சந்திரயான் 3 வெற்றிப் பயணம் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் சந்திரயான் திட்டத்தை பார்த்து வியந்துள்ளன. இதுகுறித்த நிறைய விஷயங்கள் சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சமயத்தில் தமிழ் மக்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான விஷயம் உள்ளது. அதாவது சந்திராயன் 1, சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றிய முக்கியமான 3 தமிழர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சந்திரயான் 1 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதவாடி கிராமத்தில் பிறந்தவர். அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். படித்து முடித்து இஸ்ரோவில் சேர்ந்து பணியை தொடங்கினார். இதுவரை 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியாவிற்காக உருவாக்கியுள்ளார். நிலவுக்கு முதன்முதலில் ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குநர். இதனால் இவர் இந்தியாவின் நிலவு மனிதன் என்று அழைக்கப்படுகிறார்.
அடுத்து நாம் பார்க்கப் போவது சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றிய வனிதா. சென்னையை சேர்ந்த இவர் பொறியியல் முடித்து இஸ்ரோவில் வன்பொருள் சோதனை மற்றும் மேம்பாட்டு துறையில் இளநிலை பொறியாளராக பணியை தொடங்கினார். கார்ட்டோசாட்-1, ஓஷன்சாட்-1 மற்றும் மேகா-டிராபிக்ஸ் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குநர். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநரும் கூட. எனவே இவர் ராக்கெட் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார்.
இறுதியாக நாம் பார்க்கப் போவது சந்திரயான் 2 திட்டத்தில் திட்ட இயக்குநராக பணியாற்றிய வீர முத்துவேல். விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர், தந்தை தெற்கு இரயில்வேயில் பணி புரிந்தார். எனவே விழுப்புரம் இரயிலெவே பள்ளியில் படித்து, தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார். பின்னர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் விண்வெளி துறையில் ஆராய்ச்சி செய்தார். அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக சேர்ந்தார். 30 ஆண்டுகள் கடுமையாக உழைத்து பல திட்டங்கள் மற்றும் பொறுப்புகளில் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சந்திரயான் இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது. அதே அளவு இந்த 3 தமிழர்களும், தமிழ் மண்ணிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.