Specials Stories

பால் நிலா ஸ்வர்ணலதா !!

இசைக்கோர் அரசி ஸ்வர்ணலதா !!!!..

ஒரு இனிய குரல் என்னவெல்லாம் செய்யும் ?
உயிரை உருக்கி பல உணர்வுகளை கிளறும் !
பல ஞாபகங்களை மீட்டு கொண்டு வரும் !
கவலைகளை மறக்கச்செய்யும் !
எண்ணங்களை மீட்சி அடைய வைக்கும் !

ஆனால் இவையெல்லாம் தாண்டி இருக்கும் இடம் மறந்து , செய்யும் வேலை மறந்து , வாழும் யுகம் மறந்து, அகவை மறந்து, வெயில் மறந்து, மழை மறந்து இப்படி எல்லாமும் மறந்து ஒரு குரல் நம்மை லயிக்க செய்யுமானால் அது இசை அரசி ஸ்வர்ணலதாவின் குரலாய் மட்டுமே இருக்க முடியும் .

Playback singer Swarnalatha passes away- The New Indian Express

பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களில் , இரவு நேர தனிமையின் நீட்சியில் , டீ கடைகளில் , திருமணங்களில் , மகிழ்வான தருணங்களில் , மனம் சோர்ந்து நிற்கும் வேளைகளில் , வெற்றியில் , தோல்வியில் இப்படி எல்லாவற்றிலும் கலந்து நிற்கும் குரல் இவரது குரல்.

1987 ஆம் வருடம் MSV அவர்களது இசையில் நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல் 27 ஆண்டு கால திரை பயணத்தில் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி உள்ளது. முதன் முதலில் MSV அவர்களிடம் பாடல் வாய்ப்புக்காக சென்றபோது “பால் போலவே ” என்ற பாடலை பாடி தான் வாய்ப்பு கேட்டாராம் இந்த பால்நிலா குரலுக்கு சொந்தக்காரர்.

அதன் பிறகு பல பாடல்களை பாடியிருந்தாலும் இசைஞானியின் இசையில் இவர் பாடிய ” மாலையில் யாரோ மனதோடு பேச ” என்ற பாடலும் , சின்னத்தம்பி படத்தில் வரும் “போவோமா ஊர்கோலம்” என்ற பாடலும் தான் இந்த கேரளத்து இசை தேவதையின் பெயரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது. எந்த மொழி பாடலாயினும் தன் சொந்த மொழி போல் பாவித்து பாடும் திறன் இவரது தனி சிறப்பு . பல தேசம் தாண்டி பல ரசிகர்களை பெற்றிருக்கும் இந்த குரலுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவித்தது நம் அரசு .

இவரது குரலில் “திருமண மலர்கள் தருவாயா” பாடலை கேட்கும் பொழுதுகளில் நம் உள்ளங்களில் ஒரு பூ பூத்திருக்கும் !

“ஆட்டமா தேரோட்மா” பாடலை கேட்கும் வேளைகளில் நம் உள்ளம் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் !

இவர் குரல் “மல்லிகை மொட்டு மனசை தொட்டு” என ஆரம்பிக்கும் போதே நம் மனதை பல எண்ணங்கள் தொட்டு சென்றிருக்கும் !

“என்னுளே என்னுளே” என வானொலிகளில் உருகும் வேளையில் நம் எண்ணங்களை சிறை பிடித்திருக்கும் இவரது குரல் !

“புல்லாங்குழல் பூங்குழலே” என கசியும்போது நம் மனதிலும் கண்ணோரங்களிலும் ஈரம் கசியும் !

மொத்தத்தில் மோனாலிசா ஓவியத்தை போன்றது தான் இவரது குரல் நம் உணர்வுகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு. மினி பஸ் பயணங்ககளில், தோற்று சோர்ந்த வேளைகளில் , காதலின் வெற்றியில் , வெறுமையின் எல்லையில் , இரவின் தனிமையில் இப்படி ஏதோ ஒரு வேளையில் வானொலியில் ஒலிக்கும் பாடலின் குரல் உங்களை ஆறுதல் படுத்துவதாய் தோன்றினால் கூர்ந்து கவனியுங்கள் அது ஸ்வர்ணலதாவின் குரலாய் மட்டுமே இருக்க முடியும் .

Article by RJ Dharshini