Cinema News Specials Stories

இசை அரக்கன் சந்தோஷ் நாராயணன்!

Sa-Na

2011 வரை ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை புதிய சிந்தனைகள், முயற்சிகள் என துடிப்புடன் வந்த இளைஞர்கள் 2012-ல் புரட்டிப் போட்டனர்.

2012ல் அட்டக்கத்தி, பிட்சா, 2013ல் சூது கவ்வும், 2014ல் மெட்ராஸ் என அட்டகாசமான படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. இளம் இயக்குநர்கள் கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

மேற்கூறிய படங்கள் அனைத்தும் அந்தந்த இயக்குநர்களின் தனித்துவத்துடன் வித்தியாசமானதாகவும், பார்வையாளர்களை கவரக்கூடியதாகவும் இருந்தன. அனைத்துமே வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன. மேலும் இந்த படங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான ஒரு காரணமாக இசையும் இருந்தது. மேற்கூறிய படங்கள் அனைத்திற்கும் இசையமைப்பாளர் ஒருவர் தான், இசை அரக்கன் சந்தோஷ் நாராயணன்.

அட்டக்கத்தியில் சென்னை கானா இசை அற்புதமாக இருந்தது. Horror திரைப்படமான பிட்சாவில் புதுமையான இசையுடன் திகிலான பாடல்கள் கேட்பவர்களை கட்டிப்போட்டது. சூது கவ்வும் ஒரு கடத்தல் படத்திற்கான பாணியிலேயே இல்லாமல் வித்தியாசமாக இருந்த போது இசை அப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.

அட்டக்கத்தியில் ஆசை ஓர் புல்வெளி பாடல்கள் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பிட்சாவில் ‘ராத்திரியை ஆளும் அரசன்’ , ‘எங்கோ ஓடுகின்றாய்’ பாடல்கள் திகில் நிறைந்ததாகவும் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்களாகவும் இருந்தது, மேலும் ‘மோகத்திரை’ பாடல் இன்றுவரை காதலர்களால் ரசிக்கப்படுவதாகவும் உள்ளது. அதே போல் சூது கவ்வும் திரைப்படத்தின் BGM அந்த சமயத்தில் பலரது மொபைல் ரிங் டோனாக இருந்தது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான Music Experiment செய்து அதில் வெற்றி கண்டார். அவர் இசையமைத்த படங்களில் அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்.

கானா பாலா பிரபலமானதற்கு மிக முக்கிய காரணம் சந்தோஷ் நாராயணின் இசை. அட்டக்கத்தி படத்தில் ‘ஆடி போனா ஆவணி’ , ‘நடுக்கடலுல கப்பல இறங்கி’ கானா பாடல்கள், பிட்சா படத்தில் ‘நினைக்குதே’ எனும் Jazz பாடல், சூது கவ்வும் படத்தில் ‘காசு பணம் துட்டு மணி மணி’ கானா பாடல் என அனைத்து படங்களிலும் வித்தியாசமாக உபயோகப்படுத்தியிருப்பார்.

தொடர்ந்து இவர்களது கூட்டணியில் இன்று வரை வெளியாகும் படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் என்பது எழுதப்படாத விதியாகியுள்ளது. ஜிகர்தண்டா, மெட்ராஸ், காதலும் கடந்து போகும், இறைவி, கபாலி, காலா, மகான், சார்பட்டா பரம்பரை படங்களே இதற்கு சாட்சி.

கானா பாலாவை போல பாடகர் அந்தோணி தாசன் பிரபலமானதற்கும் சந்தோஷ் நாராயணின் இசை மிக முக்கிய காரணம். சூது கவ்வும் படத்தில் ‘காசு பணம் துட்டு மணி மணி’ , குக்கூ படத்தில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ , ஜிகர்தண்டாவில் ‘கண்ணம்மா’ , ‘பாண்டி நாட்டு கொடி’ உள்ளிட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் அந்தோணி தாசனின் ஆரம்ப காலங்களில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை.

இதுமட்டுமின்றி ராஜு முருகனின் ‘ஜிப்ஸி’ , மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ , வெற்றி மாறனுடன் ‘வட சென்னை’ மற்றும் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்கள் சந்தோஷ் நாராயணின் இசை ஞானத்தை வெளிக்கொணரக் கூடியவை.

இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மிக முக்கிய படங்களாகவும், சமூக பிரச்னைகளை பேசும் படங்களாகவும் இருக்கும். அந்த படங்களுக்கேற்ப பாடல்களும் புரட்சிகரமானதாக இருக்கும். மெட்ராஸ் படத்தில் இடம்பெற்ற ‘சென்னை வட சென்னை’ , பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற ‘நான் யார்’ பாடல் , கபாலி மற்றும் காலா படங்களில் இடம்பெறும் பாடல்கள் , கர்ணன் படத்தில் ‘உட்ராதீங்க யப்போவ்’ , ஜிப்ஸி படத்தில் ‘Very very bad’ உள்ளிட்ட பாடல்கள் இதற்கு உதாரணம்.

இசையமைக்கும் படங்களுக்கேற்ப அந்த படத்தின் கதை களத்தை தெரிந்து கொண்டு அந்த மண் சார்ந்த இசையை உருவாக்குவதே சந்தோஷ் நாராயணனின் சிறப்பு. குறிப்பிட்ட படங்களுக்காக குறிப்பிட்ட மண் சார்ந்த இசைக்கலைஞர்களையும் தனது படங்களில் பயன்படுத்தி அங்கீகாரம் அளிக்கக் கூடியவர். அதற்கு உதாரணம் தான் கர்ணன் படத்திம் முதல் பாடல். கண்டா வர சொல்லுங்க பாடலில் தமிழ் சினிமாவுக்கு தெரியாத இசைக்கலைஞர் ‘கிடக்குழி மாரியம்மாள்’ அவர்களை பாட வைத்தார் பெரிய அளவில் வரவேற்பையும் பெற வைத்தார். இவையனைத்திற்கும் காரணம் இசை மீதும் இசைக் கலைஞர்கள் மீதும் மண் மீதும் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு இருக்கும் காதல் மட்டுமே.

சந்தோஷ் எனும் பெயருக்கேற்ப இசை ரசிகர்களை தனது இசையால் தொடர்ந்து சந்தோஷப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By MaNo

About the author

MaNo