ஸ்ரீதேவி ….. செல்லுலாய்ட் உலகின் செல்லப் பெயர், உச்சரிக்கும் போதே உச்சந்தலைக்குள் உட்கார்ந்து கொள்ளும் அழகு பெயர் . அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்த மகாராணி. இப்படியெல்லாம் தான் ஸ்ரீதேவியை அழைக்க வேண்டும்.
நான்கு வயதில் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு போன போது ஸ்ரீதேவி என்ற அந்த குழந்தை மட்டும் போனது கோடம்பாக்கத்தின் ஸ்டுடியோக்களுக்கு. மற்ற குழந்தைகள் “ஆனா ஆவன்னா” படித்தபோது ஸ்ரீதேவி என்ற இந்த மழலை மட்டும் லைட்ஸ் ஆன், கேமரா ,ஆக்சன், போன்ற சினிமா மொழிகளை கற்றது. நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக “துணைவன்” என்ற படத்தில் நடித்த ஸ்ரீதேவி தனது 13-வது வயதிலேயே கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.
1976 கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் “மூன்று முடிச்சு” படத்தில், பின்னாளில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக விளங்கிய கமல் மற்றும் ரஜினி உடன் இணைந்து நாயகியாக நடித்த ஸ்ரீதேவியின் அடுத்தடுத்த திரைப்பயணம், சிவப்புக் கம்பளத்தில் கம்பீரமாக நடை போட்டது.
1976 இல் ‘மூன்று முடிச்சு’ படத்தில் நடித்த இதே கூட்டணி 1977 இல் “16 வயதினிலே” படத்தில் நடித்தனர் . “மயிலு ” என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியை இன்றும் மயிலாகவே தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள்.
அதே ஆண்டின் பிற்பகுதியில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ ,’வறுமையின் நிறம் சிவப்பு ‘ ,’ஜானி’ என அடுத்தடுத்து ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளிவந்த படங்கள் தமிழ் திரையரங்குகளின் திரையில் மின்னிக் கொண்டே இருந்தது. இடையிடையே வேற்று மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய படங்களிலும், இந்தி படங்களிலும் ஸ்ரீதேவி நடிக்கத் தொடங்கினார்.
1982ல் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை, ஒரு மிகச்சிறந்த நடிகையை இந்திய சினிமாவுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றே சொல்லலாம். அம்னீசியா நோயில் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண் ஒரு சிறு குழந்தையைப் போல நடித்த ஸ்ரீதேவி அத்தனை ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்து சென்று விட்டார்.
இதே படம் இந்தியில் வந்த போது அத்தனை பத்திரிகைகளும் ஸ்ரீதேவியின் நடிப்பை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்தியில் நடிகர் Jitendra உடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்த” ஹமித் வாலா” வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோன்று 1983 இல் வெளிவந்த sadma படம் பெரும் வெற்றி பெற்று இந்தி சினிமா உலகின் முடிசூடா ராணியாக மாற்றி ஸ்ரீதேவிக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற கிரீடத்தை சூட்டியது.
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை ஸ்ரீதேவியியையே சாரும்.
சினிமா வாழ்க்கை ஸ்ரீதேவிக்கு பட்டுக்கம்பளம் விரித்து ராஜ மரியாதை செலுத்தியது போல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆரம்பத்திலிருந்தே பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லாத ஸ்ரீதேவி சூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் தன் வாழ்நாளைக் கழித்தார்.
ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிகளுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு பெண் குழந்தைகள். காலங்கள் மெல்ல நகர்ந்தது. குழந்தை நட்சத்திரம், இளம் நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் என்று பல்வேறு களங்களில் பயணித்த ஸ்ரீதேவி நடுத்தர வயதை எட்டியபோது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தனது 300வது படமான “மாம்” படமே அவரது கடைசிப் படமாக அமைந்தது.
இப்படி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி, 2018 பிப்ரவரி 20ஆம் தேதி தனது குடும்பம் சார்ந்த விழாவுக்காக தன் குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு பயணமானார் அப்போது ஸ்ரீதேவிக்கு தெரியாது இனிமேல் இந்தியாவுக்கு உயிருடன் திரும்பி வர மாட்டோம் என்று.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
300 படங்கள், நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் சினிமா விருதுகள், இந்தியாவின் தேசிய விருது, அதோடு பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளை வாங்கி பல படங்களின் வெற்றிக்கு காரணமாய் இருந்த ஸ்ரீதேவி இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாக்களிலும் கவனிக்கத்தக்க நடிகையாக விளங்கினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுகிறது சூரியன் FM.
Article by K.S.Nadhan