Specials Stories

தமிழ் கடலில் கண்டெடுக்கப்பட்ட வைர 💎முத்து 🦪 (வைரமுத்து) !!!

மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் பச்சைப் போர்வை போர்த்தி படுத்து இருக்கும் தேனி மாவட்டத்தின் ,வடுகப்பட்டி கிராமத்தில் ,1953 ஜூலை 13 அன்று வயல்வெளிகளில் முளைத்த நெல் மணிகளில் ஒன்று மட்டும் கவிதையாய் முளைத்தது. முளைத்த அந்த கவிதைக்கு வைரமுத்து என்று பெயர் சூட்டினார்கள் .அப்போது யாரும் நினைக்கவில்லை அடுத்த அரை நூற்றாண்டுக்கு தமிழை ஆளப்போகும் கவிராஜன் இவர் தான் என்று.

வரப்புகளில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சிறுவன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து தமிழை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொண்டிருந்த போது, தனது 19வது வயதில் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான “வைகரை மேகங்கள்” புத்தகத்தை கவியரசு கண்ணதாசன் அணிந்துரையுடன் வெளியிட்டார். கவிஞன் என்று ழைக்கப்படுபவன் வாழ்க்கையில் காதல் வரவில்லை என்றால் அது கவிதை தொழிலுக்கே அபத்தம் ஆகிவிடும் என்ற இலக்கணம் அறிந்த வைரமுத்து, “பொன்மணி” என்ற பெண்மணியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பொன்மணி அன்போடு... வைரமுத்துவின் மனைவிக்கு அவரது தோழி எழுதிய கடிதம்!

1980-ஆம் வருடம் கவிஞனின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு, காரணம் அந்த ஆண்டு தான் முதன் முதலாக கவிதை எழுதிக்கொண்டிருந்த வைரமுத்துவின் பேனா, முதன் முதலாக திரைப்படத்துக்கு பாடல் எழுதத் தொடங்கியது. பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் அத்தனை பொழுதுகளிலும் பட்டி தொட்டி உள்ளிட்ட தமிழ் விரும்பிய, இசை நேசித்த, அத்தனை உள்ளங்களிலும், இல்லங்களிலும் வாசம் வீசி போனது. அடுத்த ஆறு ஆண்டுகள் தனது இசைத் தோழன் இசைஞானியுடன் இணைந்து கவியரசு வைரமுத்து எழுதிய பாடல்கள் ஏராளம் தாராளம் .

புதிய வார்த்தைகளை, புதிய வடிவங்களை, தமிழ்த் திரையில் பாடல் மூலம் பதியம் போட்ட இந்த இசை கூட்டணியில் 1985-ல் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் பாடல்கலுக்காக தனது முதல் தேசிய விருதை பெற்றார். அடுத்த ஆண்டு ‘புன்னகை மன்னன்’ படத்தில் இசைஞானியும் கவியரசும் இணைந்து பணியாற்றியதே அவர்கள் கூட்டணியில் திரைக்கு வந்த கடைசி படம்.

ரோஜா படத்தில் பாடல் எழுதி தனது கவிதை வாசத்தை உலகம் முழுக்க பறக்கவிட்டார் வைரமுத்து. அந்தப் படத்தின் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலுக்கு மீண்டும் ஒரு தேசிய விருது .

சங்கத் தமிழை சங்கீதத்துக்கு கொண்டுவந்தது, விஞ்ஞானத்தை பாட்டுக்குள் போட்டு பூட்டி வைத்து அதை வீதி முழுக்க தேரோட்டி போல இழுத்து வைத்தது , இலக்கியத் தமிழை இதயத்துக்கு கொடுக்க வைத்தது ,
பாமரன் பாஷையை பாடலுக்குள் பேச வைத்தது என வைரமுத்துவின் அயராத தமிழ் பணிக்காக ஏழு முறை தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, பாவேந்தர் விருது உள்பட இந்தியாவின் பத்மபூஷன் ,பத்மஸ்ரீ விருதுகள் என கவியரசு வைரமுத்து வாங்கிய விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

கோவை பாரதியார், மதுரை காமராசர், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் சிறப்பு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் வைரமுத்து. ‘வைகறை மேகங்கள்’ தொடங்கி ‘நாட்படுதேரல்’ வரை அவர் எழுதிய புத்தகங்களும், கவிதை தொகுப்புகளும், கட்டுரைகளும், புதினங்களும் நிறைய.

Vairamuthu - Wikipedia

புதிய வார்த்தைகளை கவிதை சாயம் பூசி மனதுக்குள் பதியம் போட்ட வைரமுத்து என்ற கவிதை உழவன் தமிழின் அடையாளமாக , கவிதையின் உச்சமாக, இளம் கவிஞர்களின் ஆதர்ச புருசனாக, தமிழ்த் தாயின் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article by RJ K.S. Nathan