டன் டனக்கா… அப்படிங்குற வார்த்தைய கேட்ட உடனே உங்க மனசுல என்ன தோணுச்சு சொல்லுங்க… 90% பேருக்கு டி.ராஜேந்தர் குரல்ல, அவரோட ஸ்டைல்ல ஏய் டன் டனக்கா… ஏய் டனக்கு னக்கானு மூளைக்குள்ள ஒரு மின்னல் வந்துட்டு போய்ருக்குமே… இந்த தலைமுறை பசங்க வரை டி.ஆர் வந்து சேர்ந்துருக்காரு… அதுதான் டி.ஆர் பவர்!
80’களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை ஆக்கிரமித்தவர். ஒரு தலை ராகம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் படமே மாபெரும் வெற்றி. ஒரு வருடம் படம் ஓடுகிறது. அந்தக் கால இளைஞர்கள் இன்று வரை கொண்டாடும் ஒரு படம் என ஒரு தலை ராகத்தை சொல்லலாம்.
தொடர்ச்சியாக 1980 முதல் 1990 வரை வருடா வருடம் அவரது படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. வருடத்திற்கு 4, 5 படங்கள் வரை கூட வெளியானது. ரஜினி, கமல் பிரபலமாக இருந்த காலத்திலும் இப்படிப்பட்ட தொடர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தது என்ன தெரியுமா? டி.ராஜேந்தரின் தனித்துவம் தான்.
அவரது படங்களை பார்க்கும் போதே இது டி.ராஜேந்தர் திரைப்படம் என எளிதில் கண்டுபிடித்து விடலாம். அனைத்து படங்களிலும் சென்டிமென்ட் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக வசனங்கள், ரைமிங் வசனங்கள் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார் டி.ஆர். ரைமிங்கான வசனங்கள், வசனங்களில் இடம்பெறும் வார்த்தைகள் பார்வையாளர்களுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்தன.
மேலும் ஒரு இயக்குனராக மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல் வரிகள் என ஒரு படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தானே செய்து காண்பித்து வியக்க வைத்தார் டி.ஆர். ஏன் படத்தில் இடம் பெறும் செட்டுகளை கூட தானே வடிவமைத்தார்.
தாளம் போடுவது, மியூசிக் போடுவது, ரைமிங்காக பேசுவது என விடாமல் தொடர்ச்சியாக நாம் நிறுத்த சொல்லும் வரை பேசிக் கொண்டேயிருப்பார். அவரது மகன் சிலம்பரசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி பின்னர் கதாநாயகனாக்கினார். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக எஸ்.டி.ஆர் இருக்கிறார்.
ஆனால் இருவரையும் ஒரு சேர இப்போது பார்த்தாலும் எஸ்.டி.ஆரை விட அதிக எனர்ஜியுடன் இருப்பார் டி.ஆர். உதாரணமாக அம்மாடி ஆத்தாடி பாடலை கூறலாம். இன்றும் அவரது நேர்காணல்களை பார்த்தால் அதே எனர்ஜியுடனேயே இருப்பார். நமக்கே ஒரு குஷியாகி விடும்.
அவர் ஒரு அக்ஷய பாத்திரம் போல, அவருக்குள் இருக்கும் எனர்ஜி என்றைக்கும் குறையவே குறையாது. அதுதான் அவரது வெற்றிக்கும் காரணம். என்றென்றும் அதே எனர்ஜியுடன் தமிழ் சினிமாவில் டி.ஆர் தொடர்ந்து வலம் வர வேண்டும் என சூரியன் FM சார்பில் பிறந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.