவங்களுக்கு சுத்தமான குடிநீர் இலவசமா கிடைக்குறதையும் தியேட்டர்கள் உறுதி செய்யனும்னும் சொல்லியிருக்காங்க. இன்னொரு விஷயம் என்னன்னா குழந்தைங்கள கூட்டிட்டு தியேட்டர் வரவங்க குழந்தைகளுக்கு தேவையான உணவ கொண்டு வர அனுமதிக்கனும்னும் சொல்லிருக்காங்க.

அதுமட்டுமில்லாம ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தோட இந்த உத்தரவு செல்லாதுனும் சொல்லி அத ரத்து பண்ணியிருக்காங்க. இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்னன்னா தியேட்டருக்கு போய் ஸ்நாக்ஸ் வாங்க முடியாதவங்க போறதுக்கு முன்னாடியே எதாவது சாப்ட்டு தியேட்டருக்கு போய்டலாம்.

இதனால ஸ்நாக்ஸ் செலவு மிச்சம். அதுமட்டுமில்ல படம் நல்லாலனா சாப்டதுக்கும் அதுக்கும் அப்டியே தூங்கிடலாம். இல்ல தியேட்டர் ஸ்நாக்ஸ் தான் வேணும்னா அத வாங்கி சாப்டுக்கலாம். படத்த நம்பி இருக்க தியேட்டர் பிஸ்னஸ் ஒரு பக்கம்னா பாப்கார்ன நம்பி இருக்க தியேட்டர் பிஸ்னஸ் இன்னொரு பக்கம். அது தியேட்டர் காரங்க கைலயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க.

இனி நாம பண்ண வேண்டியது, இலவசமான சுத்தமான குடிநீர் எந்த தியேட்டர்லயாவது இல்லனா மேனேஜர் கிட்ட போய் கேக்கலாம். காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கிதான் தண்ணி குடிக்கனும்னு இனி அவசியம் கிடையாது. ரொம்ப சுத்தம் பாக்குறவங்க வீட்ல இருந்தே தண்ணீர் பாட்டில் கொண்டு போயிடுறது நல்லது. இத இனி நாம பாலோ பண்ணலாம்.

Article By MaNo