வாழ்க்கை பிடிக்கவில்லையா? கடந்த காலங்களிலேயே தேங்கி நிற்கிறீர்களா? வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை மீண்டும் புதியதாக ஆரம்பிக்கலாம், தலைகீழாக மாற்றலாம். கடந்த காலத்தை முற்றிலுமாக கடந்து வரலாம்.
ஆம் உங்களை புறம் பேசுபவர்களை கண்டு கொள்ளாமல், உங்களை கொண்டாடுபவர்களோடு கரம் கோர்த்து முன் நோக்கி செல்லுங்கள், நிச்சயமாக வாழ்க்கை அழகாகும் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டி வாழும் உதாரணமாக விளங்குபவர் தான் சன்னி லியோன்.
சன்னி லியோனின் கடந்த கால வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. இந்திய வம்சாவளியை சார்ந்த சன்னி லியோன் கனடா மற்றும் அமெரிக்க சிட்டிசன்ஷிப் கொண்டவர். பின்னர் இந்தியாவில் குடியேறி பல்வேறு பிரச்னைகளை கடந்து வந்து தற்போது மிகப்பெரிய பாலிவுட் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு இந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சன்னி லியோனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய சன்னி லியோன் உண்மையில் தான் யார் என்பதை வெளி உலகிற்கு காட்டினார்.
அதில் பிரபலமானதை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் அறிமுகமாகும் போது சன்னி லியோன் எத்தனை எத்தனை பிரச்னைகளை சந்தித்தார் தெரியுமா? ஜிஸ்ம் 2 திரைப்படத்தின் மூலமாக கடந்த 2012ல் பாலிவுட்டில் கால் பதித்தார். பாலிவுட் முழுக்க அவரது கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டே இருந்தது.
படத்தின் Promotion மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் சன்னி லியோனுக்கு அனுமதி தரக்கூடாது என்று பலரும் கூறினர். சமூகவலைதளங்களில் பலர் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தனது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார்.
சன்னி லியோன் திரையில் வரும் போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கதையின் நாயகன் யாராக இருந்தாலும் சன்னி லியோன் நடித்ததாலேயே படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக சன்னி லியோனின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. பாடல்களுக்கேற்ப சன்னி லியோன் தனது தனித்துவமான நடனத்தால் அனைவரையும் ஈர்த்தார். பிரபல பாலிவுட் கதாநாயகிகளுக்கு இணையாக இவரது பாடல்களும், நடனமும் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் சன்னி லியோனை தேடி வந்தன. தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. 2018-ல் சன்னியின் வாழ்க்கை வரலாறு Karenjit Kaur – The Untold Story of Sunny Leone எனும் வெப் சீரிஸாக வெளியாகி ஹிட்டானது. இதற்கிடையிலும் சில சர்ச்சைகள், பிரச்னைகள் சன்னி லியோனை சுற்றிய வண்ணம் இருந்தது. சில சமயங்களில் சன்னி லியோனின் பேனர்கள் கிழிக்கப்பட்டது.
இன்றளவும் சமூகவலைதளங்களில் சன்னி லியோனை பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்த கேள்வியை அவரிடம் கேட்ட போது, “இணைய விமர்சனங்களை நாம் படிக்கவும் கூடாது, தடுக்கவும் கூடாது, அப்படி செய்தால் தவறு செய்பவர்களை நாம் ஊக்குவிப்பது போல் ஆகி விடும். நம் வாழ்வில் யார் முக்கியம் என்பது நமக்கு தெரியும்.
அவர்கள் நம் வாழ்வில் முக்கியமானவர்கள் அல்ல. நமக்கு சமைத்து கொடுத்து, நம் குழந்தைக்கு டயாபர் மாட்டி விடுபவர்கள் அல்ல. அதனை அப்படியே விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
இப்படி தெளிவான மனநிலையுடன் கடந்த காலத்தையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி விட்டு தன்னை நேசிக்கும் ரசிகர்களுடன் முன் நோக்கி சென்று கொண்டிருக்கிறார் சன்னி லியோன்.
சமீபத்தில் தனது பெயரை பச்சை குத்திய ரசிகரை பார்த்து ஆச்சரியத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதே போல் கர்நாடகாவில் கறிக்கடைக்காரர் ஒருவர் சன்னி லியோன் ரசிகர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்து அந்த செய்தி வைரலானது.
இப்படி விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் அவருடைய ரசிகர்களால் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார் சன்னி லியோன். அதற்காக எப்போதும் அவரது ரசிகர்களுக்கு நன்றியும் கூறி வருகிறார்.
ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு தொழிலதிபராகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் சன்னி லியோன்.
சன்னி-டேனியல் தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரட்டை ஆண் குழந்தைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
“நான் யார் என்பதை வெளிப்படையாக கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை. எனது கடந்த காலத்தை நான் விரும்பவில்லை. கடந்த காலத்தில் நான் எடுத்த முடிவுகளை வேறு யாரும் எடுக்கக் கூடாது.
நான் இப்போது வாழும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். எந்த சமயத்திலும் எனக்கும் மற்றவர்களுக்கும் நான் உண்மையாக இருந்தேன். இப்போது வாழ்க்கை நல்லபடியாக செல்கிறது” , சன்னி லியோன் கூறிய வார்த்தைகள் இவை.
ஆரம்பத்தில் சொன்னபடி தான், வாழ்க்கை பிடிக்கவில்லையா? கடந்த கால தவறை நினைத்து வருந்துகிறீர்களா? வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை மீண்டும் புதியதாக ஆரம்பிக்கலாம். அதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி சன்னிலியோனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.