Cinema News Specials Stories

படத்துறையரசி பள்ளத்தூர் பாப்பா!

Manorama

தமிழகத்தின் நெல் விளையும் தஞ்சையிலிருந்து கலை விளைவிக்க பிறந்தவர் தான் கோபிசாந்தா. கோபிசாந்தா என்ற பெயரை அவரே மறக்கும் அளவுக்கு நாடகத்துறை அவருக்கு தந்த பெயர் மனோரமா. அதையும் மறக்கும் அளவுக்கு திரைத்துறை அவருக்கு தந்த பெயர் ஆச்சி.

மனோரமா பிறந்தது தஞ்சாவூர்; அவர் நகரத்தாருமில்லை; ஆனால் அவருக்கு ஆச்சி என்று எப்படி பெயர் வந்தது? மனோராமா சிறுவயதில் இருக்கும் போது அவரது அப்பா, அவருடைய அம்மாவின் தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரது அம்மா, அவரைக் கூட்டிக்கொண்டு காரைக்குடி பக்கம் பள்ளத்தூர் பக்கம் குடியேறி பலகாரம் செய்து விற்று அதனால் வந்த வருமானத்தில் அவரை ஆறாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.

பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆச்சி சூழல் காரணமாக ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை; ஆச்சி தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் வருமானத்துக்காக நாடகத்துறையில் சேர்ந்தார். அங்கு அவரை பள்ளத்தூரிலிருந்து வந்த சிறுமி என்பதால் ‘பள்ளத்தூர் பாப்பா’ என்று செல்லமாக அழைத்தார்கள்; நாடக இயக்குனர் திருவேங்கடம் அவருக்கு மனோரமா என பெயர் வைத்தார். சினிமாவுக்கு வந்த பின்னர், மனோரமா காரைக்குடி பக்கம் என்பதால் எல்லோரும் ஆச்சி என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் ‘வைரம் நாடக சபா’ நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் புதுக்கோட்டையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி.ஏ.குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்து கொண்ட இராசேந்திரன் தனது ‘எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்’ சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.

மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்பு எம்.ஆர்.ராதா அவர்கள் தனது நாடக சபாவில் நடத்தி வந்த ஒரு நாடகத்தை அவரது தம்பி எம்.ஆர்.பாப்பாவுடன் சேர்ந்து படமாக தயாரித்தபோது அதில் ஒரு முக்கிய வேடத்தில் மனோரமா நடித்தும் அந்த திரைப்படமும் பாதியில் நின்றதால் கடைசியாக கவிஞர் கண்ணதாசன் இயக்கிய சொந்த திரைப்படமான ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படமே மனோரமாவின் முதல் திரைப்படமாக அமைந்தது.

The Best Films of Manorama - Rediff.com movies

இந்த படத்தில் அவர் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார்; ஆரம்பத்தில் ஆச்சிக்கு தயக்கமும் வருத்தமும் இருந்தது; இதுவரை நடித்த படங்கள் வெளிவரவில்லை; கதாநாயகி ஆக வேண்டிய நாம் நகைச்சுவை நடிகை ஆவதா என யோசித்தார். ஆனால் கவிஞர் கண்ணதாசன் ஆச்சியிடம், “கதாநாயகியா நடிச்சா மூணு நாலு வருஷம் தான் நிலைக்க முடியும். ஆனா, நகைச்சுவை பாத்திரமா இருந்தா நீங்க நடிச்சிட்டே இருக்கலாம்” என்றார்.

அவர் சொன்னது போல ஆச்சி 1000 திரைப்படங்களில் தென்னிந்தியாவின் ஐந்து முதலவர்களோடு நடித்து கின்னஸிலும் இடம் பிடித்துள்ளார். நடிகர் திலகத்துக்கு ஜோடியாக ஞானப்பறவை படத்திலும் நடித்தார். தில்லானா மோகனாம்பாளில் ஜில்ஜில் ரமாமணியாக நடிகர் திலகத்துக்கே சவால் கொடுத்து நடித்திருப்பார்.

அவர் ஏற்று நடிக்காத பாத்திரமே இல்லை எனலாம். சவால் படத்தில் ஆண்வேடத்தில் ரவுடியாக நடித்து இருப்பார். வாழ்வே மாயம், நடிகன் படங்களில் கொஞ்சம் சறுக்கினாலும் தவறாக முடிந்துவிடும் மாதிரியான பாத்திரங்களை நேர்த்தியாக கையாண்டு இருப்பார். சின்னக்கவுண்டரில் காமெடி, குணச்சித்திரம் என வெளுத்து வாங்கி இருப்பார்.

Karan Bali on Twitter: "Nagesh and Manorama! “@ProductionsAvm: Reliving the  old days http://t.co/FHx7WuJpE1”" / Twitter

அவர் நல்ல பாடகியும் கூட கருந்தேள் கண்ணாயிரம், ஸ்ரீராகவேந்திரா, சூரியகாந்தி, அவன் அவள் அது, பாட்டி சொல்லை தட்டாதே, மஞ்சள் மகிமை இந்த படங்களில் அவர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தவை.

ஆரம்பத்தில் வருமானம் சவால்; அதன் பிறகு வாய்ப்புகள் சவால்; பின்னர் தொடர் தோல்விகள் சவால் என அத்தனை சவால்களையும் கடந்து தன்னம்பிக்கையால் முன்னேறி திரைத்துறையின் அரசியாகி என்றும் நீங்கா நினைவுகளோடு இருக்கும் பள்ளத்தூர் பாப்பாவுக்கு சூரியன் FM-ன் வாழ்த்துக்கள்… லவ் யூ ஆச்சிம்மா…

Article by RJ Stephen

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.