நடிகர் சூர்யா தனது 46வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பல்வேறு கதைகளில் பல் வேறு பரிமாணத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உடையவர் நடிகர் சூர்யா.
ஆரம்ப காலத்தில் சூர்யாவிற்கு நடிப்பில் பெரிய ஆர்வம் இருந்ததில்லையாம். மிகப்பெரிய நடிகர் சிவகுமாரின் மகன் எனும் அடையாளத்தை துறந்து எட்டு மாதங்கள் ஒரு ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். பட வாய்ப்புகள் தனக்கு வந்தபோதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்து உள்ளார். நேருக்கு நேர் திரைப்படத்தில் அவர் நடிக்கும் போது அவரது வயது 22. சரவணன் எனும் இயற்பெயரைக் கொண்டுள்ள இவர் படங்களில் தனது மேடை பெயரை சூர்யா என மாற்றிக் கொண்டார்.
விஜயுடன் இணைந்து நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சூர்யாவிற்கு மீண்டும் தளபதியுடன் இணையும் வாய்ப்பு “பிரண்ட்ஸ்” படம் மூலம் கிடைத்தது. இப்படத்தில் சூர்யா மற்றும் விஜயின் கூட்டணி வெற்றிக்கூட்டணி ஆகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது. பாலா இயக்கத்தில் இவர் நடித்த நந்தா படத்திற்காக தமிழக மாநில அரசின் சிறந்த நடிகர் விருதை 2001 ஆம் ஆண்டு பெற்றார்.
2003 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனனுடன் முதல்முறை சூர்யா இணைந்தார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் பாலாவுடன் இரண்டாவது முறை இணைந்து பிதாமகன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பின் வேலு, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் போன்ற பல வெற்றிப் படங்களில் சூர்யா தொடர்ந்து நடித்தார். குறிப்பாக வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக இவர் மேற்கொண்ட உடற்பயிற்சியும் கடின உழைப்பும் நடிப்பின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் மக்களுக்கு காட்டி இருக்கும். எட்டு மாதங்கள் கடினமான உடற்பயிற்சியை மேற்கொண்டு இப்படத்திற்காக சூர்யா சிக்ஸ்பேக் வைத்தார்.
இயக்குனர் ஹரியுடன் இணைந்து நடித்த சிங்கம் படம் தான் சூர்யாவின் 25வது திரைப்படம் ஆகும். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 திரைப்படங்கள் வெளியானது. ஹரி மற்றும் சூர்யா இணைந்தாலே அது வெற்றி கூட்டணி தான் எனும் கருத்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
- Parvathy Stuns in New Photoshoot: A Look at the Indian Actress’s Beauty
- Happy Birthday to the Master of Realism: Vetrimaaran
- Bollywood actress Deepika Padukone baby bump pregnancy photoshoot
- இசைஞானியின் இசை வாரிசு!
- வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”
சூர்யாவின் கலை பணியைப் பாராட்டி 2005 ஆம் ஆண்டு தமிழக அரசு சூர்யாவிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. கஜினி மற்றும் வாரணம் ஆயிரம் திரைப்படங்களுக்காக மாநில அரசின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி பாடகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் தனது பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சூர்யாவின் 40-வது படமான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் First Look வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டனர்.
ரசிகர்கள் உற்சாகத்துடன் First Look-ஐ கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அப்படத்தின் Second Look Poster-ஐயும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டனர். சூர்யாவின் மற்ற வெற்றிப்படங்களை போல “எதற்கும் துணிந்தவன்” திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே சூர்யா ரசிகர்களின் ஆசை.
எவரும் உழைத்தால் உயர்ந்து விடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வளர்ந்து இருக்கும் நடிகர் சூர்யா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.