Specials Stories

அமைதி கொண்டது அடையாற்றின் அடையாளம் !!!

எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் மருத்துவ உலகம் இப்பொழுது பேரதிர்ச்சியில் உறைந்துள்ளது என்றால் அது மிகையாகாது…

தனது வாழ்நாள் முழுவதிலும் புற்றுநோயை அழிக்க அரும்பாடு பட்டவரின் மறைவு மருத்துவ உலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகையும் தவிப்பில் ஆழ்த்தியுள்ளது…

கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக புரிந்த மருத்துவ சேவை இன்று ஓய்வு பெற்றுள்ளது…

பல உயிர் வாழ மருத்துவம் புரிந்த கரங்கள் இன்று ஓய்வடைந்தது..

பலரின் தேவைக்காக ஓடிய கால்கள் இன்று ஓரிடத்தில் ஓய்ந்து விட்டது…

அறுவை சிகிச்சைகளில் இமைக்காமல் விரிந்த கண்கள் இன்று நிரந்தரமாக மூடியது…

புற்றுநோயை ஒழிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த இதயம் தனது துடிப்பை அடக்கிக்கொண்டது…

அர்ப்பணிப்பும், உழைப்பு மற்றுமே வாழ்வில் நம்மை உயர்த்தும் என்பதை சொல்லி கொண்டிருந்தவர் அந்த சொல்லிற்கு உதாரணமாகி அமரராகி விட்டார்…

மருத்துவர் செல்வி சாந்தா அவர்கள்…

பலருக்கும் பரிச்சயமான இந்த பெயர்… பலரும் உயிர் வாழ காரணமான பெயர்… நீங்க நல்ல இருக்கனும் டாக்டர் என பல வாழ்த்துகளை பெற்ற ஒரு பெயர்… இனி இல்லை என்று, இன்று திரும்பும் இடமெல்லாம் ஒலிக்கையில் மனம் சற்று கணத்துக்கிடக்கிறது…

யார் இந்த சாந்தா..? அப்படி என்ன செய்து விட்டார்..? வாருங்கள் அவர் வாழ்ந்த வாழ்வையும், பலருக்கு அவர் தந்த வாழ்வையும் சற்று நினைவு கூர்வோம்…

தன்னலம் இல்லாமல் பொதுநலத்திற்கு உழைத்தவரை இந்த உலகம் என்றும் நினைவில் கொள்ளும்… அந்த நினைவை வளர்க்க மருத்துவர் சாந்தா அவர்களின் வாழ்நாளிற்கான நினைவுகூறல் இந்த கட்டுரை.

1927 ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பிறந்த சாந்தா, மருத்துவத்தின் மீது கொண்ட தீராத காதலால் சென்னையில் தனது மருத்துவ படிப்பை முடித்த சாந்தா ஒரு வருடம் கனடாவில் மருத்துவ பணியை புரிந்தார்.. பின்னர் மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னையில் அரசு மருத்துவராக பணியில் அமர்ந்தார்.

இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை உறவினராக கொண்ட குடும்பத்தில் உதிர்த்த இந்த மருத்துவ விஞ்ஞானி தன்னை அர்ப்பணித்து கொண்டது புற்றுநோய் துறையில்… புற்றுநோயினால் ஏராளமான உயிர்கள் பறிபோய் கொண்டிருந்ததை கண்டு, தனது மருத்துவ படிப்பு முடிந்து புற்றுநோய் பற்றியும் அதன் மருத்துவ முறைகளையும் கற்றார்..

அந்த காலத்தில் அனைத்து நோய்களும் மருத்துவ துறைக்கு சவாலாக இருந்தாலும், புற்றுநோய் என்பது உயிர்கொல்லி நோயாகவே இருந்தது.. முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பலரும் இறந்து போவதை கண்டு மருத்துவ உலகம் செய்வதறியாமல் திகைத்து நின்றது…

சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் புற்றுநோயால் மக்கள் மடியும் துயரத்தை போக்க சிகிச்சை மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டார்…

இதை அறிந்த சாந்தா அவர்கள், தனது அரசு பணியை உதறிவிட்டு, முத்துலட்சுமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்…

இவரின் ஆர்வத்தை கண்ட முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், சாந்தாவை புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி என்னும் Resident Medical Officer பணியில் அமர்த்தினர்…

1954 ல் 12 படுக்கைகளுடன் ஒரு குடிசை போட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாந்தா என்ற 2 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த சிகிச்சை மையம் தான் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை அடையாறில் அமைத்துள்ள கேன்சர் இன்ஸ்டிடியூட்.

இணைந்தது முதல், இந்த உலகை விட்டு மறைந்தது வரை அந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் மருத்துவ தேவைக்காகவும் அரும்பாடு பட்டவர் சாந்தா அவர்கள்…

பணியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகள் ஊதியம் இல்லையென்றாலும் அதற்காக சளைத்திடாத இவர், உலகம் முழுவதும் அளிக்கப்பட்ட புற்றுநோக்கான சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, அது இங்குள்ள மக்களும் பெற வேண்டும் என உறுதி கொண்டு உழைத்தார்…

ஒரு நூற்றாண்டின் ஆக சிறந்த மனிதர்களுள் ஒருவரான சாந்தா, உள்ளூரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிகிச்சை மையத்தை, உலகத்தரத்திற்கு கொண்டு சென்றார்…

புற்றுநோய் அகராதியில் குணப்படுத்த இயலாது என்ற சொல்லிற்கு பதிலாக குணபடுத்த இயலும் என்ற சொல்லை வைத்தவர் மருத்துவர் சாந்தா…

புற்றுநோய் வந்துவிட்டால் உயிர் போவதை தவிர வேறு வழி இல்லை.. மரணம் நிச்சயம்.. சிகிச்சை இல்லை என்ற பயம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் புற்றுநோய் என்பது உயிர்கொல்லி நோயல்ல, அதன் தாக்குதலில் இருந்து குணமாக இயலும் என்ற நம்பிக்கையையும், அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தியவர் இவர்…

திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடிப்பதை தவிர்த்தால், அதன்மூலம் உண்டாகும் விழிப்புணர்வு  புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் என திரைத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தவர் இவர்..

உலகில் எங்கேனும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அறிமுகம் செய்து வைப்பதிலும், மக்களுக்கு அது கிடைக்க வேண்டுமென்பதிலும் அதீத அக்கறை கொண்டிருந்தவர் இவர்.

1980ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையின் இயக்குநராக பணியமர்த்தப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனையை உலகளவில் பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன் பெறும் மையமாகவும் மாற்றினார்.

உலக சுகாதார மையத்தின் Advisory Committee யாக 2005ம் ஆண்டு வரை இருந்த சாந்தா அவர்கள், உலகின் பல அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு புற்றுநோய்க்கான ஆய்வு அறிக்கைகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சமர்ப்பித்தார்.

புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும், லிம்பாய்டு நியோபிளாசியாஸ் பற்றிய INDO-US கூட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்தார் மருத்துவர் சாந்தா.

1955ல் தொடங்கி, அவரின் இறுதி நாள் வரை மருத்துவ சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இவர்  திருமணம் செய்துகொள்ளவில்லை.

தமிழக அரசின் அவ்வையார் விருதை முதலில் பெற்ற பெண்மணி என்ற பெருமையும் இவரை சாரும்…

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகசேசே போன்ற உயரிய விருதுகளை பெற்றவர் இவர் விருதுகளை விரும்பாதவர்… இவர் மறுத்த பல விருதுகளும் உண்டு என்பதும் இவருக்கான விருதே…

வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றிய இந்த நிமிர்ந்த குன்று இறுதி மூச்சு வரை தனது புற்றுநோய் சிகிச்சை மையத்திற்க்காகவே உழைத்தது..

மூச்சு திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த நேரத்திலும், ஓய்வெடுக்க செல்லும் முன், நன்கொடையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வேலையையும், மருத்துவமனையின் தேவை என்ன, அதற்கு என்ன செய்யவேண்டும் என்ற விவாதத்தையும், அடுத்தடுத்த பொறுப்புகளில் இருபவருக்கான பொறுப்புகளை வழங்குவதையும் முடித்து விட்டே சென்றார்..

சிகிச்சை மையத்தை விட்டு சென்றவர் அதற்கு பிறகு அங்கு திரும்பவில்லை…அவரின் ஆசை படியே அவரின் இறுதி மூச்சு வரை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு உழைத்து உயிர் விட்டார்…

அடையாறின் இரண்டாவது ஆலமரம் என்ற அடையாளமாக போற்றப்படுபவர் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது 93ம் வயதில் இயற்கை எய்தியுள்ளார்…

கடந்த 67 ஆண்டுகளாக அவரின் மூச்சோடு கலந்திருந்த அடையார் புற்றுநோய் நிறுவனம், அவரின் சுவாசம் இன்றி தவிக்கின்றது… உடன் பணியாற்றியவர்களும், கற்றோரும், உயிர் பிழைத்தோரும் அவரை போற்றி கொண்டிருக்கையில் அவர் வாழ்ந்த கட்டிடங்களும் மரங்களும் மௌனத்தை அவருக்கு அஞ்சலியாக செலுத்தி கொண்டிருந்தது…

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்ற வள்ளுவனின் வாக்கை தனது வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றிய ஒப்பற்ற மருத்துவர், செல்வி சாந்தா அவர்கள்…

பலர் வாழ,

உயிர் வாழ்ந்த மனிதியை,

வாழும் வரையில் போற்றுவோம்…