Specials Stories

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினங்கள் | பகுதி – 3

Endangered-Animals-Part-3

உலகில் எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை ‘அரிய வகை உயிரினங்கள்’ என உலக நாடுகளும், சில அமைப்புகளும் இணைந்து வகைப்படுத்தி அவற்றை பாதுகாத்தும் வருகின்றன.

அப்படியிருக்கும் அரிய வகை உயிரினங்களில் பாண்டா, பனிக்கரடி, கோலா கரடி மற்றும் அசையாக் கரடி முதலிய உயிரினங்கள் குறித்து முதல் பகுதியிலும், அடுத்ததாக பேரரச மற்றும் அரச பென்குயின்கள், கடல் பசு, Liger மற்றும் மலைக் கொரில்லாக்கள் குறித்து இரண்டாவது பகுதியிலும் பார்த்தோம்.

தற்போது மூன்றாவது பகுதியில் அதே போன்று அழியும் நிலையில் உள்ள அடுத்த 4 உயிரினங்கள் பற்றியும், அவற்றின் குணாதிசயங்கள் குறித்தும் பார்ப்போம்.

  1. சடை எருமை (Yak)

மிகவும் உயரமான இமயமலைப் பகுதிகளில் காணப்படும் நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட மாட்டு இனத்தை சேர்ந்த உயிரினம் யாக் (Yak) அல்லது சடை எருமை ஆகும். இந்த யாக்குகள் மாட்டு இனங்களிலேயே மிகவும் பெரியது.

இந்தியா, நேபாளம், பூடான், திபெத், மங்கோலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இந்தியாவில் அருணாசலப் பிரதேசம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ளன. நன்கு வளர்ந்த யாக்குகள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும், 325 முதல் 1000 கிலோ எடையும் கொண்டிருக்கும். வருடத்திற்கு ஒரு குட்டி மட்டும் போடுகின்றன.

இவையும் மாடுகளை போலவே பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச் செல்லவும் மனிதர்களால் வளர்க்கப்படுகிறது. இந்த யாக்குகளின் காய்ந்த சாணம் திபெத்திய பீடபூமியில் ஒரு முக்கிய எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அப்பகுதிகளில் மரங்கள் இல்லாத நிலையில் இதுவே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாக உள்ளது.

Video : Earth Fire

மேலும் யாக்கின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது. மேலும் 10% கொழுப்பு சத்து கொண்ட யாக்கின் பால் தங்க நிறத்தில் காட்சியளிப்பதால் தங்க திரவம் எனவும் அழைக்கப்படுகிறது. திபெத் நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ள ஸால்ட் டீ இந்த பாலில் தயாரிக்கப்படுவதாகும். மேலும் யாக்குகளின் உரோமத்தில் கம்பளியும் தயாரிக்கப்படுகிறது.

இமய மலை பகுதிகளில் காணப்படும் விலங்குகளான பனிச்சிறுத்தை, ஓநாய்கள், கரடிகள் மட்டுமின்றி மனிதர்களாலும் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு வந்த யாக்குகள் 1996 வரையிலும் அழியும் உயிரினங்கள் பட்டியலில் இருந்து வந்தது. மேலும் சாதாரண மாட்டு இனங்களுடனான இனக்கலப்பும் இவற்றின் எண்ணிக்கை குறைய காரணமாக இருந்தது.

இதையடுத்து பாதுகாக்கப்பட்ட இந்த யாக்குகளின் எண்ணிக்கை இறுதியாக 2008ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை வைத்து தற்போது 10,000 வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அச்சுறுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் தற்போதும் இடம்பெற்றுள்ளது.

  1. பனிச்சிறுத்தை (Snow leopard)

மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதி மலைகளில் காணப்படும் இந்த பனிச்சிறுத்தைகள் எந்த வகை உயிரினம் என இன்னும் துல்லியமாக சொல்லப்படாத நிலையில் பெரிய பூனை வகையை சேர்ந்தவை என்று பொதுவாக கூறுகின்றனர்.

மத்திய ஆசியாவில் இருக்கும் உயரமான மலைப்பாறைகளில் கடல் மட்டத்திற்கு மேல் 3000 முதல் 5500 மீட்டர்களுக்கு இடைப்பட்ட உயரத்தில் வாழ்கின்றன. 27 முதல் 54 கிலோ வரை எடை உடையவை. உடலின் நீளம் 75 முதல் 130 சென்டிமீட்டர் வரை இருக்கும். அதே அளவு வாலின் நீளமும் இருக்கும்.

குளிர்காலத்தின் இறுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈன்றெடுக்கக் கூடியவை. பொதுவாக 2 அல்லது 3 குட்டிகள் தான் ஈன்றெடுக்கின்றன. குட்டிகள் 18 முதல் 22 மாதங்கள் வரை தாயுடன் இருக்கும். ஆயுட்காலம் 15 முதல் 18 ஆண்டுகள். உயிரியல் பூங்காக்களில் 20 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழ்கின்றன.

Video – Nat Geo Wild

கோடை காலங்களில் கடல் மட்டத்திலிருந்து 2700 மீ முதல் 6000 மீ உயரமான மலை பகுதிகளிலும், குளிர் காலங்களில் கடல் மட்டத்திலிருந்து 1200 மீ முதல் 2000 மீ உயரமான மலை பகுதிகளிலும் வாழ்கின்றன. பெரும்பாலும் ஆடுகள், முயல்கள், சிறிய பறவை இனங்கள் என வேட்டையாடம் இவை தன்னை விட 3 மடங்கு பெரிய விலங்குகளையும் வேட்டையாடும் திறன் பெற்றவை. இறை கிடைக்காத சமயங்களில் இறந்த விலங்குகளின் அழுகிய உடல்கள், உள்ளூர் இறைச்சி கடைகளில் வீணடிக்கப்படும் மாமிசம் முதலியவற்றையும் உண்ணக் கூடியவை.

இறுதியாக 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி குத்து மதிப்பாக காடுகளில் 3,500 முதல் 7,000 வரையிலான பனிச்சிறுத்தைகளும், உலகளவில் வன உயிரியல் பூங்காக்களில் 600 முதல் 700 பனிச்சிறுத்தைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பனிச்சிறுத்தைகள் 1972 முதல் அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

  1. நீலத்திமிங்கலம் (Blue Whale)

உலகில் தற்போது வாழ்ந்து வரக்கூடிய அதே சமயம் அழிந்து வரக்கூடிய மிகப்பெரிய உயிரினம் நீலத் திமிங்கலம் (Blue whale). இது கடற்பாலூட்டி வகையை சேர்ந்தது. சராசரியாக 80 முதல் 100 அடி (25 முதல் 32 மீ) நீளமும் 150 டன் எடையும் கொண்டது.

இதுவரை கணக்கிடப்பட்டதில் நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன். 17ஆம் நூற்றாண்டுகளில் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரமாக இருந்த நீலத்திமிங்கிலங்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து கடல்களிலும் காணப்படும் இவை தனியாகவோ, சிறிய கூட்டமாகவோ வலம் வரும். இவற்றின் தோல், நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். கர்ப்பகாலம் 10 – 12 மாதங்கள். ஒரு பிரசவத்தில் ஒரு குட்டி மட்டுமே ஈனும்.

குட்டி பிறக்கும் போதே 2 டன் எடை இருக்கும். குட்டிகள் முதல் ஏழு மாதங்கள் வரை நாள் ஒன்றுக்கு சுமார் 400 லிட்டர் பாலைக் குடிக்கும். 200 டன் எடை வளரும். ஒரே வயதுடைய ஆண் திமிங்கிலத்தைவிட பெண் திமிங்கிலம் அதிக நீளம் கொண்டது.

Video – Nat Geo Wild

இதன் நுரையீரல் 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்குப் பெரியது. இதயம் 600 கிலோ எடை இருக்கும். ரத்தக் குழாய்கள் ஒரு மனிதன் நீந்திச் செல்லும் அளவுக்கு பெரியது. நாக்கு மட்டும் 3 டன் எடை இருக்கும். வாழ்நாள் கிட்டத்தட்ட 80 முதல் 90 வருடங்கள்.

‘க்ரில்’ எனும் கடல்வாழ் உயிரினங்களை விரும்பி சாப்பிடும். முதிர்ந்த திமிங்கிலங்கள், ஒரு நாளில் 4 முதல் 8 டன் க்ரில்களை உட்கொள்ளும். கடலில் காணப்படும் சின்னச் சின்ன இரைகளைக் கூட இவற்றின் வாயில் இருக்கும் பலீன் எனும் சல்லடை போன்ற அமைப்பினால் வடிகட்டிப் பிடித்துவிடும்.

கொழுப்பு மற்றும் எண்ணெய்க்காக மனிதர்களால் வேட்டையாடப்பட்டு இந்த இனமே தற்போது அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 1966 ஆம் ஆண்டு முதல் ‘சர்வதேச திமிங்கில அமைப்பு’ உருவாக்கப்பட்டு நீலத் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  1. ஓர்க்கா திமிங்கலம் (Orca)

ஓர்க்கா அல்லது கொலைகாரக் திமிங்கலம் என அழைக்கப்படும் இவை டால்பின் இனத்தை சேர்ந்தவை. டால்பின் இனங்களில் அளவில் மிகப்பெரியது இதுவே. இந்த ‘ஓர்க்கா’ திமிங்கலங்கள் கடல் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது. அதே சமயம் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

இந்த ஓர்க்கா திமிங்கலங்கள் மீன்கள், சீல்கள், கடல் சிங்கங்கள் மற்றும் திமிங்கலங்களை வேட்டையாடி உண்கின்றன. இரையின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள எதிரொலியைப் பயன்படுத்துகின்றன. இவை எழுப்பும் ஒலியானது எதிரே செல்லும் மற்ற மீன்கள் மற்றும் திமிங்கலங்களின் மீது பட்டு ஒலி அலைகளாக எதிரொலிக்கின்றன. அந்த ஒலி அலைகளை கிரகித்து அது எந்த வகையான இரை எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு கும்பலாக வேட்டையாடுகின்றன.

அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்திலும், சாதாரணமாக மணிக்கு 10 முதல் 16 கிமீ வேகத்திலும் செல்லும். உலகில் உள்ள அனைத்து கடல்களிலும் காணப்படும் இவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறது.

ஆண் ஓர்க்கா திமிங்கலங்கள் 30 அடி நீளமும், பெண் ஓர்க்கா திமிங்கலங்கள் 26 அடி நீளமும் வளரும். ஆண் திமிங்கலம் அதிகபட்சம் 7,500 கிலோ எடையுடனும், பெண் திமிங்கலம் அதிகபட்சம் 5,500 கிலோ எடையுடனும் இருக்கும்.

Video – National Geographic

இந்த ஓர்க்கா திமிங்கலங்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் 5 முதல் 30 திமிங்கலங்கள் இருக்கும். அதில் ஒரு பெரிய ஆண் திமிங்கலமும், பல பெரிய பெண் திமிங்கலங்களும், பல குட்டித் திமிங்கலங்களும் இருக்கும்.

பெரிய குழுக்களில் இரண்டோ, மூன்றோ பெரிய ஆண் திமிங்கலங்கள் இருக்கும், சில சமயம் பெரிய குழுக்களிலுள்ள திமிங்கலங்கள் தனி குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிரிந்தும் செல்லும். பெண் திமிங்கலங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே குழுவிலேயே இருக்கும். ஆனால் ஆண் திமிங்கலங்களோ குழு விட்டு குழு மாறிக்கொண்டே இருக்கும்.

12 முதல் 16 வயதுக்குள் இணை சேரும் பருவத்தை அடையும் இவற்றின் கர்ப்பகாலம் 12 மாதங்கள். ஒரு பிரசவத்தில் ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது. சுமார் 2 வயது வரை குட்டிக்கு பால் கொடுக்கின்றன. மேலும், பல ஆண்டுகள் தாயின் அரவணைப்பிலேயே குட்டிகள் வாழ்கின்றன. இந்த காரணத்தினால் 3 முதல் 6 ஆண்டுகள் இடைவெளி விட்டே குட்டி போடுகின்றன.

இனப்பெருக்க கால அளவு, கடல் மாசுபாடு, மீன் பிடிப்பதால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கலியில் ஏற்படும் மாற்றம், திமிங்கல வேட்டை உள்ளிட்ட பல காரணங்களால் அருகி வரும் இந்த ஓர்க்கா திமிங்கலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Article By MaNo