Specials Stories

இன்தமிழ் பேசும் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா!

Solomon-Pappaiah

கிடைக்கப் பெற்ற தமிழ் இலக்கண காலத்தைக் குறிக்க தொல்காப்பியரின் பெயர் சொல்லும் நாம், காலங்கள் கடந்து தமிழ் தொண்டாற்றிய பலரை நினைவு கொள்கிறோம்.

இலக்கணத்திற்கு நன்னூலார், அற இலக்கியத்திற்கு அவ்வையார், திருவள்ளுவர், இதிகாச நூலுக்கு கம்பர், நவீன இலக்கிய தொடக்கத்திற்கு பாரதியார் என சங்க காலம் தொட்டு டிஜிட்டல் காலம் வரை பலரை கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் தமிழ் சிறப்பு சொல்லும் மதுரை மண்ணின் மைந்தராய், மக்கள் மனதில் தமிழ் பேராசிரியராய் திகழும் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்களை நினைவில் கொள்ளாமல் தமிழ் பெருமையைப் பேச முடியாது.

வீட்டிற்கு ஒன்பதாவது குழந்தையாக பிறந்து, மில் தொழிலாளியான தந்தையின் வருமானம் போதாமல், நண்பர்களின் உதவியோடு பள்ளிக் கல்வி முடித்தார் சாலமன் பாப்பையா அவர்கள். மதுரை தியாகராஜர் கல்லூரியின் முதுகலை பட்டப்படிப்பை முதல் முதலாக துவங்கிய போது அதில் சேர்ந்தார்.

1960-களில் தமிழ் மேடைகள் இவரை ஆரத் தழுவியது. தமிழ் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்றி, பின்னர் தமிழ்த்துறை தலைவராகவும் பதவி வகித்தார். கல்லூரி மேடை நாடகங்கள் பல எழுதினார்.

அந்த காலத்தில் பல தமிழ் இலக்கிய அறிஞர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் அறிவும், சமூக சிந்தனைகளும் ஒன்றிணைய இவரது பேச்சில் ஆளுமை வெளிப்பட்டது. மாணவர்களைக் கவரும் வகையில் பேசும் இவரது இயல்பான தொனி, மாணவர்களை மட்டுமின்றி உலகத்தமிழ் மக்கள் அனைவரையும் ஈர்த்தது.

நாட்டு நடப்பு, பண்பாட்டு சிறப்பு என சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை இவர் ஒப்பிட்டு பேசும் போது, அடுத்து என்ன சொல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, அவர் பேச்சு நகைச்சுவை கலந்த சிந்தனை வேள்வியாக சிறந்து விளங்குகிறது.

பெரியவர்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருந்த பட்டிமன்றத்தை “அன்பு தாய்மார்களே! அருமை பெரியோர்களே! இனிய குழந்தைகளே!” என்று தொடங்கி பட்டிமன்றத்தை இளைஞர்கள், குழந்தைகள் வரை கொண்டு சேர்த்த ஆளுமை, சாலமன் பாப்பையா.

சங்கத்தமிழின் வளமையைச் சாமானிய மக்களுக்கென எளிமைப்படுத்தி 12,000 பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளுக்கு தலைமைத் தாங்கி இன்றும் நம் மனதில் உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கும் தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021 ஆம் ஆண்டு பெற்றார்.

பட்டிமன்ற அரங்குகளில் மக்களை நகைச்சுவை பேச்சில் கவர்ந்தவர், தமிழ் திரைப்பட உலகிலும் தன் நடிப்பில் நகைச்சுவை சேர்த்து மிலிர்ந்தார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ், 2007 ஆம் ஆண்டு சிவாஜி: தி பாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

86வது அகவையில் தமிழைத் தன் பேச்சில் கொண்டு, தமிழ் உணர்வைத் மூச்சில் கொண்டு பட்டிமன்ற அரங்கிலும் மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ள பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை வாழ்த்துகிறது சூரியன் பண்பலை.

Article By RJ Karthik