Specials Stories

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினங்கள் | பகுதி – 2

Endangered-Animals-Part-2

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை ‘அரிய வகை உயிரினங்கள்’ என உலக நாடுகளும், சில அமைப்புகளும் இணைந்து வகைப்படுத்தி அவற்றை பாதுகாத்தும் வருகின்றன. அப்படியிருக்கும் அரிய வகை உயிரினங்களில் குறிப்பிட்ட 4 உயிரினங்கள் குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம்.

அதே போன்று அழியும் நிலையில் உள்ள அடுத்த 4 உயிரினங்கள் பற்றியும், அவற்றின் குணாதிசயங்கள் பற்றியும் இப்போது பார்ப்போம்.

  1. பேரரச மற்றும் அரச பென்குயின்கள்

பென்குயின்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பறக்கத் தெரியாத அரிய வகை பறவை இனம் ஆகும். இவை பெரும்பாலும் பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ முடியாத அண்டார்டிகா பகுதியில் பென்குயின்கள் அதிகம் வாழ்கிறது.

நீருக்கடியில் உணவு தேடுவதற்காக அதிக நேரம் செலவிடும் இவை கிட்டத்தட்ட மணிக்கு 25 கிமீ வேகத்தில் நீந்தக் கூடியவை. இவை நீருக்கடியில் நீந்துவதை பார்ப்பதற்கு பறப்பது போலவே இருக்கும். இவற்றின் இறக்கைகள் நீந்துவதற்கேற்ப துடுப்பு போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். சிறிய வகை மீன்களே இவற்றின் முதன்மையான உணவு.

பென்குயின்களில் 10க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவற்றில் பேரரச பென்குயின்கள் (Emperor Penguins), அரச பென்குயின்கள் (King Penguins) தான் அளவில் பெரியவை. உலகத்திலேயே அதிக உயரமும், எடையும் கொண்ட பென்குயின்கள் பேரரச பென்குயின்கள் ஆகும். இவை 1.1 முதல் 1.3 மீட்டர் உயரத்துடனும், 20 முதல் 45 கிலோ எடையுடனும் காணப்படுகின்றன.

Video – NAT GEO WILD

பேரரச பென்குயின்களுக்கு அடுத்தபடியாக அதிக எடையுடன் காணப்படுபவை அரச பென்குயின்கள். இவை கிட்டத்தட்ட 1 மீட்டர் உயரத்துடனும், 11 முதல் 16 கிலோ எடையுடனும் காணப்படுகின்றன. பேரரச பென்குயின்கள் மற்றும் அரச பென்குயின்களின் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், மார்பு மற்றும் காதுகளுக்கு அருகில் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும்.

இது தவிர்த்து வாழிடங்கள், உருவ அமைப்புகளை பொறுத்து வகைப்படுத்தப்பட்ட வேறு சில பென்குயின் வகைகளும் உள்ளன.

அண்டார்டிகாவில் அதிகளவில் வாழும் பேரரச மற்றும் அரச பென்குயின்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருடா வருடம் கும்பலாக அண்டார்டிகாவில் அமைந்துள்ள Halley Bay எனும் பகுதிக்கு சென்று திரும்பும். வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்விற்காக கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பென்குயின்கள் Halley Bay பகுதிக்கு வருகை தரும்.

Video – NAT GEO WILD

இதற்கான முக்கிய காரணம் பென்குயின்கள் அப்பகுதியை மிகவும் பாதுகாப்பானதாக உணர்வதே ஆகும். ஆனால் உலக வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல் போன்ற இயற்கை விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு சில வருடங்களாக பென்குயின்கள் Halley Bay பகுதிக்கு வருவதில்லை. இதனால் இவற்றின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது.

உலக வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட பருவ நிலை மாற்றங்களால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Halley Bay பகுதிக்கு பேரரச மற்றும் அரச பென்குயின்கள் வராதிருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான விசயமாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

  1. ஆவுளியா அல்லது கடல் பசு

ஆவுளியா அல்லது கடல் பசு (Dugong) என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கடல் வாழ் உயிரினம் ஆகும். உலகிலுள்ள பாலூட்டிகளில் நீரில் வாழக்கூடிய தாவர உண்ணி இது மட்டுமே. இவை 400 கிகி எடையும், 3 மீட்டர் நீளமும் கொண்டவை. அளவில் பெரிதாக இருந்தாலும் இது ஒரு அமைதியான உயிரினமாகும். இவை ஒரு நாளைக்கு 40 கிலோ தாவரங்களை உட்கொள்கிறது.

ஏறக்குறைய இதே போலவும் குறிப்பிட்ட சில மாற்றங்களுடனும் மேன்டீஸ் (manatees) மற்றும் செரினியா (Sirenia) வகை கடல் பசுக்களும் உள்ளன. இந்த (Dugong) கடல் பசுக்கள் குறிப்பாக தமிழக கடற்கரை ஓரமாக மன்னார் வளைகுடா பகுதிகளிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகிறது. மேலும் (Dugong) கடல்பசு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநில விலங்காக உள்ளது.

அதுமட்டுமின்றி கிழக்கு ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், செங்கடல், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் கிட்டத்தட்ட 40 நாடுகளிலும் காணப்படும் இவை அதிக எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா கடற்பகுதியில் காணப்படுகிறது.

Video – NAT GEO WILD

ஆழம் குறைந்த பகுதிகளில் வாழக் கூடிய ஆவுளியாக்கள் நுரையீரல் மூலம் சுவாசிக்கக் கூடியவை. 6 நிமிடங்களுக்கு ஒருமுறை நீரின் மேற்பரப்பிற்கு வந்து தலையின் மேற்பகுதியில் அமைந்துள்ள நாசித் துவாரங்கள் மூலமாக சுவாசிக்கிறது. மணிக்கு 13 மைல் வேகத்தில் மெதுவாக நீந்தக் கூடியவை.

அந்த காலத்தில் இவை நீந்தும் அழகை பார்த்த மீனவர்கள் கடல் கன்னி என கடல் கன்னி என கட்டுக்கதைகள் கூறத் தொடங்கியுள்ளனர். எனவே இவை கடல் கன்னி என்ற பெயரில் மட்டுமின்றி கடல் பசு, கடல் பன்றி, கடல் ஒட்டகம் என பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

ஆவுளியாக்கள் குறித்த சுவாரசியமான ஒரு விஷயம் என்னவெனில், சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த யானை போன்ற மிருகம் ஒன்று நீருக்குள் சென்று பரிணாம வளர்ச்சியடைந்து ஆவுளியாவாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யானையைப் போன்று இவற்றிற்கு சிறிய அளவிலான தந்தங்கள் உண்டு.

Video – NAT GEO WILD

3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் ஆவுளியாக்களின் கர்ப்பகாலம் 1 வருடமாகும். பிரசவத்திற்கு ஒரு குட்டி மட்டுமே போடுகிறது. இவற்றின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள். இனப்பெருக்கம் மிக மெதுவாக நடைபெறுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இவை திமிங்கலம், சுறா மற்றும் முதலை ஆகியவற்றால் வேட்டையாடப்படுவதோடு, எண்ணெய்க்காகவும், உணவுக்காகவும் மற்றும் பல காரணங்களுக்காகவும் மனிதர்களால் அதிகளவில் வேட்டையாடப்படுகிறது. எனவே தற்போது அழிவை நோக்கி செல்லும் உயிரினங்களில் ஒன்றாக ஆவுளியாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கடல் பூங்காக்களில் ஆவுளியாக்கள் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  1. Liger

Liger என்ற வார்த்தையை கடந்த வருடத்திலிருந்து அதிகம் கேட்டிருப்போம். விரைவில் திரைக்கு வரவுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் தலைப்பு தான் இது. இதற்கு முன்பு வரை நிறைய பேருக்கு Liger என்றால் என்ன என்பது தெரிந்திருக்காது, இப்போது தெரிந்து கொள்வோம்.

(Lion +Tiger = Liger) என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலிக்கு இடையே நடைபெறும் கலப்பினச் சேர்க்கை மூலம் பிறக்கும் கலப்பு உயிரினமாகும். இதேபோல் ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினம் புலிச்சிங்கம் (Tiger + Lion = Tigon) ஆகும்.

உலகிலுள்ள அனைத்து பூனை குடும்பங்களிலும் ஒப்பிடுகையில் Liger உருவத்தில் பெரிதானதாக உள்ளது. சிங்கம், புலி இரண்டை காட்டிலும் உருவத்தில் பெரியது. இவை கிட்டத்தட்ட 4.5 அடி உயரமும், 10 – 12 அடி நீளமும், 350 – 550 கிலோ எடையும் கொண்டவை. இவ்வளவு பெரிய உருவத்தை கொண்டிருந்தாலும் மணிக்கு 80 கிமீ வேகத்தில் பாயக் கூடியவை.

Video – NAT GEO WILD

அதே போல் சிங்கத்தின் அதிக பட்ச வாழ்நாள் 10 – 15 ஆண்டுகள், புலியின் அதிக பட்ச வாழ்நாள் 8 – 10, சிங்கப்புலியின் அதிக பட்ச வாழ்நாள் 13 – 18 ஆண்டுகள். 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள Hogle Zoo-வில் பிறந்த ‘Shasta’ என பெயரிடப்பட்ட சிங்கப்புலி 1972 வரை கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது.

சிங்கப்புலிகள் பெரும்பாலும் நீந்துவதை விரும்புகின்றன. இது புலியின் ஒரு குணம், அதே சமயம் கூடிப் பழகுபவையாக உள்ளன. இது சிங்கத்தின் பண்பு. இப்படி சிங்கம், புலி 2 விலங்குகளின் தோற்றம் மற்றும் குணத்தையும் கொண்டிருக்கின்றன சிங்கப்புலிகள்.

Liger மற்றும் Tigon ஆகியவை காடுகளில் பெரும்பாலும் உருவாவதில்லை, உயிரியல் பூங்காக்களில் தான் உருவாகின்றன. அதுவுமே மிகவும் அரிதாக நடந்தால் தான் உண்டு. உலகம் முழுவதும் 100-க்கும் குறைவான சிங்கப்புலிகளே உள்ளன.

  1. மலைக் கொரில்லாக்கள் (mountain gorilla)

கிழக்கத்திய கொரில்லா இனத்தின் இரண்டு உட்பிரிவுகளில் ஒன்று மலைக் கொரில்லா. இவைகளில் ஒரு பிரிவு மத்திய ஆப்பிரிக்காவின் விருங்க எரிமலைகள், தென்மேற்கு உகாண்டா, வடமேற்கு ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளின் தேசியப் பூங்காக்களில் காணப்படுகிறது. மற்றொரு இனம் எளிதல் செல்ல இயலாத உகாண்டாவின் பிவிண்டி தேசியப் பூங்காவில் உள்ளது.

மலைக் கொரில்லாக்கள் 4 முதல் 6 அடி உயரமும், 135 முதல் 220 கிலோ எடையும் கொண்டவை. காடுகளில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், இலைகளை பெரும்பாலும் உண்ணக் கூடியவை. அதே சமயம் சிறிய பூச்சிகள் மற்றும் விலங்குகளையும் உண்கின்றன.

மலைக்கொரில்லாக்கள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் காடுகள் அழிப்பு, இட ஆக்கிரமிப்பு, விலங்கு கடத்தல் என மனிதர்கள் பல்வேறு வகையில் அவற்றை வேட்டையாடியதே ஆகும்.

Video – NAT GEO WILD

அச்சுறுத்தலுக்குள்ளான இனமாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பின்பு மலைக் கொரில்லாக்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. 2010-இல் 500-க்கும் குறைவாக இருந்த இவற்றின் எண்ணிக்கை 2015-இல் 900-ஆக உயர்ந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 1000க்கும் மேல் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி ருவாண்டாவில் உள்ள கொரில்லாக்களை பார்ப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த நாட்டிற்கான 90% வருவாய் சுற்றுலாத்துறையில் இருந்தே கிடைப்பதாகவும், அதில் இந்த கொரில்லா சுற்றுலா முக்கியப்பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் மேலும் 4 உயிரினங்கள் குறித்து அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்.

Article By MaNo

About the author

MaNo