Specials Stories Suryan Explains Videos

தமிழில் வரவேற்பைப் பெற்று வரும் Graffiti கலை!

GRAFITTI என்பது Hiphop கலாச்சாரத்தில் இருந்து உருவான ஓவியக்கலை.

கிராஃபிட்டி மற்றும் கிராஃபிட்டோ என்ற சொற்கள் இத்தாலி வார்த்தையான கிராஃபியட்டோ-வில் (“கீறப்பட்டது”) இருந்து உருவானதாகும். சுவற்றில் கீறி உருவாக்கப்படும் எழுத்துக்கள், ஓவியங்கள் என்ற பொருளை கொண்டவை. சுவர் ஓவியங்களின் தொடக்கமாக குகைகளின் சுவர்களில் காணப்படும் கற்கால ஓவியங்கள் இருக்கின்றன. அதில் பெரும்பாலான ஓவியங்கள் வன வாழ்வு முறை மற்றும் வேட்டையாடுதலை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

நாகரிகம் உருவான பிறகு சுவர்களில் கூர்மையான பொருளை வைத்து கீறி கல்வெட்டுக்களில் எழுத்துக்கள் மற்றும் ஓவியங்களை வரலாற்று சான்றுகளாக பதிந்து வைத்தனர். நாளடைவில் சுண்ணக்கட்டி, நிலக்கரி போன்றவையும் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டன. இவையே பிற்காலத்தில் கரும்பலகையாகவும், சிலேட்டுகளாகவும், நோட்டுப்புத்தகங்களாகவும் பரிணமித்தன. ஆனால் Graffiti கலைக்கென பிரத்யேக பெயிண்ட் ஸ்ப்ரே டின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்றும் நம் ஊர்களில் பல்வேறு இடங்களில் சுவர் ஓவியங்கள், சுவர் விளம்பரங்கள் காணப்படுகின்றன. இது போன்று ஒரு சுவரை மையமாக வைத்து மெட்ராஸ் எனும் படமே தமிழில் வெளிவந்துள்ளது. பல சுவர் ஓவியங்கள் விளம்பரங்களை நாம் இதுவரை பார்த்து வந்திருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ஓவியங்களே, விளம்பரங்களே நம்மை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் Graffiti கலை பெரும்பாலும் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமையக் கூடியது.

Graffiti என்பது Hiphop கலாச்சாரத்துடன் இணைந்த ஒரு கலை வடிவமாகும். Hiphop கலாச்சாரத்தில் MCing, DJing, B-boying, Graffiti உள்ளிட்ட கலைப்பிரிவுகள் உண்டு. இவையனைத்தும் பெரும்பாலும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசவும், சமுதாய புரட்சிக்காகவும் பயன்படுத்தப்படும் கலை வடிவங்களாகும். மேலும் இந்த கலைகள் தற்போது அவற்றின் எல்லைகளை விரிவாக்கி உலகளவில் பரந்து விரிந்துள்ளது.

பொதுப்பார்வையில் Graffiti என்பது சட்ட விரோதமான கலையாக அறிப்பட்டு வருகிறது. உதாரணமாக Subway Surf Game-ஐ அனைவரும் விளையாடி இருப்போம். Game-ன் ஆரம்பத்தில் ஹீரோ கதாபாத்திரம் ரயில் பெட்டிகள் மீது Graffiti ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்துவிட்டு ஒரு போலீஸ் துரத்த அந்த கதாபாத்திரம் ஓடத் தொடங்கும். இப்படித்தான் இந்த விளையாட்டே ஆரம்பிக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் அதனை கவனித்திருக்க மாட்டோம். இப்படித்தான் Graffiti என்பது ஒரு சட்ட விரோதமான கலை என பிம்பப்படுத்தப்படுகிறது. நிறைய படங்களிலும் இதே போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். வெளிநாடுகளில் நகர்ப்புறங்களின் மையத்தில் காணப்படும் பெரிய பெரிய சுவர்களில், ரயில் நிலைய Platform சுவர்களில் அனுமதியின்றி Graffiti கலைஞர்கள் தங்களது ஓவியங்களை வரைந்து வந்தனர். மேலும் அரசு குற்றங்களுக்கு எதிராக மக்கள் உரிமைகளுக்கான குரலாக அவர்கள் சுவர் ஓவியங்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் பொதுமக்களிடம் பேசத் தொடங்கினர்.

குறிப்பாக மாற்று பாலினத்தோர்(LGBTQ) தங்களது உரிமையை பெறுவதற்கான ஒரு கருவியாய் Graffiti-ஐ உபயோகித்தனர். பெரிய சுவர்களில் கவர்ந்திழுக்கக் கூடிய வண்ணங்களோடும், ஓவியங்களோடும், எழுத்துக்களோடும் காணப்படும் Graffiti மக்களால் எளிதில் கவனிக்கப்பட்டது. எனவே மக்களிடம் எளிதில் சென்று சேரும் கலையாக இது மாறியது. எனவே Graffiti புரட்சியாளர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.

ஆனால் நாளடைவில் மக்கள் ரசிக்கும் ஒரு கலை வடிவமாகவும் உருவெடுக்கத் தொடங்கியது Graffiti. உலகளவில் இளைஞர்கள் பலராலும் விரும்பப்படும் கலையாகவும் இது உள்ளது. இன்றைய நிலையில் Graffiti ஒரு தொழிலாகவும் உருவெடுத்து வருகிறது. தமிழகத்தில் கூட பல்வேறு Graffiti குழுக்கள் சுவர் ஓவியங்களை தங்களுக்கே உரித்தான தனி ஸ்டைலில் தன்னார்வமாகவும், தொழில் முறையாகவும் வரைந்து வருகின்றனர். நீலம் பண்பாட்டு மையத்திலும் தற்போது இந்த Graffiti கலைஞர்கள் இயங்கி வருகின்றனர்.

Hiphop கலாச்சாரத்தில் உள்ள Rap மற்றும் Dance தமிழ் மொழியில் தனித்துவமாக வளர்ந்துவிட்ட நிலையில் Graffiti கலையையும் தமிழில் பரப்புவதே இவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் Graffiti செய்து கொண்டிருந்தவர்கள், உலகின் மூத்த மொழியான நமது தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழ் மொழி ஆளுமைகளின் சிறப்புகளை ஏன் உலகளவில் கொண்டு சேர்க்கக் கூடாது என தமிழில் Graffiti ஓவியங்களை வரைய ஆரம்பித்துள்ளனர்.

இது தற்போது தமிழ் மக்கள் பலராலும் தற்போது வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது.

Article By MaNo