Cinema News Specials Stories

முத்தழக யாராவது மறக்க முடியுமா?

Priyamani

எத்தனை வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் பிரியாமணி நிலைத்து நிற்க பருத்தி வீரன் என்ற ஒற்றைத் திரைப்படம் போதும்.

பிரியாமணி நம்மிடம் முத்தழகை அறிமுகப்படுத்தினார் என்று சொல்வதை காட்டிலும், பிரியாமணியை நம்மிடம் அறிமுகப்படுத்தியது முத்தழகு கதாபாத்திரம் என்று சொல்வது தான் பொருத்தமானது. பள்ளிக்கூடம் செல்லும் கிராமத்துப் பெண் முத்தழகாக இன்றும் அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

பருத்தி வீரன் நடிகர் கார்த்தியின் அறிமுகத் திரைப்படம். இயக்குநர் அமீரின் கைவண்ணத்தில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் பேசப்பட்டது. சித்தப்பா கதாபாத்திரம் தொடங்கி அவர்களுடன் வரும் சிறுவன், பொணந்தின்னி, டக்லஸ், முத்தழகின் அம்மா, அப்பா, பாட்டி என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

Paruthiveeran (2007) - IMDb

கிராமத்து காதலை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகி பாத்திரங்களை சுற்றியே கதை நகரும். இதில் கார்த்தியின் நடிப்பைத் தாண்டி, கதாநாயகி பிரியாமணி அதீத கவனம் ஈர்த்திருப்பார். சிறுவயதில் தனது உயிரை காப்பாற்றிய அத்தை மகன் பருத்தி வீரனை(கார்த்தி) துரத்தித் துரத்தி காதலிக்கும் பெண் முத்தழகு(பிரியா மணி).

ஏற்கனவே இருக்கும் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக பெற்றோர்கள் முத்தழகின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்க, காதலிப்பவனும் கண்டுகொள்ளாமல் இருக்க, ஒரு கட்டத்தில் பருத்தி வீரன் முன்பு கதறி அழுது தனது காதலை வெளிப்படுத்தி தனது நிலை குறித்தும் விவரிப்பார் முத்தழகு. அந்த ஒரு காட்சிக்காக எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

Paruthiveeran'

அதன்பின் இருவரும் காதலிக்க வீட்டில் விஷயம் தெரிந்து அடி வாங்குவதும், அடி வாங்கிய பின் தட்டு நிறைய சோறு போட்டு கறிக்குழம்பு ஊற்றி அழுது கொண்டே சாப்பிடுவதும் என பார்வையாளர்கள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது முத்தழகு கதாபாத்திரம். எப்பொழுது பார்த்தாலும் இந்த கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பு துளியும் குறையாது. அதனால் தான் முத்தழகு கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார் பிரியாமணி.

தற்போது வரை தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதேபோல் தொடர்ந்து மேலும் நிறைய படங்கள் நடிக்கவும், மீண்டும் தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கவும் சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo