Specials Stories

2021-ல் திரையரங்குளில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் !!!

திரையரங்குகளில் மக்களை துள்ளிக்குதித்து கொண்டாட வைத்த நிறைய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தது. அவற்றுள் மக்களை உற்சாகப்படுத்திய சிறந்த ஐந்து படங்களை பற்றிய பதிவுதான் இது.

மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயின் 64-வது படமான மாஸ்டர், தளபதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது. முற்றிலும் மாஸ் கமர்ஷியலாக அமைந்த மாஸ்டர், தளபதி விஜயின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான போது பாக்ஸ் ஆபீஸில் பல புதிய சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், நாசர் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக இப்படத்தில் அனிருத் இசையில் அமைந்த வாத்தி கம்மிங் பாடல் உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களையும், பிரபலங்களையும் துள்ளாட்டம் போட வைத்தது.

அண்ணாத்த

உலகெங்கிலுமுள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சம்பவமாய் அண்ணாத்த படம் அமைந்தது. ரஜினியை கிராமத்து வேடத்தில் பார்க்க, ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் அந்த காத்திருப்புக்கு விடை கூறியிருக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தை ஆழமாக கூறியிருக்கும் இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் Family Entertainer ஆக அமைந்தது.

சிறுத்தை சிவா எழுதி இயக்கியுள்ள இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பூ, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் அமைந்த “அண்ணாத்த அண்ணாத்த” பாடல் பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது வாழ்நாளில் பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன்

தனது கிராமத்தின் வளர்ச்சிக்காகவும், கிராம மக்களின் எழுச்சிக்காகவும் போராடும் கர்ணன் எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் எனும் நடிப்பு அசுரன் வாழ்ந்திருக்கிறார். ஏற்கனவே மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் கர்ணன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கும் மேலான ஒரு சிறந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பெரிய பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நடித்த நடராஜன் சுப்பிரமணியம், சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். ஒட்டு மொத்தத்தில் கர்ணன், சமூகத்திற்கு தேவையான கருத்தை ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்த ஒரு சிறந்த திரைப்படம்.

டாக்டர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் ராய், யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த வருடத்தின் ஒரு சிறந்த டார்க் காமெடி திரைப்படமே டாக்டர். பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில் அவர் தான் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை அதிகம் சிரிக்க வைப்பார். ஆனால் டாக்டர் திரைப்படத்தில் ஒரு Serious-ஆன கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்து, மற்ற கதாபாத்திரங்களை வைத்து காமெடி காட்சிகளை நெல்சன் அமைத்துள்ளார்.

இப்படத்தில் அனிருத்தின் பாடல்களும், Background Music-உம் சினிமா ரசிகர்களாலும் விஜய் ரசிகர்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. வழக்கமான இன்ட்ரோ பாடல், டூயட் பாடல் எதுவுமில்லாமல் தனக்கே உரிய பாணியில் தனித்துவமான திரைக்கதை அம்சம் மூலம் திரையரங்குகளை சிரிப்பலையில் மிதக்க வைத்தார் இயக்குனர் நெல்சன்.

மாநாடு

கடைசி நிமிடம் வரை படம் வெளிவருமா வராதா என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு கொடுத்து, சர்ப்ரைஸாக வெளிவந்து சூப்பர் ஹிட்டாக சொல்லி அடித்த திரைப்படமே மாநாடு. ஆத்மன் சிலம்பரசனின் ஒரு சிறந்த Comeback திரைப்படமாக மாநாடு கொண்டாடப்படுகிறது. Time Loop திரைக்கதையை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, திரைக்கதைக்கு தத்ரூபமாக பொருந்தி இருக்கிறது. சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கும் மாநாடு பாக்ஸ் ஆபிஸிலும் பல சாதனைகளை படைத்தது.